சென்னை அடுக்குமாடி குடியிருப்புகளின் புனரமைப்பு பணிகளை விரைவில் முடிக்க அமைச்சர் ராஜ்குமார் உத்தரவிட்டார்
Share
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் திட்டப்பகுதிகளில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்புகளின் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ராஜ்குமார் பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு ப கிருஷ்ணன் ஆகியோர் நேற்று (01.07.2026) சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகிநகர் மற்றும் எழில் நகர் திட்டப்பகுதிகளில் நடைபெற்றுவரும் அடுக்குமாடி குடியிருப்புகளின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்குமார் தெரிவிக்கையில், “தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் முதல் தளம், தரை மற்றும் இரண்டு தளங்கள் என மொத்தம் 15,656 குடியிருப்புகளும், எழில் நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்கள் கொண்ட 6,000 குடியிருப்புகளும் மற்றும் எழில் நகர் சுனாமி குடியிருப்பு திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்கள் கொண்ட 2,048 குடியிருப்புகளும் என்று மொத்தமாக 3 திட்டப்பகுதிகளில் 23,704 அடுக்குமாடி குடியிருப்புகள் 188.59 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளன. இதில் சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகிநகர் திட்டப்பகுதியில் மொத்தமுள்ள 15,656 குடியிருப்புகளில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 9,152 குடியிருப்புகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள 6,504 குடியிருப்புகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எழில் நகர் திட்டப்பகுதியில் மொத்தமுள்ள 6,000 குடியிருப்புகளில், 3,232 குடியிருப்புகளுக்கான புனரமைப்பு பணிகள் ரூ.40 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எழில் நகர் சுனாமி குடியிருப்பு திட்டப்பகுதியில் மொத்தமுள்ள 2,048 குடியிருப்புகளில், 1,152 குடியிருப்புகளுக்கான புனரமைப்பு பணிகள் ரூ.8.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த புனரமைப்பு பணிகள் உரிய காலத்தில் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.















