LOADING

Type to search

இலங்கை அரசியல்

தொல்லியல் திணைக்களத்தின் உத்தியோபூர்வ சின்னத்தை மாற்றும் ஒரு முன்மொழிவை தமிழரசுக் கட்சி சமர்பித்தது

Share

வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு தொல்லியல் திணைக்களத்தால் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினைகளுக்கு நியாயமானதும், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கடசி, தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், நாட்டின் அனைத்து குடிமக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தாத தொல்லியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ சின்னம் மாற்றப்பட வேண்டும் என்பதும் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் ஒன்றாகும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரு பிரதிநிதியாக ஜனாதிபதி சட்டத்தரணி ஏ. சமந்திரன் பதில் தொல்லியல் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து, இவ்விடயங்கள் தொடர்பில் கருத்துகளை முன்வைத்துள்ளார்.

அந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் பினவரும் விடயங்களை தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் தெரிவித்து;ளளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளால் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பதில் தொல்லியல் பணிப்பாளர் நாயகம் செனரத் விக்ரமசிங்கவுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கின் நிலப்பரப்புகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து சிங்கள மக்களும் உரிமை கோரும் நிலையில், தொல்லியல் திணைக்களம் சிங்கள பௌத்தர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் பின்னணியில், கடந்த ஆண்டு அரசாங்கம் 19 சிங்கள உறுப்பினர்களைக் கொண்ட புதிய தொல்லியல் ஆலோசனைக் குழுவை நியமித்திருந்தது.

பௌத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியின் கையொப்பத்துடன், 2025 நவம்பர் 1ஆம் திகதி சனிக்கிழமை வெளியிடப்பட்ட 2460/56 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் நியமிக்கப்பட்ட இந்த தொல்லியல் ஆலோசனைக் குழுவின் பதவிக்காலம் 2025.03.10 முதல் 2027.03.09 வரை அமுலில் இருக்கும்.

தொல்லியல் திணைக்களம் இன, மத வேறுபாடின்றி செயற்படுகிறது என்ற நம்பிக்கையை தமிழ் மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமாயின், பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த திருகோணமலையிலுள்ள திருக்கோணேஸ்வரம் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள 54 வர்த்தக நிலையங்களும் அகற்றப்பட வேண்டும் என, கொழும்பில் பதில் தொல்லியல் பணிப்பாளர் நாயகம் செனரத் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பழமை வாய்ந்த திருக்கோணேஸ்வரம் ஆலய வளாகத்திலேயே 54 வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதால், பக்தர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தது.

பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், தொல்லியல் திணைக்களம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கும், வாழைச்சேனை பிரதேச சபைக்கும் எதிராகத் தாக்கல் செய்துள்ள வழக்குகளை மீளப்பெற வேண்டுமெனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரு பிரதிநிதிகளும், பதில் தொல்லியல் பணிப்பாளர் நாயகத்திடம் கோரியுள்ளனர்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நேரடியாகச் சென்று, தந்தாமலை முருகன் ஆலயம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தால் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்து, தமிழ் மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர்கள் மேலும் கோரியுள்ளனர்.

தற்போது பயன்பாட்டில் உள்ள தொல்லியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ சின்னம், பௌத்தர்களால் புனிதமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் மற்றும் சைத்திய ஆகிய சின்னங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு மதத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் அம்சங்களைக் கொண்டுள்ள இந்த உத்தியோகபூர்வ சின்னத்தில், ஏனைய மதங்களையும் இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குறியீடுகள் இடம்பெறவில்லை என்பதை பதில் தொல்லியல் பணிப்பாளர் நாயகத்திடம் நினைவூட்டிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், அனைத்து இனங்களும் மதங்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் அந்த உத்தியோகபூர்வ சின்னம் திருத்தியமைக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

திருகோணமலை, குச்சவெளி பகுதியில் 37 கிலோமீற்றர் தூரத்திற்குள் 42 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கும் தொல்லியல் திணைக்களத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அந்த இரு தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் பதில் தொல்லியல் பணிப்பாளர் நாயகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வன்னிப் பிராந்தியத்திலுள்ள குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறிமலை ஆகிய சிவன் ஆலய் உள்ளிட்ட பகுதிகளில், தமிழ் மக்கள் தமது மத வழிபாட்டு உரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கு தேவையான சட்டப் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பதில் தொல்லியல் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த காணிகள் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், மத வழிபாட்டு உரிமைக்கு எந்தவிதத் தடையும் ஏற்படாது. எனினும், நீதிமன்ற உத்தரவுகளை மீறி தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தும் அந்தப் பகுதிகளில் நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.