LOADING

Type to search

உலக அரசியல்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் துறைமுகத்துக்கு சென்ற கப்பல் மீது அமெரிக்கா குண்டுவீசியது

Share

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் துறைமுகத்துக்கு சென்ற கப்பல் மீது அமெரிக்கா குண்டுவீசியது. ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதையடுத்து அந்நாட்டின் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் சரமாரியாக தாக்கி வருகிறது. மேலும், ஈரான் துறைமுகங்களை முடக்கும் விதமாக ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை தனது முற்றுகை நடவடிக்கையை மீண்டும் நேற்று முதல் தொடங்கியது. தங்களது முற்றுகையை மீறி ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்தது. இந்த நிலையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகையை மீறி ஈரான் துறைமுகத்துக்கு செல்ல முயன்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் குராசோ நாட்டு கொடியுடன் எம்.டி. பெல்மா என்ற எண்ணெய் கப்பல் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் அந்த கப்பல் சேதமடைந்தது.இதன்மூலம் கப்பலை அமெரிக்க கடற்படை தடுத்து நிறுத்தியது.இது தொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு கூறும்போது, ஈரானின் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை மீற முயன்ற, சரக்குகள் இல்லாத எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க விமானம் தாக்குதல் நடத்தி அதைச் செயலிழக்கச் செய்தது. கப்பலின் புகைபோக்கிக்குள் ஹெல்பயர் ஏவுகணைகளைச் செலுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது. இனி அந்த கப்பல் ஈரானுக்கு செல்ல முடியாது. கடற்படை முற்றுகையை மீண்டும் தொடங்கியதில் இருந்து 2 வணிகக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் திருப்பி அனுப்பியுள்ளன. முற்றுகை முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்ய அமெரிக்க ராணுவம் விழிப்புடனும் தயார் நிலையிலும் உள்ளது என்று தெரிவித்தது.இதற்கிடையே ஈரான் மீது 5-வது நாளாக அமெரிக்க ராணுவம் தனது தாக்குதலைத் தொடர்ந்தது. நள்ளிரவில் தொடங்கிய இந்த தாக்குதல் இன்று அதிகாலை தீவிரமாக இருந்தது. தலைநகர் தெக்ரான், தெற்கு பகுதியில் உள்ள நகரங்கள் மீது சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. மேலும் வடக்கு ஈரானின் சில பகுதிகளில் முதன்முறையாக வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலையடுத்து தலைநகர் தெக்ரானில் முழுவதும் வான்பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டன. ஈரானின் கிரேட்டர் டன்ப் தீவு மீது தாக்குதல் நடந்தது. அங்குள்ள ஈரான் கடலோரப் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணை சேமிப்பு கிடங்கு மற்றும் ஏவுதளங்கள் ஆகியவை குறிவைக்கப்பட்டன. ஹோர்முஸ் ஜலசந்தி அருகே உள்ள கிரேட்டர் டன்ப் தீவு ஈரானின் முக்கிய பாதுகாப்பின் ஒரு பகுதியாக உள்ளது. அதேபோல் கெஷ்ம் தீவில் நடந்த தாக்குதலில் மீன் தொழிற்சாலை சேதமடைந்தது. அமெரிக்காவின் புதிய தாக்குதலுக்கு பதிலடியாக குவைத்தில் உள்ள அலி அல் சலேம் விமானப்படை தளத்தில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஏவுகணைகள், டிரோன்களை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியது.அதேபோல் ஜோர்டானின் அஸ்ராக் விமானப்படை தளத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களின் தகவல் தொடர்பு அமைப்புகள், ரேடார் தளம் மற்றும் எரிபொருள் கிடங்குகளைக் குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஜோர்டான் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்தபடியே உள்ளது.