LOADING

Type to search

இந்திய அரசியல்

காவேரி அணைகளை கையாளும் அதிகாரத்துடன் புதிய மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென அன்புமணி கூறினார்

Share

காவேரி அணைகளை கையாளும் அதிகாரத்துடன் புதிய மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென அன்புமணி கூறினார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: காவேரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற காவேரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க காவேரி மேலாண்மை ஆணையம் மறுத்து விட்டது. கர்நாடக அணைகளில் பெங்களூர் மாநகரின் குடிநீர் தேவைக்காக மட்டும் தான் தண்ணீர் இருப்பதாக கர்நாடக அரசு கூறியதை அப்படியே மேலாண்மை ஆணையம் ஏற்றுக் கொண்டிருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும். இந்த பொம்மை ஆணையத்தில் தமிழகத்திற்கு நீதி கிடைக்காது. தமிழ்நாட்டிற்கு காவேரியில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து முடிவெடுப்பதற்காக காவேரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கி, நேற்று வரை தமிழகத்திற்கு திறக்க வேண்டிய 28.30 டி.எம்.சி நீரில் 3.44 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டிய தமிழக அதிகாரிகள், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் திறந்து விட ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், தங்களிடம் பெங்களூரு மாநகர குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் இருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்தது. அதை ஏற்றுக் கொண்ட காவேரி மேலாண்மை ஆணையம், காவேரியில் தண்ணீர் திறப்பதில் இப்போதுள்ள நிலையே தொடரும் எனக் கூறிவிட்டது. அதனால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது. எந்த அதிகாரமும் இல்லாத காவேரி மேலாண்மை ஆணையம் நடைமுறையில் இருக்கும் வரை தமிழ்நாட்டிற்கு காவேரியில் உரிய நீர் கிடைக்காது. மழைக்காலங்களில் நிரம்பி வழியும் வெள்ள நீர் மட்டும்தான் கிடைக்கும். காவேரியில் தமிழ்நாட்டிற்கான உரிமைகளைப் பெற வேண்டுமானால், நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவேரியின் குறுக்கே கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் கட்டப்பட்டுள்ள அணைகளை கையாளும் அதிகாரம் கொண்ட பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் ஒரே தீர்வு ஆகும். இத்தகைய ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்துவது மட்டுமின்றி, இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.