கோயில் அறங்காவலர் தேர்வுக்குழுவில் அர்ச்சனா கல்பாத்தி
Share
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு பரம்பரை சாரா அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்கான குழு உறுப்பினர்களில் ஒருவராக பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை மூலம் அமைக்கப்பட்டும் இந்தக் குழுவில் இவர் இடம்பெற்றுள்ளார். மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் இக்குழுவிற்குத் தலைமை தாங்குகிறார். இந்தத் தேர்வுக் குழுவில் மொத்தம் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ப.ரா. சம்பத், ஓய்வு பெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி டாக்டர் இராமநாதன் மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுமதி ஸ்ரீ ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். கோயில்களின் நிர்வாகம், சொத்துக்களைப் பராமரித்தல் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பரம்பரை அல்லாத அறங்காவலர்களாக நியமிப்பதே இக்குழுவின் முதன்மைப் பணியாகும். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், ‘பிகில்’, ‘கோட்’ போன்ற நடிகர் விஜய்யின் பிரம்மாண்டத் திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார்.















