LOADING

Type to search

இலங்கை அரசியல்

நீதிக்குப் பதில் நிவாரணமா? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!

Share

சர்வதேச விசாரணைகளை ஏற்றுக் கொள்ளாத ஒரு நாடு சர்வதேச நாட்களை எப்படி அனுஷ்டிக்கலாம்?” இவ்வாறு கூறியிருப்பவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் சார்பாக பேசிய ஒரு பெண். அங்குள்ள ஊடகங்கள் மத்தியில் பேசும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அவ்வாறு தெரிவிப்பதற்கு காரணம், கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் கச்சேரியில் நடந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர் நினைவு நாளாகும். அந்த நாள் சர்வதேச ரீதியாக இந்த மாதம் 30 ஆம் திகதிதான் அனுஷ்டிக்கப்படுகிறது. எனினும் இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் ஆகிய ஓஎம்பி (OMP) அதனை கடந்த செவ்வாய்க் கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அனுஷ்டித்தது. அதற்கு எதிராக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புகளைச் சேர்ந்த அம்மாக்கள் யாழ் மாவட்டச் செயலக சூழலுக்குள் நின்று எதிர்ப்பு காட்டினார்கள். அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அம்மாக்களை போலீசார் பலத்தைப் பிரயோகித்து அங்கிருந்து அகற்றினார்கள். ஏற்கனவே உடலாலும் மனதாலும் நொந்துபோன பெண்களை பலத்தைப் பிரயோகித்து அகற்றியிருக்கிறார்கள். இது நடந்தபோது நீதி அமைச்சர் கச்சேரிக்கு உள்ளே காணப்பட்டார். கச்சேரிக்கு வெளியே நடப்பவற்றை அவர் கைபேசியில் நேரலையில் பார்த்ததாக ஒரு தகவல்.

அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகம் என்று அழைக்கப்படுகின்ற ஓஎம்பியை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புகள் ஏற்றுக்கொள்ளவில்லை. முதலாவதாக அந்த பெயரே ஒரு பிரச்சினை. யாரும் தாமாகக் காணாமல் போகவில்லை. அல்லது தாமாகத் தொலைந்து போகவில்லை. அவர்கள் அரசியல் காரணங்களுக்காக காணாமல் ஆக்கப்பட்டார்கள். கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள். யார் என்று  தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள். அல்லது சரணடையக் கொடுத்தவர்கள்,சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே இங்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பதுதான் பொருத்தமான வார்த்தை. அந்த வார்த்தையிலேயே அரசியல் இருக்கிறது

இந்த இடத்தில் மற்றொரு வார்த்தை அரசியலைஅதுவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களோடு தொடர்புடையது இங்கே ஞாபகப்படுத்தலாம். இது நடந்தது 2020க்கு முன்பு. நிலைமாறு கால நீதியின் கீழ்  கிழக்கில் நடந்த ஒரு கருத்தரங்கில் பாண்டிருப்பைச் சேர்ந்த முதிய அம்மாக்கள் கொஞ்சம் பேர் வந்திருந்தார்கள். நீங்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டபோது அவர்கள் தாங்கள் பாண்டிருப்பு விதவையர் சங்கம் என்று சொன்னார்கள். தமது அமைப்புக்கு அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கம் என்று பெயர் வைக்கவில்லை. பாண்டிருப்புக் கிராமம் அங்குள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்காகப் பெயர் பெற்றது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அந்த முதிய அம்மாக்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக உருவாக்கிய அமைப்புக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு என்றுகூட பெயர் வைக்க முடியாத ஒரு பாதுகாப்பு பற்ற சூழலில் காணப்பட்டார்கள்.அதாவது ஒரு அமைப்புக்கு வைக்கப்படும் பெயரே பிரச்சினையாக வரலாம் என்று பயம். இப்படித்தான் இருக்கிறது தமது உறவுகளைப் பறிகொடுத்த அம்மாக்களின் துயரம். இவ்வாறு தமது சங்கத்துக்கு பெயர் வைக்கும் விடயத்தில் கூட தற்காப்பு உணர்வோடு செயல்பட வேண்டியிருக்கும் ஒரு நாட்டில், ஐநாவில் ஒப்புக்கொண்ட பிரகாரம் நிலைமாறு கால நீதிச் செய்முறைகளின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பிற்கு அதை உருவாக்கிய காலத்தில் இருந்த ரணில்மைத்திரி அரசாங்கம்காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம்என்று பெயர் வைத்தது தற்செயலானது அல்ல.

இப்படியாக அமைப்பின் பெயரில் தொடங்கி,அந்த அமைப்பின் செயற்பாடுகளின் மீதும்  அம்மாக்களுக்கு அவநம்பிக்கை உண்டு.அந்த அமைப்பு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினத்தை யாழ்ப்பாணம் கச்சேரியில் அனுஷ்டித்தபோது அம்மாக்கள் அதற்கு எதிர்ப்புக் காட்டினார்கள்

வழமையாக கொழும்பில் நடக்கும் அந்த நிகழ்வை இம்முறை யாழ்ப்பாணத்தில் அமைச்சர்கள் சகிதம் அனுஷ்டிப்பது என்றும், அதையும் அதற்குரிய சர்வதேச நாளில் செய்யாமல் ஐந்து நாட்கள் முன்னதாக அதைச் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.பாதிக்கப்பட்ட மக்களை குறிப்பாக நிவாரணம் வழங்கும் நிகழ்வின் பங்காளிகளாக மாற்ற வேண்டும் என்றும் நன்கு திட்டமிட்டு அந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது.யாழ்ப்பாணத்தில் அம்மாக்களின் அமைப்புகள் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாளை 30 ஆம் திகதி அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வரும் ஒரு பின்னணியில்,அந்த நாளை தவிர்த்து ஐந்து நாட்கள் முன்னதாக மேற்படி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டதா?

இந்த நிகழ்ச்சி தொடர்பாக நடந்த ஓர் ஊடகச் சந்திப்பில்தான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதாவது சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ளாத ஒரு நாடு சர்வதேச தினங்களை எப்படிக் கொண்டாடலாம் என்ற கேள்வி

இது மிக ஆழமான ஒரு கேள்வி. இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் இன அழிப்பு வெளியுறவுக் கொள்கையை வெளிப்படுத்தும் ஒரு கேள்வி. போரை வெல்வதற்கு அவர்களுக்குச் சர்வதேசம் தேவை. தமிழ் மக்களைத் தனிமைப்படுத்துவதற்கு அல்லது தமிழ் மக்கள் மத்தியில் இருந்து போராட்டத்தைத் தனிமைப்படுத்துவதற்கு அவர்களுக்கு சர்வதேசம் தேவை. ஆனால் சமாதானத்திற்கு அவர்களுக்குச்  சர்வதேசம் தேவையில்லை. அதாவது பொறுப்புக்கூறும் விடயத்தில் சர்வதேச விசாரணையை,தலையீட்டை அவர்கள் ஏற்கவில்லை.

இது அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் உள்ள ஓர் அக முரண்பாடாகத் தோன்றலாம். இல்லை. அது அக முரண்பாடு அல்ல. அது மிகத் தெளிவான ஓர் இன அழிப்பு அரசியல். தமிழ் மக்களை அழிப்பதற்கு அவர்களுக்கு சர்வதேசம் தேவை. ஆனால் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு அவர்களுக்குச் சர்வதேசம்  தேவையில்லை. தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அவர்களுக்கு சர்வதேசம் தேவையில்லை. எங்கே சர்வதேசத்தை உள்ளே விட வேண்டும், எங்கே சர்வதேசத்தை எல்லையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அவர்களிடம் மிகத்தெளிவான தெரிவுகள் உண்டு. அது முழுக்க முழுக்க இன ரீதியிலான ஒரு தெரிவு

இப்பொழுது வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்திலும் அரசாங்கம் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் சர்வதேச தினத்தை கொண்டாடுகிறது.ஏன் கொண்டாடுகிறது? ஏனென்றால் சர்வதேச ரீதியாக ஓஎம்பியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதே அவர்களுடைய நோக்கம். ஓஎம்பி அரசின் முழுமையான ஆதரவோடு முன்னேற்றகரமான விதத்தில் இயங்கிவருகிறது என்று வெளி உலகத்துக்குக் காட்ட வேண்டும்.அதன்மூலம் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை உலக அளவில் பலப்படுத்த வேண்டும்.

கடந்த 25 ஆம் திகதி,பிற்பகல், யாழ் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற நிகழ்வானது அமைச்சுமட்ட அதிகாரப்பூர்வ நிகழ்வாகும்.நிகழ்வில் அமைச்சர்களும் உட்பட யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் வட மாகாண ஆளுநரும் மாவட்டச் செயலர்களும் அரச உயர் அதிகாரிகளும் பங்கு பற்றியிருக்கிறார்கள்.இந்த நிகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என்று கூறப்படுகின்ற சுமார் 352 குடும்பங்கள் கலந்து கொண்டதாக மாவட்டச் செயலகத்தின் செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவ முகாம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.நீரிழிவுப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.நீதி அமைச்சர் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று உதவித் தொகையை வழங்கியுள்ளார்.பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஒரு பகுதியினர் தங்களோடு நிற்கிறார்கள்,தங்களுடைய நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்கிறார்கள், என்று காட்ட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கும் ஓஎம்பிக்கும் உண்டு.

அதன்மூலம் அவர்கள் சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கான கோரிக்கையை மழுங்கடிக்கலாம். நீதியா? நிவாரணமா? என்று கேள்வி வரும் பொழுது ஒரு சிறு தொகையினர் நிவாரணத்தின் பின் போகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நிவாரணங்களின் பின் வருபவர்களைக் காட்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எல்லாருமே சர்வதேச விசாரணையை கேட்கவில்லை என்று கூற அரசாங்கம் முயற்சிக்கும். மேலும் ஓஎம்பியின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் முழு அளவு உதவுவதன் மூலமும், செம்மணிப் புதைகுழியை அகழ்வாராட்சி செய்யத் தேவையான நிதியை தொடர்ந்து வழங்கி வருவதன் மூலமும், உள்நாட்டு விசாரணைப் பொறி முறையின் நம்பகத் தன்மையை உலக அளவில் பலப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என்பது தெரிகிறது.

அந்த ஏற்பாடுகளைப் புறக்கணித்த, எதிர்த்த அம்மாக்கள்  மாவட்டச் செயலகத்தின் வாசலில் நடத்திய போராட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளாளர் மயூரப்பிரியன் பின்வருமாறு சமூக ஊடக வலைத்தளத்தில் எழுதியதை, இப்பொழுது அமைச்சர்களாக இருக்கும் முன்னாள் தோழர்கள் வாசித்திருப்பார்களா? “மாவட்டச் செயலகத்தின் வாசலில் உள்ள பதாகையில் தமது பிரார்த்தனைத் துண்டுச் சீட்டுக்களைபின்பண்ணி வைத்திருந்தார்கள். அதில் எவனும்,தனக்கு மூக்கு கண்ணாடி தா, வீடு தா எனக் கேட்கவில்லை.” அந்த மண்டபத்தில் வைத்துபிள்ளைக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரிய வேணுமா ? வீட்டு திட்டம் வேணுமா?” எனக் கேட்டிருந்தால் மூஞ்சியில காறித் துப்பிட்டுப் போயிருப்பாங்க