LOADING

Type to search

இலங்கை அரசியல்

அநுர அரசிலும் தொடரும் ”உள்ளே… வெளியே… அரசியல்

Share

”இலஞ்ச, ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களில் எதிர்க்கட்சிகளின் முக்கிய அரசியல்வாதிகள் அடுத்தடுத்துக் கைது செய்யப்படும் செய்திகள் தலைப்புச் செய்திகளாகி மக்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை,பரபரப்பை ஏற்படுத்துகின்ற நிலையில் அடுத்த மணித்தியாலமே கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்படுவது “இது சட்டத்தின் பலவீனமா அல்லது அநுர அரசின் மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகமா?” என்ற கேள்விகளையே எழுப்புகின்றது”

———கே.பாலா


ஒரு பிரதான கட்சி ஆட்சியில் இருக்கும் போது அதற்கு அடுத்ததான பிரதான கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும்.அத்துடன் அடுத்தடுத்த நிலைகளில் உள்ள கட்சிகள் சில அரசின் பங்காளிகளாகவும் இன்னும் சில சிறிய எதிர்க்கட்சிகளாகவும் இருக்கும்.இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சிகளாக இருப்போர் அதிலும் பிரதான எதிர்க்கட்சியாக இருப்போர் அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பர்.அதில் பிரதானமானது ”அரசியல் பழிவாங்கல்” என்ற குற்றச்சாட்டு. அதேவேளை இதே எதிர்க்கட்சியினர் ஆட்சிபீடமேறும்போது அரசாக இருந்தவர்கள் பிரதான எதிர்க்கட்சியானவுடன் அவர்கள் நடைமுறை அரசு மீது வைக்கும் பிரதான குற்றச்சாட்டும் இந்த ”அரசியல் பழிவாங்கல்” தான்.

அரசாக இருப்போர் எதிர்க்கட்சியில் தமக்கு சவாலாக இருப்போர் ,தம்மை கடுமையாக விமர்சிப்போரை இலக்கு வைத்து ஏதாவது குற்றச்சாட்டுக்களில் வழக்குகளைத் தாக்கல் செய்வதும் அதிகாரத்தைப்பயன்படுத்தி அவர்களை சிறைகளுக்குள் தள்ளுவதும் எதிர்க்கட்சியினர் இதனைப் பிரசாரமாக்கி அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிபீடம் ஏறியவுடன் தாமும் அதே வழியில் பயணிப்பதும் இலங்கை அரசியலில் எழுதப்படாத விதியாக அல்லது இதுதான் இலங்கை அரசியல் என்ற வகையில் மாறி மாறி வரும் அரசுகளினால் மாறாமல் முன்னெடுக்கப்படுகின்ற இந்த ”உள்ளே… வெளியே…”அரசியல் விளையாட்டையே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கமும் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.

மைத்திரி -ரணில் அரசு நல்லாட்சி என்ற பெயரில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து கடந்த ஆட்சியாளர்களான தங்கள் மீது அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதாகக் கூறியும் இன ,மதவாதங்களை பிரசார ஆயுதங்களாக்கியும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் வெற்றிபெற்று 18 நவம்பர் 2019 இல் ஆட்சிபீடம் ஏறிய கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கமும் மைத்திரி -ரணில் அரசாங்கத்தில் இருந்தவர்களை சிறைகளுக்குள்ளே தள்ளிக்கொண்டு மைத்திரி-ரணில் அரசாங்கத்தால் உள்ளே தள்ளப்பட்ட தம்மவர்களை ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு வழக்குகளிலிருந்து வெளியே கொண்டு வந்தது.

இவ்வாறாக கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தினால் சிறைகளிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்ட மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாகவிருந்த,பிரியங்கர ஜயரட்ன ,மஹிந்தானந்த அளுத்கமகே , இராஜாங்க அமைச்சராகவிருந்த சிவனேசத்துரை சந்திரகாந்தன் வடமத்திய மாகாண முதலமைச்சராகவிருந்த எஸ்.எம். ரஞ்சித்,மைத்ரி-ரணில் அரசாங்கத்தில் அமைச்சராகவிருந்த நளின் பெர்னாண்டோ ஆகியோர் தற்போதைய அநுரகுமார அரசாங்கத்தில் மீண்டும் கைதாகி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் உள்ளனர்

”கடந்த காலங்களில் நாட்டைக் சூறையாடிய அரசியல்வாதிகளைத் கூண்டில் ஏற்றுவோம்.கடந்த கால ஊழல்கள் களையப்படும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.” என்ற வாக்குறுதிதான் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தியின் வாக்குப்பெட்டிகளை நிரப்பிக் கொடுத்து அரசாங்கம் அமைக்க உதவியது .இவ்வாறாக ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமது பிரதான வாக்குறுதியை நிறைவேற்றுவது போன்றே , முன்னாள் ஜனாதிபதி,எதிர்க்கட்சிகளின் மூத்த தலைவர்கள்,முன்னாள் அமைச்சர்கள் அநுரகுமார அரசாங்கத்தினால் கைது செய்யப்படத் தொடங்கினர் .

எதிர்க்கட்சிகளின் முக்கிய அரசியல்வாதிகள் அடுத்தடுத்துக் கைது செய்யப்படும் செய்திகள் தலைப்புச் செய்திகளாகி மக்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை ,பரபரப்பை ஏற்படுத்தியபோதும் அந்தப் பரபரப்பின் சூடு தணிவதற்குள்ளேயே, கைது செய்யப்பட்டவர்கள் சில மணி நேரங்களிலேயே நீதிமன்றப் பிணையில் கம்பீரமாக வெளியேறும் காட்சிகள்,”இது சட்டத்தின் பலவீனமா அல்லது ஊடகங்களுக்கான அரசியல் நாடகமா?” முன்னைய அரசாங்கங்களின் உள்ளே-வெளியே விளையாட்டை அநுரகுமார அரசாங்கமும் கையில் எடுத்துள்ளதா என்ற கேள்விகளை இயல்பாகவே எழுப்பியுள்ளது.

இலஞ்ச , ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களில் எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதிகள் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டு கைதாவதும் கைதாகி அடுத்த சில நிமிடங்களில் பிணை உத்தரவோடு கைகாட்டிச் செல்லும் நிலை தொடர்வதால் இலங்கை அரசியல் களம் ஒரு ‘உள்ளே வெளியே’ விளையாட்டு மைதானமாக மாறியிருக்கிறது. ஒருபுறம் அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதாகக் காட்டிக்கொள்ள மேற்கொள்ளும் அவசரக் கைதுகள், மறுபுறம் போதிய சட்ட ஆதாரங்களின்றித் தொடரப்படும் வழக்குகளால் நீதிமன்றங்களில் அது பலவீனமடையும் நிலை.இவற்றுக்கு இடையே உண்மையான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை ஊசலாடுகிறதா அல்லது இது எதிர்த்தரப்பை அச்சுறுத்தி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப அரங்கேற்றப்படும் அரசியல் விளையாட்டா என்ற கேள்விகளும் பலமாக எழுந்துள்ளன.

அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ் இதுவரைக்கும் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் அமைச்சர்கள் ,எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள் எனப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களில் பலர் பிணைகளில் வெளியில் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.அந்த வகையில் ஐக்கியதேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க 2023 செப்டம்பரில் பிரித்தானியாவிற்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணத்திற்காக 16.6 மில்லியன் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகி ஒரு சில தினங்கள் சிறையிலடைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய எம்.பி.யுமான ரவி கருணாநாயக்க தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் நிதியை தனது தனிப்பட்ட ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கிய குற்றச்சாட்டில் கைதாகி அடுத்த மணித்தியாலமே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல போலி மருந்து இறக்குமதி ஊழல் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க புனித கல் திருட்டுக்கு உதவிய குற்றச்சாட்டுக்களில் கைதாவதும் பிணையில் விடுவிக்கப்படுவதுமாக உள்ளார் .முன்னாள்பிரதி அமைச்சர் பிரசன்ன ரணவீர கிரிபத்கொடையில் பொதுத் தேவைக்காக ஒதுக்கப்பட்ட அரச காணியை சட்டவிரோதமாக விற்பனை செய்தமை தொடர்பான குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ளார்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே 2021 இல் தரமற்ற சீன சேதனப் பசளை இறக்குமதி செய்து அரச நிதியை மோசடி செய்த குற்றச் சாட்டில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோன்று முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுடன் இணைந்து அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரப் பொருட்களுக்கு செலவிட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது .வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் முதலமைச்சராக இருந்தபோது தனது தனி செயலாளருக்கு சட்டவிரோதமாக 2.68 மில்லியன் ரூபா அரச எரிபொருள் கொடுப்பனவு வழங்கிய குற்றச்சாட்டில் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தனது அரசியல் ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக ‘ஸ்ரீலங்கன் கேட்டரிங்’ நிறுவனத்திற்குச் சொந்தமான 330,000 ரூபா பணத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க ஊவா மாகாண சபையின் 23 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் . முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்தபோது வாகனங்களை வாடகைக்கு எடுத்ததில் இடம்பெற்ற முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வர்த்தக அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 1.5 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விட்டார்.முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான் )ஆட்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கல்கிஸை பகுதியில் அமைந்துள்ள காணி தொடர்பான மோசடி ,அச்சுறுத்தல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணை வழங்கப்பட்டது

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டு,போதிய நேரடி ஆதாரங்கள் இன்மையால் நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச 2006 ஆம் ஆண்டு தகுதியற்ற முறையில் சட்டவிரோதமாக கடற்படையில் இணைந்தது மற்றும் பிரித்தானியாவின் டார்ட்மவுத் அரச கடற்படை அகடமியில் பயிற்சி பெறுவதற்காக 22 மில்லியனுக்கும் அதிகமான அரச நிதியை துஷ்பிரயோகம் செய்தமை.சட்டவிரோத காணி விற்பனை போன்ற குற்றச் சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது பாட்டியும் சட்டவிரோத காணி கொள்வனவு,விற்பனை தொடர்பில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த ஷியாமிலா பெரேரா விதிகளை மீறி 3 பேருக்கு வேலை வழங்கி, அவர்களை ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட பணிகளுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல போலி தடுப்பூசி இறக்குமதி ஊழல் தொடர்பில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை மற்றும் சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டில் கைதாகி பிணையில் வெளியில் உள்ளார்

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் சில சட்டவிரோத ஆவணங்களில் கையொப்பமிட்ட குற்றச்சாட்டில் கைதாகி பிணையில் வெளியில் உள்ளார் ,முன்னாள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க தொல்பொருள் மதிப்புமிக்க வனப்பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து சொகுசு விடுதி அமைத்த குற்றச்சாட்டில் கைதாகி பிணையில் உள்ளார், முன்னாள் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம துறைமுக அதிகார சபையின் வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியது மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைதாகி பிணையில் உள்ளார், சமிந்த விஜயஸ்ரீ எம்.பி. 2019 ஆம் ஆண்டு பண்டாரவளை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியமை, காயம் ஏற்படுத்தியமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் கைதாகி ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்படட நிலையில் மேன்முறையீடு செய்ததையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறாக அநுரகுமார அரசாங்கத்தின் இந்தக் கைது நடவடிக்கைகளைப் பார்த்தால் கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதனை அறிந்து கொள்ள முடியும். இதற்கு காரணங்களாக சட்ட ரீதியான பலவீனங்கள்,சட்டப் பிணை வழங்கும் நடைமுறைகள், ஆதாரங்களுக்கும் கைதுக்குமான கால இடைவெளி,முறையான தடயவியல் மற்றும் கணக்காய்வுச் சான்றுகள் இன்றி, வெறும் வாக்குமூலங்களை மட்டும் வைத்துக்கொண்டு கைதை மேற்கொள்வது போன்றவை இருந்தாலும் இதில் ”அரசியல்” தான் முக்கிய பங்காற்றுகின்றது

”ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல்வாதிகளைச் சிறையில் அடைப்போம்” எனத் தேர்தல் மேடைகளில் கொடுத்த வாக்குறுதி அநுரகுமார அரசாங்கத்தின் மீது பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வர பல ஆண்டுகள் ஆகும் என்பதால், மக்களைத் தற்காலிகமாகத் திருப்திப்படுத்த “கைது” என்ற உடனடிச் செய்தியை அரசாங்கம் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. பொருளாதார நெருக்கடிகள்,விலைவாசி உயர்வு மற்றும் மக்களிடையில் ஏற்படும் அதிருப்திகள் குறித்த விவாதங்கள் எழும்போது, எதிர்க்கட்சியின் முக்கிய புள்ளியைக் கைது செய்வதன் மூலம் ஊடகங்களின் கவனத்தையும் மக்களின் கவனத்தையும் திசைதிருப்புவது இலங்கையின் வழக்கமான அரசியல் உத்தி. அதனைத்தான் அநுரகுமார அரசும் கையில் எடுத்துள்ளது.

அத்துடன் எதிர்க்கட்சிகளை உளவியல் ரீதியாக முடக்கவும் இந்த கைதுகள் பயன்படுத்தப்படுகின்றன. நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படுகிறதோ இல்லையோ, ஒரு அரசியல்வாதியைக் கைது செய்து, பொலிஸ் வாகனத்தில் ஏற்றி, சிறை உடையில் ஊடகங்களில் காட்டுவது அவரது மக்கள் பிம்பத்தையும் எதிர்க்கட்சியின் அரசியல் வீரியத்தையும் பலவீனப்படுத்தும் உத்தியாகப் பார்க்கப்படுகிறது. இவ்வாறாக அவசர கதியில் மேற்கொள்ளப்படும் அரைகுறைக் கைதுகள், இறுதியில் சந்தேகநபர்களுக்குச் சாதகமான பிணை உத்தரவுகளாக மாறி, அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்குகின்றன.

போதிய ஆதாரங்களின்றி சட்டப்பிரிவுகளைப் பலவீனமாகக் கையாள்வதும், நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறுவதும், அநுரகுமார அரசாங்கத்திற்கு உண்மையில் குற்றவாளிகளைத் தண்டிக்கும் எண்ணம் இல்லை என்பதையே உணர்த்துகிறது.பொருளாதாரப் பின்னடைவு மற்றும் விலைவாசி உயர்வால் ஏமாற்றமடைந்துள்ள மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க, “நாங்கள் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம்” என்ற போலிப் பிம்பத்தைக் கட்டியெழுப்ப அரங்கேற்றப்படும் இந்தக் ”கைது-பிணை” ”உள்ளே-வெளியே” நாடகம், இறுதியில் மக்களை ஏமாற்றும் மற்றுமொரு அரசியல் சூழ்ச்சியே.அநுரகுமார அரசாங்கத்தின் இந்த ‘உள்ளே வெளியே’ ஆட்டம், தற்காலிகமாக அவர்களுக்கு அரசியல் இலாபத்தைக் கொடுக்கலாம் ,ஆனால் மக்கள் எதிர்பார்ப்பது ஊடகப் பரபரப்புகளுக்கான “கைது நாடகங்களை” அல்ல. தவறிழைத்தவர்களுக்கு சட்டப்படி கிடைக்கும் “உண்மையான தண்டனையைத்” தான்.