கிருஷ்ண தேவராயராக கிச்சா சுதீப் நடிக்கிறார்
Share
கிருஷ்ண தேவராயராக கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கிறார். பான் இந்திய நட்சத்திரம் கிச்சா சுதீப், தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஒன்றை அளித்துள்ளார். விஜயநகரப் பேரரசின் மாபெரும் மன்னனான ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ‘தேவராயா’ என்று புதிய திரைப்படத்தில் அவர் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இத்திரைப்படத்தின் பிரம்மாண்ட ‘தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது. வரலாற்றுப் பின்னணி கொண்ட திரைப்படங்களில் நடிப்பதற்கு தனக்கிருந்த தயக்கம் குறித்து கிச்சா சுதீப் இதற்கு முன்பு பலமுறை பேசியுள்ளார். படத்தின் பிரம்மாண்டம் அவருக்குப் பயத்தை தரவில்லை. மாறாக, நிஜமாக வாழ்ந்த ஒரு வரலாற்று நாயகனின் பாத்திரத்தை ஏற்கும் போது, அவரது வரலாற்றை எந்தவித தவறும் இல்லாமல் மிகத் துல்லியமாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்வே அவரது தயக்கத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது.
ஆனால், தற்போது அந்தத் தயக்கங்களை உடைத்து, இந்திய வரலாற்றின் மிக முக்கிய மன்னரான ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். நடிகர் சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ள பிரத்யேக தலைப்பு படத்தின் பிரம்மாண்டத்தை எதிர்பார்க்க வைக்கிறது. பாரம்பரிய அரச உடையில், நவரத்தினங்கள் மற்றும் முத்துக்கள் பதிக்கப்பட்ட பிரம்மாண்ட கிரீடத்துடன் சுதீப் கம்பீரமாகத் தோன்றும் முதல் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. இந்த ஆரம்பக்கட்ட காணொளியில் சண்டைக் காட்சிகளோ அல்லது வசனங்களோ எதுவும் இடம்பெறவில்லை. மாறாக, சுதீப்பின் முகபாவனைகளும், அவரது கம்பீரமான நிற்கும் தோரணையும் மட்டுமே அந்த மாமன்னரின் ஆளுமையை அப்படியே பிரதிபலிக்கிறது.
கௌரா ஹரி கே-வின் பின்னணி இசையும், காலகட்டத்தை அப்படியே பிரதிபலிக்கும் கலை இயக்கமும் படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. படக்குழுவினர் இந்தத் திரைப்படத்தை “வரலாற்றை செதுக்கிய ஒரு பேரரசு. ஒரு சகாப்தத்தை வரையறுத்த ஒரு மன்னன். காலத்தைக் கடந்து வாழும் ஒரு ஜாம்பவான்” என்ற மூன்று வரிகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
கிச்சா சுதீப் கதாநாயகனாக (ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் வேடத்தில்) நடிக்கும் இத்திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம், டிஜி விஸ்வ பிரசாத், பிரசாத் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
சுப்ரியான்வி பிக்சர் ஸ்டுடியோ சார்பில் பிரியா சுதீப் வழங்கும் இப்படத்திற்கு, சுஜித் கொல்லி தலைமை நிர்வாகத் தயாரிப்பாளராகவும், கௌரா ஹரி கே இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். மிகப்பெரிய பட்ஜெட்டில், பான்-இந்திய திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்த வரலாற்றுத் காவியம் 2027-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.















