ஒன்ராறியோவின் முதலாவது செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுத் துறைக்கான இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமனம்.
Share
சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில், ஒன்ராறியோ மாகாணத்தின் முதல்வர் மாண்புமிகு டக் ஃபோர்டு அவர்கள், மாண்புமிகு அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்களை முதன்முறையாக செயற்கை நுண்ணறிவும் அதனை ஏற்றுக்கொள்ளுதலுக்குமான இணை அமைச்சராக நியமித்துள்ளார். இது பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்புக்கும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான அவரது பங்களிப்புக்கும் அளிக்கப்பெற்ற அங்கீகரமாகும். இந்தப் புதிய அமைச்சகம், தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகின்றன என்பதையும், நமது பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், எதிர்கால சிறந்த வாய்ப்புகளுக்குத் தயாராகவும் ஒன்ராறியோவுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் தலைவர்கள் தேவை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்கள் 2018ஆம் ஆண்டில் இருந்து மூன்றாவது முறையாக ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் தொகுதியின் ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருவதுடன், மேலும் 2023ஆம் ஆண்டில் ஒன்ராறியோவில் அமைச்சரவைப் பதவியை வகித்த முதல் தமிழ் அரசியல்வாதி என்ற வரலாற்றையும் படைத்தார். உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் வான்புகழ் திருக்குறளின் மீது மீண்டும் ஒருமுறை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் மூலம் அவர், தனது தமிழ் மரபுடனான அவரின் ஆழமான தொடர்பையும் வெளிப்படுத்தியிருந்தார்.
அவர் முன்னதாக 2023ஆம் ஆண்டில் போக்குவரத்துக்கான இணை அமைச்சராகவும், 2024ஆம் ஆண்டில் வீட்டுவசதிக்கான இணை அமைச்சராகவும், சமீபத்தில் சுகதாரா இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
அவரது குறிப்பிடத்தக்க சாதனைகளில், 2023-இல் போக்குவரத்துத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒற்றைக் கட்டண’ (One Fare) திட்டம், ஸ்காபரோவில் முதன்முதலாக அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி, வீடின்மை, போதைப் பயன்பாடு அல்லது உளநல சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவும் சிகிச்சையும் அளிக்கும் வகையில் ‘வீடின்மை மற்றும் போதை பயன்பாட்டில் சிக்கியோருக்கான மீட்பு சிகிச்சை மையங்களை’ (HART Hubs) அமைத்தது போன்றன குறிப்பிட்டதக்கன.
செயற்கை நுண்ணறிவு தொடர்ந்து நவீனமடைந்து பல ஒன்ராறியோவாசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், செயற்கை நுண்ணறிவுத் துறையில் புதிய வாய்ப்புகளைப் பெறவும், பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும், மாறிவரும் உலகளாவிய சூழலில் போட்டித்தன்மையுடன் இருக்கவும், உரிய கட்டுப்பாட்டு வழிமுறைகளை வகுப்பதிலும், ஒன்ராறியோவவின் வளர்ச்சிக்கு உதவுவதில் விஜய் தணிகாசலம் அவர்கள் தலைமைத்துவம் இன்றியமையாததாக அமையும்















