LOADING

Type to search

சினிமா

பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை படத்தை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்

Share

இந்திய இசை உலகின் மாபெரும் ஆளுமையான பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.

இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். கவுதம் தின்னுரி இயக்க அனிருத் இசையமைக்கிறார். விழாவில் பேசிய கமல்ஹாசன், இந்த பாத்திரத்தில் நடிப்பது ராஷ்மிகாவுக்கு எவ்வளவு பெரிய சவால் என்பதை உலகப் புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சனுடன் ஒப்பிட்டுப் பேசினார். “மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் ஒரு நடிகருக்கு எந்த அளவுக்கு பதற்றமும் அழுத்தமும் இருக்குமோ, அதே போன்ற ஒரு பதற்றம் உங்களுக்கும் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், உங்களை வழிநடத்த ஒரு சிறந்த குழு இருக்கிறது, அவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.” மேலும், தன் வழக்கமான நகைச்சுவை பாணியில் பேசிய அவர், “என்னால் கூட இந்த பாத்திரத்தை செய்திருக்க முடியாது, என் தாடியை எடுத்தால் கூட இந்த பாத்திரத்தில் என்னால் நடிக்க இயலாது. நான் எத்தனை வேடங்கள் வேண்டுமானாலும் போடலாம், ஆனால் எம்.எஸ். அம்மா அவர்களின் கண்களில் இருக்கும் அந்தப் பேரன்பையும் கருணையையும் உங்கள் கண்களில் கொண்டு வந்துவிட்டால், நீங்கள் பாதியைக் கடந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். துணிச்சலோடு இதைச் செய்யுங்கள்” என்று ராஷ்மிகாவுக்கு தைரியம் ஊட்டினார். எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் கலைப் பயணம் குறித்துப் பேசிய கமல், “சினிமாவோ அல்லது அரசியலோ நாட்டை இணைப்பதற்கு முன்பே, தனது இசையால் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒன்றிணைத்த ஒரு கலாச்சார சக்தி அவர். இந்தியாவின், குறிப்பாக தென்னிந்தியாவின் மிக முக்கிய அடையாளமாகத் திகழ்ந்த அவர், அந்த காலத்திலேயே சமஸ்கிருதம், இந்தி எனப் பல மொழிகளில் பாடிய ஒரு அகில இந்திய சூப்பர் ஸ்டார்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். விழா மேடையில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா பேசினார். “இப்போது என் இதயத்தில் இருக்கும் ஒரே உணர்வு நன்றியுணர்வு மட்டும்தான். எம்.எஸ். அம்மா அவர்களின் குரலில் ஒரு தனித்துவமான தெய்வீக சக்தி இருக்கிறது. அதைக் கேட்கும்போது கடவுளின் முன்னிலையில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அம்மா, உங்களது வாழ்வின் ஒரு சிறிய பகுதியாக இருக்க என்னை தேர்ந்தெடுத்ததற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். எனது நூறு சதவீத உழைப்பையும், சிறந்த நடிப்பையும் இதற்கு வழங்குவேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.” என்று ஆனந்த கண்ணீருடன் பேசினார்.