முகநூல்பதிவுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை தமிழ் – முஸ்லீம் உறவுகளைப் பாதிக்குமா?
Share
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!
மட்டக்களப்பைச் சேர்ந்த அனோஜன் என்ற தமிழருக்கு சவுதி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தண்டனையானது இனங்கடந்து மதங்கடந்து இலங்கையில் உள்ளவர்களை ஒன்றிணைத்திருக்கிறது. அந்த மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்று மனசாட்சி உள்ள எல்லாருமே சவுதி அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். அனோஜன் பிறந்த கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம்களும் உட்பட முஸ்லிம்கள் மத்தியில் உள்ள படித்தவர்கள்,மதகுருக்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சட்டச் செயற்பாட்டாளர்கள்,அரசியல்வாதிகள்… என்று வெவ்வேறு தரப்புகளைச் சேர்ந்தவர்கள் வழங்கப்பட்ட மரண தண்டனையை நீக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்—- முகநூலில் அனோஜன் எழுதியது சாமானிய மனோநிலையில் இருந்து எழுதப்பட்ட ஒரு வெறுப்பு குறிப்பு. ஏற்கனவே எழுதப்பட்ட வெறுப்புக் குறிப்பு ஒன்றின் எதிர்வினை அது. அனோஜன் எழுதிய வெறுப்புக் குறிப்புக்கு அவர் மன்னிப்புக் கேட்டு விட்டார். அங்கே அவர் பொறுப்புக் கூறத் தொடங்குகிறார். அதற்குப் பிறகும் அவருடைய தலையை வெட்ட வேண்டுமா?

இனத்தால் மதத்தால் மொழியால் இப்பொழுதும் பிளவுண்டிருக்கும் ஒரு சிறிய தீவை ஒரு மரண தண்டனை தற்காலிகமாகவேனும் ஒன்றிணைத்திருக்கிறதா? அதுவும் கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ்ப் பெண்பிள்ளையான மைத்திரேயி ராமகிருஷ்ணனுக்கு எதிராக சிங்கள முகநூல் உலாவிகள் இனத் துவேசத்தைக் கக்கிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்?
மட்டக்களப்பைச் சேர்ந்த அனோஜன் என்ற தமிழருக்கு சவுதி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தண்டனையானது இனங்கடந்து மதங்கடந்து இலங்கையில் உள்ளவர்களை ஒன்றிணைத்திருக்கிறது. அந்த மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்று மனசாட்சி உள்ள எல்லாருமே சவுதி அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். அனோஜன் பிறந்த கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம்களும் உட்பட முஸ்லிம்கள் மத்தியில் உள்ள படித்தவர்கள், மதகுருக்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சட்டச் செயற்பாட்டாளர்கள்,அரசியல்வாதிகள்… என்று வெவ்வேறு தரப்புகளைச் சேர்ந்தவர்கள் வழங்கப்பட்ட மரண தண்டனையை நீக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இந்த விடயத்தில் ஒரே நிலைப்பாட்டோடு காணப்படுகின்றன.தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லா கட்சிகளுமே இந்த விடயத்தில் ஒரே நிலைப்பாட்டோடு காணப்படுகின்றன. அவை தமிழ்த் தேசியவாத கட்சிகளாக இருந்தாலும்சரி தமிழ் தேசிய வாதத்துக்குள் வராத கட்சிகளாக இருந்தாலும்சரி அனைவரும் இந்த விடயத்தில் ஒன்றாகத் திரண்டு நிற்கிறார்கள்.
அப்படித்தான் சிங்கள மக்கள் மத்தியிலும் மரண தண்டனையை நீக்கக் கோரி இலங்கைத் தீவில் உள்ள பெரும்பாலானவர்கள் ஒன்றாகத் திரண்டிருப்பது மிக அரிதான ஒரு நிகழ்வு. அரசாங்கமும் எதிர்க் கட்சிகளும் இதுவிடயத்தில் ஏறக்குறைய ஒரே நிலைப்பாட்டோடு காணப்படுகின்றன.
எனினும் அது தற்காலிகமானது என்பதைத்தான்,சஜித்தை அனோஜனின் தாயார் சந்தித்தபின் வெளிவந்த செய்திகளின் மீதான வாதப் பிரதிவாதங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அனோஜனின் உறவினர்களும் அவர்களுக்கு உதவும் செயற்பாட்டாளர்களும் சஜித் பிரேமதாசாவை சந்தித்தபோது, சஜித் அனோஜனோடு தொலைபேசியில் உரையாடியதாகவும் அந்த உரையாடலை ஸ்பீக்கரில் விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த உரையாடலில் அனோஜன் தெரிவிக்கும் கருத்துக்கள் சர்ச்சைக்குரியவை. அதைவிட சர்ச்சைக்குரியது, அப்படிப்பட்ட ஒரு உரையாடலை பகிரங்க வெளியில் விட்டது. நாட்டின் உயர்நிலை அரசியல்வாதிகளில் ஒருவராகிய சஜித் பிரேமதாச இந்த விடயத்தில் மேலும் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டிருக்க வேண்டுமா? எதுவாயினும் சஜித் பிரேமதாச அனோஜனுக்கு நல்லது செய்ய முயற்சித்தார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
ஒரு மரணத் தீர்ப்புக்கு எதிராக இச்சிறிய தீவில் உள்ள நான்கு மதப் பிரிவினரும் ஒன்றிணைந்திருப்பதை வரவேற்கலாம். இந்த விடயம் ஒரு மரண தண்டனை என்பதற்குமப்பால், ஒரு மத நிந்தனை என்பதற்குமப்பால், இலங்கைத் தீவில் வாழும் தமிழ், முஸ்லிம் ஆகிய இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான எதிர்கால உறவுகளைத் தீர்மானிக்கும் ஒரு விடயமும் என்பதுதான் இதன் பாரதூரத்தன்மை ஆகும். இதில் அனோஜனுக்கு கிடைக்கக்கூடிய கடுமையான தண்டனையானது இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான எதிர்கால உறவில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.
எனவே அனோஜனின் விடயத்தில் பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலாவதாக, அனோஜனை பத்திரமாக வெளியே எடுக்க வேண்டும். ஆகக் குறைந்தது அவருடைய தண்டனையின் கடுமையை குறைக்க வேண்டும். அது பெருமளவுக்கு அரசியல் ராஜதந்திர நடவடிக்கைதான். அறம் சார்ந்த எதிர்ப்புக்கள் அல்லது அறம் சார்ந்த கோரிக்கைகள் ஒரு கட்டத்துக்கு மேல் வேலை செய்யாது. எனவே அதை அதற்குரிய தளத்தில் அதற்குரிய பக்குவத்தோடு அணுக வேண்டும். அப்படி அணுகினால்தான் அனோஜனை தூக்குக் கயிற்றில் இருந்து காப்பாற்றலாம்.
சவுதி அரேபிய மன்னர் ஆட்சி அனோஜனுக்கு விதித்த தண்டனை சரியா பிழையா, போன்ற விவாதங்களை தனியே வைத்துக் கொள்ளலாம். சவுதி அரேபியாவின் ஆள் புல எல்லைக்குள் அனோஜன் தொழில் புரிகிறார். எனவே அங்கே தற்காலிகமாக வாழ்கிறார். இந்த அடிப்படையில் அவர் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர். அந்த சட்ட திட்டங்களின் மனிதாபிமான பரிமாணங்கள் குறித்து தனியாக ஆராயலாம்.ஆனால் இப்பொழுது நடைமுறையில் உள்ள சவுதி அரேபிய சட்டங்களின்படி அவர் கையாளப்படுகிறார். எனவே அங்கே சட்டம் நீதி என்பவற்றை பரிபாலிக்கும் மன்னராட்சியோடுதான் பேச வேண்டும். அந்த மன்னர் ஆட்சியின் முடிவுதான் இறுதியானது. அதனால் அந்த மன்னர் ஆட்சி மீது எப்படிப்பட்ட ராஜதந்திரச் செல்வாக்கை,தார்மீக அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம் என்றுதான் சிந்திக்க வேண்டும். முதலில் அனோஜனை தூக்குக் கயிற்றில் இருந்து காப்பாற்ற வேண்டும். அவருடைய தண்டனையின் கடுமையை ஆகக்கூடிய அளவு குறைக்க வேண்டும்.
இரண்டாவதாக, அது இலங்கைத் தீவில் ஏற்கனவே முரண்பட்டுக் கொண்டிருக்கும் இரண்டு சமூக பிரிவினருக்கு இடையிலான உறவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு விவகாரமாக வளரக்கூடிய ஆபத்து தெரிகிறது. எனவே அந்த நோக்குக் கோணத்தில் இருந்தும் அதனை அணுக வேண்டும்.
மூன்றாவது,அனோஜனின் விடயம் சமூக ஊடக வலைத்தளப் பயனாளிகளுக்கு ஒரு பாடத்தைக் கற்றுத்தருகிறது. உங்களிடம் ஒரு கைபேசி அல்லது கணினி இருக்கிறது என்பதற்காக, அதில் இன்டர்நெட் இணைப்பு இருக்கிறது என்பதற்காக, நீங்கள் முகநூலில் எல்லாவற்றையும் எழுத முடியாது. எழுதும் எல்லாவற்றிற்கும் பொறுப்புக்கூற வேண்டும்.
கண்ணியமின்றி மற்றவர்களை விமர்சிக்கின்ற;ஒரு சமூகத்தை, ஒரு மதத்தை, ஒரு இனத்தை,ஒரு மொழியை, ஒரு பால் பிரிவை, ஒரு சாதியை, ஒரு ஊரை, ஒரு பிராந்தியத்தை, ஒரு சமூகப் பொது அடையாளத்தை, நம்பிக்கையை…… சிறுமைப்படுத்தி எழுதுகின்ற; ஒருவருடைய அந்தரங்கத்தை பொது வெளியில் விமர்சிக்கின்ற எல்லாருக்கும் இது பொருந்தும். பொதுவெளியில் தாங்கள் எழுதும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொருவரும் பொறுப்புக்கூற வேண்டும். பொதுவெளியை கழிப்பறையாகவோ கழிப்பறைச் சுவராகவோக் கருதி அங்கே கழித்துவிட்டுப் போக முடியாது.
அனோஜன் சவூதியில் இருப்பதனால் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டிருக்கிறார். அதேசமயம் ஐரோப்பாவில், அமெரிக்காவில், ஒஸ்திரேலியாவில் வசிக்கும் சில தமிழ் வெறுப்பர்கள் இப்பொழுதும் சமூக ஊடகவலைத்தளங்களில் சுதந்திரமாக விஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறார்கள். கழிந்து கொண்டிருக்கிறார்கள். மைத்திரேயி ராமகிருஷ்ணனுக்கு எதிராக கக்கப்படும் விஷமும் வன்மமும் அரசியல் தூஷணமும் ஆகப் பிந்திய உதாரணங்கள்.
மதத்தை,இறைதூதரை, இனத்தை, மொழியை,பாலினத்தை, ஊரை, சாதியை, பிராந்தியத்தை, ஒருவருடைய அந்தரங்கத்தை இன்னபிறவை சிறுமைப்படுத்தி எழுதும் ஒவ்வொருவரும் தமது வார்த்தைகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டும். தனது சகோதரிக்கு, தாய்க்கு, மனைவிக்கு எதிராக மற்றொருவர் எதை எழுதக்கூடாது என்று ஒருவர் எதிர்பார்க்கிறாரோ, அதையே அவர் மற்றவரின் சகோதரிக்கும் தாய்க்கும் மனைவிக்கும் எழுதக்கூடாது. தனது மதத்தை ஒருவன் சிறுமைப்படுத்தும் போது கோபப்படும் ஒருவர், பதிலுக்கு தானும் மற்றவர்களின் மதத்தை சிறுமைப்படுத்த கூடாது. ஒருவர் பொதுவெளியில் எழுதுதை அவருடைய தாயும் சகோதரியும் பொது வெளியில் பகிரங்கமாக வாசித்துக்காட்டக் கூடியதாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அங்கே எங்கேயோ வக்கிரம் இருக்கிறது என்று பொருள்.
சமூக ஊடக வலைத்தளச் சூழலானது ஒருபுறம் குரலற்ற சாதாரண மக்களுக்கு மேடையை அமைத்துக் கொடுக்கிறது. அதனால் அது அதிகம் ஜனநாயகமானது. அதேசமயம் இன்னொருபுறம், அது கும்பல் மனோநிலையைப் பிரதிபலிக்கின்றது. சாதாரணமானவர்கள் பெரும்பாலும் கும்பல் மனோ நிலையோடு காணப்படுவார்கள். அது இனம் சார்ந்ததாக இருக்கலாம். மதம் சார்ந்ததாக இருக்கலாம். பால் பிரிவைச் சார்ந்ததாக இருக்கலாம். சாதி ஊர் பிராந்தியம் சார்ந்ததாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது இன்னொரு இனத்துக்கு அல்லது மதத்துக்கு அல்லது மொழிக்கு அல்லது ஊருக்கு அல்லது இன்னபிறவுக்கு எதிரானதாக அமையும்போது அங்கே முரண்பாடுகள் தூண்டி விடப்படுகின்றன.
மியான்மரில், ரோஹியங்கா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பில் முகநூல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியது. ஐநாவின் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான சிறப்பு நிபுணர் ரோகிங்கா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பில் முகநூலுக்கும் பங்கு உண்டு என்ற பொருள்படக் குற்றச்சாட்டியிருந்தார்.
முகநூலில் அனோஜன் எழுதியது சாமானிய மனோநிலையில் இருந்து எழுதப்பட்ட ஒரு வெறுப்பு குறிப்பு. ஏற்கனவே எழுதப்பட்ட வெறுப்புக் குறிப்பு ஒன்றின் எதிர்வினை அது. அனோஜன் எழுதிய வெறுப்புக் குறிப்புக்கு அவர் மன்னிப்புக் கேட்டு விட்டார். அங்கே அவர் பொறுப்புக் கூறத் தொடங்குகிறார். அதற்குப் பிறகும் அவருடைய தலையை வெட்ட வேண்டுமா?
சாதாரண மனிதர்கள் வெறுப்பை வெறுப்பினால்தான் எதிர் கொள்வார்கள். மனிதர்களுள் மகத்தானவர்கள் வெறுப்பை அன்பினால், மன்னிப்பால் எதிர்கொள்வார்கள். மனிதர்கள் மன்னிக்கத் தவறியவற்றை இறைத் தூதர்கள் மன்னிப்பார்கள். மனித குல வரலாற்றில் மன்னிப்புத்தான் இறைத்தூதர்களின், அவதாரங்களின்,சமய ஸ்தாபகர்களின் மகிமையை பிரதிபலித்திருக்கிறது. தண்டனை அல்ல.















