‘கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்’ செய்யும் மகிந்த- ரணில் அரசுகளில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா!
Share
அறுதிப் பெரும்பான்மையை பயன்படுத்தி மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க அநுர அரசிடம் கோருகிறார்?
நாடாளுமன்றத்தில் தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ள நிலையில், அதனை பயன்படுத்தி மாகாண சபைகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் குறித்து அவர் கூறுகையில் –
இலங்கையில் உள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்தும், மாகாண சபைத் தேர்தல் தொடர்பான சட்டங்களைத் தவிர்த்து, ஏனைய தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்வது குறித்த கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது என்ற விடயத்துடன் கடிதமொன்று எமக்கு அண்மையில் கிடைத்திருந்தது.
இதற்கமைய அதற்கான கருத்துக்களையும், யோசனைகளையும் வழங்குவதற்கு எமது கட்சி தயாராக இருக்கின்ற நிலையில், அதற்கான தயாரிப்புகளை முன்னெடுத்தும் வருகின்றோம்.
ஆனாலும் தற்போதைய சூழலில், மாகாண சபைத் தேர்தலை புறந்தள்ளிவிட்டு, நடந்து முடிந்த தேர்தல்கள் பற்றி பார்ப்பதானது இந்த நேரத்தில் எந்த அளவுக்கு ஆரோக்கியமான விடயமாக இருக்குமோ எனத் தெரியவில்லை.
கடந்த காலங்களிலும் இத்தகைய தெரிவுக் குழுக்கள் பல நியமிக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் அவற்றுக்கு என்ன நடந்தன? என்பது பற்றி இதுவரையில் நல்லவிதமான பெறுபேறுகள் இல்லை.
எனவே, முதலில், 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி கையெழுத்தாகிய இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம், அதே ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் சட்ட இலக்கம் 42 (1987) ஆகியவற்றால் அறிவிக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைந்து நடத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லதென கருதுகின்றோம்.
இலங்கையின் இறைமையையும், தன்னாதிக்கத்தையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காகவும், தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் இலங்கையில் ஏனைய மக்களுடன் ஒன்றாகக் கலந்து வாழ்ந்து வருவதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருவதால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அவர்களது பூர்வீக பூமி என்பதாலும் கொண்டுவரப்பட்ட மாகாண சபைகள் முறைமையானது, இன்று 7 வருடங்களாக நிழல் நிர்வாகத்தைக் கொண்டு இயங்கிவருகின்றது.
மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்க வேண்டிய மேற்படி மாகாண சபைகள், தற்போது அந்த செயற்பாட்டினை இழந்துள்ளதால், எமது மக்களுக்கான ஒரேயொரு அரசியல் தீர்வாக தற்போது இருக்கின்ற மாகாண சபையும் இல்லாதுபோய் விட்டதாகவும், இது, எமது மக்களை மீண்டும் ஏமாற்றுகின்ற ஒரு செயற்பாடாகவே இருந்து வருகின்றது எனவும் எமது மக்கள் கருத தலைப்பட்டுள்ளனர்.
மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது, ஜனநாயகத்திற்கு முற்றிலும் புறம்பான செயல் என்பது குறிப்பிடத்தக்கதாகும்,
தற்போதைய நிலையில், மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு சட்டப் பிரச்சினை இருந்தாலும், புதிய சட்ட வரைபுகளை வாபஸ் பெற்று, அதேநேரம், மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான ஒதுக்கீடுகளுடன் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு, ஒரு சிறு திருத்தம் மேற்கொண்டால் போதுமானதாகும். இதனை ஆளுந்தரப்பினரே முன்னின்று கொண்டுவரலாம். எதிர்த்தரப்பினரும் மாகாண சபைத் தேர்தலை விரும்புவதால் அதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்புகள் ஏற்படப்போவதில்லை.
அதன் பின்னர், 1990ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ள 1ஆம் இலக்க பொலிஸ் ஆணைக்குழுக்கள் சட்டத்தையும், தற்போதைய அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் இருப்பதால் காணி அதிகாரத்தையும் உட்படுத்தியவாறு மாகாண சபையை வலுவாக முன்னெடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க முடியும். அத்துடன் மாகாண சபையை முழுமையாக அமுல்படுத்தி, அதனை ஓர் ஆரம்பமாகக்கொண்டு, இலங்கையில் இனப்பிரச்சினை தொடர்பான தீர்வினை நோக்கி கட்டம் கட்டமாக முன்னேற முடியும்.
ஏனைய தேர்தல்கள் தொடர்பிலான திருத்தங்கள் குறித்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
எல்லை நிர்ணயம் தொடர்பில் இப்போது நடவடிக்கைக்கு செல்வது கடினமான காரியமாகும். இதற்கு காலதாமதம் ஆகலாம். பிரச்சினைகள் ஏற்படலாம்.
எனவே, இதனை பின்னர் பார்த்துக்கொள்வதுதான் சிறந்தது என எண்ணுகிறோம். அதற்கான காலத்தை எடுத்துக்கொண்டு, பழைய முறையில் சில திருத்தங்களுடன் மாகாண சபைத் தேர்தலை நடாத்தவதுதான் தற்போது நம்முன்னுள்ள முக்கிய விடயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.















