LOADING

Type to search

இந்திய அரசியல்

கிராம சபை கூட்டத்தை திருவிழாவாக கொண்டாட வேண்டுமென முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்

Share

கிராம சபை கூட்டத்தை திருவிழாவாக கொண்டாட வேண்டுமென முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று மக்கள் பங்கேற்புடன் வளர்ச்சியைத் தீர்மானிக்க அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் (செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் நீங்கலாக) கிராம சபை நடைபெற உள்ளது. கிராமங்கள் வளர்ந்தால் தான் தமிழ்நாடு முழுமையாக வளரும் என்ற நோக்கில் நமது அரசு செயல்படுகிறது. ஊரக வீட்டுவசதி, சாலைகள், குடிநீர், தூய்மை மற்றும் சுகாதாரம், ஊரக வேலை உறுதி, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பொருளாதார நடவடிக்கைகள், வாழ்வாதார மேம்பாடு, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பங்களிப்புடன் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் ஆகியவற்றின் பயன்கள் தகுதியான ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களில் அனைத்து தரப்பினருக்கும் உரிய பயன்கள் சென்றடைவதிலேயே திட்டங்களின் உண்மையான வெற்றி உள்ளது. இதற்கு மக்களையும், அரசையும் இணைக்கும் பாலமாக கிராம சபை செயல்பட வேண்டும். “வலிமையான கிராமங்கள் – வளமான தமிழ்நாடு” என்ற குறிக்கோளுடன், இன்று (2-ந்தேதி) கிராம சபைக் கூட்டத்தில் திரளாக மக்கள் பங்கேற்று திருவிழாவாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.