LOADING

Type to search

இந்திய அரசியல்

முதல்-அமைச்சர் விஜய் வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார்

Share

தமிழகம் முழுவதும் மகளிருக்கான இலவச பேருந்து வெற்றிப்பயணம் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா விடியல் பயண திட்டத்தை கடந்த தி.மு.க. அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி, மாநகர மற்றும் நகர்ப்புற சாதாரண அரசு பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர்.

கடந்த சட்டசபை தேர்தலின்போது த.வெ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், த.வெ.க. ஆட்சி அமையும்போது மகளிர் பயணத்திட்டம் அனைத்து அரசு பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் 24-ந்தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதல்-அமைச்சர் விஜய், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டம், ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில், விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார்.

இத்திட்டத்தில் பயன்பெற, வருமான உச்சவரம்பு மற்றும் பயண எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் கிடையாது. அதோடு, வெற்றிப் பயணத் திட்டம், இதர சேவைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் தனது அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் வெற்றிப் பயணம் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய், சென்னை கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் பேருந்தில் ஏறி பெண் பயணிகளுக்கான இலவச டிக்கெட்டுகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று அங்கு அமர்ந்திருந்த பெண்களுக்கு டிக்கெட்டுகளை வழங்கினார். இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடைய உள்ளனர்.