விஜய் சேதுபதியை வைத்து “மருதநாயகம்” படம் இயக்க ஆசைப்படுவதாக இயக்குநர் அட்லீ கூறியுள்ளார்
Share
நடிகர் விஜய் சேதுபதியை வைத்து கமல் சார் நடிப்பில் கைவிடப்பட்ட ‘மருதநாயகம்’ திரைப்படத்தை இயக்க ஆசைப்படுவதாக இயக்குநர் அட்லீ கூறியுள்ளார். விஜய் சேதுபதி – இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவாகி வரும் மூன்றாவது திரைப்படம் ‘பத்தா’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் சாய் பிரிதிவ் ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தை இயக்குநர் அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ நிறுவனமும், ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 – சினி1 ஸ்டுடியோஸ்’ நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன. விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி, அட்லீயின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் சாய் அபயங்கரின் இசை என பல்வேறு காரணங்களால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார். படத்தில் நடித்த சிறுவனுக்கு தேசிய விருது வழங்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். ‘பத்தா’ படம் 5 நாட்களில் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் கடந்த 1ம் தேதி வெளியானது. இந்த நிலையில், பத்தா வெற்றி விழாவில் பேசிய அட்லீ, “ விஜய் சேதுபதி சார் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல சிறந்த படங்களைத் தேர்வு செய்து நடித்துள்ளார், அதனால் எங்கள் படத்தில் ஹீரோ யார், வில்லன் யார் என்பதைவிட கதையே ஹீரோவாக இருக்கும். நடிகர் விஜய் சேதுபதியை வைத்து கமல் சார் நடிப்பில் கைவிடப்பட்ட ‘மருதநாயகம்’ திரைப்படத்தை இயக்க ஆசைப்படுகிறேன். என்னிடம் அதற்கான சின்ன கதைக்கருவும் இருக்கிறது. வாய்ப்பும் பட்ஜெட்டும் அமைந்தால் நடிகர் கமல் ஹாசனையும் விஜய் சேதுபதியையும் அப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.















