பெல்ஜியத்தில் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Share
பெல்ஜியத்தில் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராக, மாணவர்கள் வன்முறையான போராட்டத்தில் ஈடுபட்டனர். பெல்ஜியத்தின் பிரஞ்சு மொழி பேசும் பிராந்தியங்களில், கல்விக் கட்டண உயர்வு மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு குறைபாடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிர வன்முறையாக வெடித்துள்ளது. குறிப்பாக, லீஜ் மற்றும் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் ஆகிய நகரங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது. அண்டை நாடான பிரான்சில் நடக்கும் பள்ளி மாணவர்களின் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டு, கடந்த அக்டோபர் 1 முதல் பெல்ஜியத்தில் இந்த தன்னிச்சையான போராட்டங்கள் தொடங்கின. உயர்கல்விக்கான ஆண்டு கல்விக் கட்டணத்தை பிரஞ்சு மொழி பேசும் சமூக அரசு €835-லிருந்து €1,194 (இந்திய மதிப்பில் ரூ. 90,541.56-லிருந்து ரூ.1,29,469.00) ஆக உயர்த்தியதே இந்த போராட்டத்திற்கு முக்கிய காரணமாகும். அத்துடன், பள்ளிகளில் போதிய இடவசதி இல்லாமை, மோசமான பள்ளி கட்டிடங்கள், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பொதுப் போக்குவரத்து கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும் மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். லீஜ் நகரில் நடைபெற்ற பேரணியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போராட்டத்தின் போது சில குழுக்கள் தீவிர வன்முறையில் ஈடுபட்டனர். பள்ளி ஜன்னல்களை அடித்து நொறுக்கியும், குப்பைத் தொட்டிகளுக்கு தீ வைத்தும், சாலைகளை மறித்தும் அவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, கலகத் தடுப்புப் காவல்துறை கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களை பயன்படுத்தினர். இந்த மோதல்களில் 22 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக லீஜ் பகுதியில் மட்டும் இதுவரை 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 17 சிறுவர்களும் அடங்குவர். பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், லீஜ் நகரில் உள்ள பள்ளி வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.















