சர்வாதிகாரத்தை கையிலெடுக்கும் அநுர அரசின் ‘புதிய பிசாசு’
Share
அதுதான் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’
”இலங்கையில் 48 ஆண்டுகள் நீடித்த பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது வெறும் சட்டப் பிரிவு அல்ல.அது பல ஆயிரக்கணக்கான மனிதர்களின் இரத்தமும் கண்ணீரும், வேதனையும் ஈடு செய்யமுடியாத வலிகளும் இழப்புகளும் நிறைந்த ஒரு கறுப்பு வரலாறு. இக்கொடூரச் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கே அநுர அரசு கொண்டுவரும் “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்” என்ற புதிய பிசாசு மீண்டும் ஒரு பேராபத்தின் தொடக்கமாக அமையப்போகின்றது” இந்தச் சட்டம் மக்களைக் காப்பாற்றுவதற்கு அல்ல. அநுரவின் அரசாங்கத்தைக் காப்பாற்றவே எனபதை தமிழ் சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்!
—–கே.பாலா
கடந்த 48 ஆண்டுகளாக இலங்கையின் பல தலைமுறைகளை அச்சத்திலும், அநீதியிலும் மூழ்கடித்து வைத்திருந்த ”அரச பிசாசு” எனும் ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ (PTA)ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த மக்களுக்கு ”புதிய கொடூர பிசாசு ” என்பது போல, கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டு கடந்த ஒக்டோபர் 6 ஆம் திகதி நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்” (PSAT-Protection of the State from Acts of Terrorism Bill-)அமைந்துள்ளது. அநுர அரசு பழைய அடக்குமுறைச் சட்டத்தை விடவும் அதிக கொடூரமும் ஆபத்தும் கொண்ட இந்த சட்டத்தை கொண்டு வருவது மாற்றத்திற்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு, வழங்கத் துணியும் ஜனநாயகத்தின் மீதான மற்றுமொரு கொடூர தாக்குதலாக, அடக்குமுறையின் வடிவமாக,அதே கொடுங்கோன்மையைத் தொடரத் துடிக்கும் சர்வாதிகாரத்தனமாகவேயுள்ளது.
ஒரு ஜனநாயக நாட்டில் சட்டங்கள் என்பது குடிமக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்படுபவை. ஆனால், இலங்கையில் கடந்த அரை நூற்றாண்டுகாலமாக (48 ஆண்டுகள்) பயங்கரவாதத் தடை என்ற சட்டத்தின் பெயரில் மக்களின் குறிப்பாக தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் நசுக்கப்பட்டு இந்த சட்டத்தின் ஊடாக கைதுகள், பலவருட சிறைத்தண்டனைகள் , கொடூர சித்திரவதைகள் தான் இடம்பெற்றுவந்தன.இந்த நிலையில், தற்போதைய அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கொண்டுவரத்துடிக்கும் புதிய “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்”, முந்தைய சட்டத்தை விடவும் மிகவும் நுட்பமான, அதே சமயம் ஆபத்தான அடக்குமுறை அதிகாரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது
இலங்கையின் அரசியல் வரலாற்றில் 48 ஆண்டுகள் நீடித்த பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது வெறும் சட்டப் பிரிவு அல்ல.அது பல ஆயிரக்கணக்கான மனிதர்களின் கண்ணீரும், வேதனையும் ஈடு செய்யமுடியாத வலிகளும் இழப்புகளும் நிறைந்த ஒரு கறுப்பு வரலாறு. இக்கொடூரச் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கே ,இந்த “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்” என்ற புதிய பிசாசு மீண்டும் ஒரு பேராபத்தின் தொடக்கமாக அமையப்போகின்றது.பழைய சட்டத்தின் கொடூரங்களை மறைத்து, அதைவிடப் பல மடங்கு பற்களையும் கூர்மையான நகங்களையும் கொண்ட ஒரு புதிய அடக்குமுறைக் கரத்தை அரசாங்கம் நீட்டியுள்ளது. அரசைப் பாதுகாப்பது என்ற போர்வையில், குடிமக்களின் ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் இந்த புதிய சட்டமூலம் முந்தைய சட்டத்தை விட ஏன் அதிக பயங்கரமானது?
பயங்கரவாத தடைச் சட்டத்தின்
ஆரம்பமும் பின்னணியும்
இதற்கு முதலில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஆரம்பத்தையும் பின்னணியையும் பார்க்கவேண்டும் . 1979 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கத்தால் 1979 இன் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) என்ற பெயரில் கொண்டுவரப்பட்டது. தொடக்கத்தில் 3 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் ‘தற்காலிகச் சட்டமாக’ பாராளுமன்றத்தில் அவசர அவசரமாக விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 1982 ஆம் ஆண்டு 10 ஆம் இலக்கத் திருத்தத்தின் மூலம் இச்சட்டம் காலவரையறையற்ற நிரந்தரச் சட்டமாக மாற்றப்பட்டது.தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தையும், அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எதிர்ப்புகளையும் ஒடுக்குவதையே இது பிரதான நோக்கமாக்கிக் கொண்டது.
இச்சட்டம் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சட்டக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணான பல சரத்துக்களைக் கொண்டுள்ளது . சந்தேகத்தின் பேரில் எவரையும் பொலிஸாரோ அல்லது பாதுகாப்புப் படையினரோ கைது செய்ய முடியும்.பாதுகாப்பு அமைச்சரின் கையொப்பத்துடன் 18 மாதங்கள் வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமலேயே தடுப்புக் காவலில் வைக்க இச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது.சாதாரண சட்டத்தில் பொலிஸாரிடம் கொடுக்கும் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால்,இந்த சட்டத்தின் கீழ் பொலிஸ் அதிகாரியிடம் பெறப்படும் வாக்குமூலம் நீதிமன்றத்தில் பிரதான சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும்.இதன் காரணமாக, கைதிகளைக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து, பொய் வாக்குமூலங்களில் கட்டாயப்படுத்தி கையொப்பம் பெறும் கலாசாரம் உருவானது.”தான் குற்றமற்றவன்” என்பதை நீதிமன்றத்தில் கைதியே நிரூபிக்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டது.சட்டமா அதிபரின் ஒப்புதல் இன்றி சாதாரண நீதிமன்றங்களால் பிணை வழங்க முடியாது.
இச்சட்டத்தின் முதன்மை இலக்காகவும் பலியாகவும் தமிழினமே அமைந்தது.ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், மாணவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் வெறும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டனர். “தேடுதல் நடவடிக்கை” என்ற பெயரில் தமிழ் கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டு, ஒரே இரவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.குற்றச்சாட்டோ, விசாரணையோ இல்லாமல் 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைகளில் வாடிய தமிழ் அரசியல் கைதிகள் ஏராளம்.தற்போதும் பலவருடங்களாக பல தமிழர்கள் இந்த சட்டத்தின் கீழ் சிறைகளில் வாடுகின்றனர். பலர் சிறைகளிலேயே மரணித்தும் உள்ளனர்
1983 வெலிக்கடைச் சிறைப் படுகொலை மற்றும் 2000 ஆம் ஆண்டு பிந்துனுவெவ மறுவாழ்வு முகாம் படுகொலை ஆகியவற்றில் இந்த சட்டத்தின் கீழ் கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்ட தமிழ் இளைஞர்களே கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் மீண்டும் திரும்பி வரவில்லை.அவர்கள் ‘காணாமல் ஆக்கப்பட்டோராக’ மாறினர். தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கும் தீவிர சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டதாக மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்தே உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.தமிழ்த் தேசியக் கட்சிகள் இச்சட்டத்தை “தமிழர்களை ஒடுக்கும் கறுப்புச் சட்டம்” எனப் பாராளுமன்றத்திலும் வீதிகளிலும் தொடர்ந்து எதிர்த்தன.வடக்கு-கிழக்கில் “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம்” நடத்தும் தொடர் போராட்டங்களில் இந்த சட்டத்தை நீக்கக் கோரும் குரல் முதன்மையாக உள்ளது.2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ”பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணியில் இந்த சட்டத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டது.
தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்பட்ட இச்சட்டம், பிற்காலத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் 2022 ‘அரகலய’ போராட்டக்காரர்கள் என சிங்களவர்கள் மீதும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் மீதும் பயன்படுத்தப்பட்டபோது தென்னிலங்கையிலும் எதிர்ப்பு வலுத்தது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இந்த சட்டத்தை முற்றாக இரத்து செய்ய வேண்டும் எனப் பல தீர்மானங்களில் (30/1 உட்பட) இலங்கை அரசை வலியுறுத்தியது.ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வரும் ஜி.எஸ்.பி + வரிச்சலுகையை நீடிப்பதற்கு இந்த சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்பதை முக்கிய நிபந்தனையாக விதித்தது.மனித உரிமைகள் கண்காணிப்பகம் ,,சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற சர்வதேச அமைப்புகள் இச்சட்டத்தை “அடக்குமுறையின் ஆயுதம்” எனக் கண்டித்தன.
இவ்வாறான நிலையில் தான் நாமும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழித்தே தீருவோம் என கடந்த 2024 ஜனாதிபதித் தேர்தலில் வாக்குறுதியளித்து சிங்கள,தமிழ், முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறிய அநுர குமார தலைமையிலான அரசு இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கூறிக்கொண்டு அதனை விடவும் பயங்கரமான “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்” என ஒன்றை கொண்டுவருகின்றது.
புதியது ஏன் இன்னும் கொடூரமானது?
1979-ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) மாற்றாக முன்வைக்கப்பட்டுள்ள “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்” (PSAT-Protection of the State from Acts of Terrorism Bill / Anti-Terrorism Bill), பழைய சட்டத்தை விடவும் பல வழிகளில் ஏன் மிகவும் ஆபத்தானது அச்சுறுத்தலானது ?
பழைய பயங்கரவாதத் தடைச் சட்டம் குறிப்பிட்ட வன்முறைச் செயல்கள் மற்றும் அரசைக் கவிழ்க்கும் நடவடிக்கைகளை மட்டுமே கட்டுப்படுத்துவதை முதன்மையாகக் கொண்டிருந்தது.புதிய சட்டமூலமான பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தில் “பயங்கரவாதம்” என்பதற்கான வரையறை மிகவும் பரந்த அளவிலும் தெளிவின்றியும் உள்ளது.அரசின் இயல்புநிலையை ஸ்தம்பிக்கச் செய்தல், சேவைகளைத் தடை செய்தல், அரசுக்கு அல்லது அரசு நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்தல் போன்றவை “பயங்கரவாதச் செயல்களாக”ச் சித்திரிக்கப்பட அதில்வாய்ப்புக்கள் உள்ளன. இதன் மூலம் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்கள், மாணவர் போராட்டங்கள், சிவில் சமூகப் போராட்டங்கள் மற்றும் ஜனநாயக ரீதியிலான ஆர்ப்பாட்டங்கள் கூட “பயங்கரவாதம்” என முத்திரை குத்தப்படும் அபாயம் உள்ளது.
அத்துடன் புதிய சட்டமூலத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அல்லது பாதுகாப்பு அமைச்சைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளே சந்தேகநபர்களை நீண்ட காலம் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட அதிகாரம் பெறுகின்றனர். நீதித்துறை தலையீடு இன்றி, தன்னிச்சையாக நபர் ஒருவரைக் கைது செய்து தடுத்து வைக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்படுகிறது.”பயங்கரவாதத்தைத் தூண்டுதல்” அல்லது “ஊக்கப்படுத்துதல்” என்ற பெயரில் மிக விரிவான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அரசின் தவறுகளை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் , அரசியல் ஆய்வாளர்கள், அல்லது சமூக ஊடகப் பதிவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், அவர்களை அச்சுறுத்துவதற்கும் இச்சட்டம் வழிவகுக்கின்றது.
சில பகுதிகளை “தடைசெய்யப்பட்ட பகுதிகள்” என அறிவிக்கும் அதிகாரம் அரசிற்கு வழங்கப்படுகிறது.அமைதியான முறையில் மக்கள் போராட்டம் நடத்துவதையும், ஒன்று கூடுவதையும் தடுப்பதற்கு இப் பிரிவுகள் பயன்படுத்தப்படலாம்.வழக்கமான பொலிஸ் சோதனைகளைத் தாண்டி, இராணுவம் மற்றும் கடலோரக் காவல் படையினருக்கு சாதாரணப் பிரஜைகளைக் கைது செய்யவும், சோதனையிடவும், தடுத்து வைக்கவும் பரந்த அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.இது நாட்டில் இராணுவத்தின் ஆதிக்கத்தையும் ஜனநாயக மீறல்களையும் அதிகரிக்கச் செய்யும்.ஜனாதிபதி அல்லது குறிப்பிட்ட அமைச்சு அதிகாரிகளுக்கு, எந்தவொரு சிவில் அமைப்பு, அரசியல் இயக்கம் அல்லது தொழிற்சங்கத்தையும் “பயங்கரவாத அமைப்பு” எனப் பிரகடனம் செய்து தடை செய்யும் தன்னிச்சையான அதிகாரம் வழங்கப்படுகிறது.
பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் 48 ஆண்டுகளாக நாட்டில் நடைமுறையிலிருந்த ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் ஆறவில்லை. இந்நிலையில், ‘மாற்றம்’ என்ற வாக்குறுதியோடு ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம், பழைய சட்டத்தை விடவும் தீவிரமான ஒரு அடக்குமுறைச் சட்டமூலத்தை சட்டப்பூர்வமாக்கத் துடிப்பது ஜனநாயகத்தின் மீதான மற்றுமொரு அச்சுறுத்தலாகும்.அரசைப் பாதுகாப்பது என்ற பெயரில் குடிமக்களின் கருத்துச் சுதந்திரத்தையும், போராட்ட உரிமையையும் ஒடுக்கும் எந்தவொரு சட்டமும் நாட்டைப் பாதுகாப்பதாக அமையாது.மாறாக, அது மற்றுமொரு சர்வாதிகாரப் பாதைக்கே வழிகோலும்.
48 ஆண்டுகால வரலாற்றுப் பிழையிலிருந்து இலங்கை பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய தருணம் இது. ஆனால், பழைய கொடூரச் சட்டத்திற்குப் பதிலாக, அதைவிடக் கடுமையான நிபந்தனைகளுடனும் அதிக அதிகாரங்களுடனும் புதிய சட்டமூலத்தை முன்வைப்பது, அடக்குமுறையின் வடிவத்தை மட்டுமே மாற்றியிருக்கிறதே தவிர, நோக்கத்தை அல்ல. “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்” என்பது வெறும் காகித வடிவிலான சட்ட மாற்றம் அல்ல. அது மக்களின் அடிப்படைச் சுதந்திரத்தின் மீது போடப்படும் புதிய விலங்கு. மூவின மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் அந்த மக்களுக்கு எதிராக இத்தகைய சட்டங்களை ஆயுதமாகப் பயன்படுத்துவது பெரும் துரோகம்.















