LOADING

Type to search

இலங்கை அரசியல்

வடக்கிலிருந்து மலையகத்துக்காக ஒலித்த குரல் மௌனித்தது

Share

தமிழ் மக்களின் அரசியல் விடுதலை, மலையகத் தமிழ் மக்களின் உரிமைகள் சார்ந்து தொடர்ச்சியாகக் குரல் கொடுத்த சி.அ. யோதிலிங்கம் அவர்களின் மறைவு குறித்து பலரும் அஞ்சலி!

மலையகத் தமிழர்கள் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த – ஆய்வு கட்டுரைகளை எழுதிய – விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுத்த தமிழ்த் தேசிய மற்றும் குடிமைச் சமூக செயற்பாட்டாளரான சி. அ. யோதிலிங்கம் காலமானார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்ற சத்திர சிகிச்சையை தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானதாக உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும், சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளரும், ஓய்வுநிலை ஆசிரியருமான சி. அ. யோதிலிங்கம் குரல் அற்றவர்களின் குரலாகவும், சமூக நீதிக்காகவும், அநீதிக்கு எதிராகவும் அரசியல் போராட்டங்கள் பலவற்றில் முன்னின்று செயற்பட்டவர்.

தமிழ் மக்களின் அரசியல் விடுதலை, மலையகத் தமிழ் மக்களின் உரிமைகள், அரசியலமைப்பு சார்ந்த பெருமளவு நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

மலையகத் தமிழ் மக்களும் இலங்கையின் அரசியலமைப்பில் தனித்துவமான தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர்களில் சி. அ. ஜோதிலிங்கம் முதன்மையானவர்.

மலையகத் தமிழ் மக்களின் அரசியல் அடையாளம், தேசிய இன உரிமைகள், அரசியலமைப்பு அங்கீகாரம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாகத் தொடர்ச்சியாகக் கருத்துகளை முன்வைத்து வந்துள்ளார்.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்து, அவர்களுக்கான உதவித் திட்டங்களையும் சமூகப் பணிகளையும் அவர் தனது மனைவியுடன் இணைந்து முன்னெடுத்துள்ளார். குறிப்பாக மீறியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் செய்த சேவைகள் அளப்பறியவை.

புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவுடன் மலையகத்தில் பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்ததுடன், நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதிகளுக்குச் சென்று பணியாற்றியமையும் அவரது சமூகப் பங்களிப்பின் முக்கிய அம்சமாகும்.

மலையக சமூக ஆய்வு மையத்துடனான அவரது தொடர்பும் செயற்பாடுகளும் மலையக மக்களின் சமூக, அரசியல் மற்றும் தேசிய அடையாளம் தொடர்பான விடயங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன.

மாற்று மே தினம் மற்றும் மலையக தேசிய பொங்கல் விழா உள்ளிட்ட நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகளுடன் அவர் இணைந்து செயலாற்றியுள்ளார்.

மலையக மக்களின் உரிமைகள், அடையாளம் மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பான விடயங்களில் சுமார் இரண்டு தசாப்தங்களாகத் தொடர்ந்து எழுதியும் கருத்துகளை முன்வைத்தும் வந்துள்ளார்.

மலையகப் பிரதேச இளைஞர்களிடையே அரசியல் அறிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதிலும் அவர் பங்களித்துள்ளார். அரசியலமைப்பு, அதிகாரப் பகிர்வு, மலையகத் தமிழ் தேசியம் உள்ளிட்ட விடயங்களில் இலவச வகுப்புகளை நடத்தி, இளைஞர்கள் தமது அரசியல் உரிமைகள் மற்றும் சமூகத்தின் எதிர்காலம் குறித்துப் புரிந்துகொள்ள சி. அ. யோதிலிங்கம் உதவியுள்ளார்.