LOADING

Type to search

இந்திய அரசியல்

நோபல் பரிசுப் பெற்ற தமிழ்ப் பெண்மணிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பெற வேண்டும்!

Share

முதல்வர் விஜய் அவர்களுக்கு

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள்

சர்வதேச அளவில் மனிதகுலத்திற்கு எதிராக இனப்படுகொலை மற்றும் பேரழிவுகளில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பி வருவதற்கு எதிராகப் போராடுவதையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு தொண்டாற்றி வரும் தென்னாப்பிரிக்கா வாழ் தமிழரான நவநீதம் நவி பிள்ளை அவர்களுக்கு இவ்வாண்டிற்கான நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டிருக்கும் செய்தி உலகமெல்லாம் வாழும் தமிழர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும் பெருமித உணர்வையும் ஊட்டியுள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக அவர் இருந்தபோது, 2009ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசு நடத்திய இனவெறிப் படுகொலைகள் குறித்தும் மற்றும் ருவாண்டா, பாலஸ்தீன, காசா பகுதி ஆகியவற்றில் நடந்த இனவெறிப்படுகொலைகள் குறித்தும் விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிமன்றங்களின் தலைவராக இருந்து நேர்மையுடனும், நெஞ்சத்துணிவுடனும் இனவெறி அரசுகளுக்கு எதிராக அவர் அளித்த அறிக்கைகளும், தீர்ப்புகளும் இதுவரை யாரும் செய்ய துணியாதவையாகும்.

புலம்பெயர்ந்த மக்களுக்கும் தென்னாப்பிரிக்கா நாட்டிற்கும், தாய்த் தமிழகத்திற்கும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கும் அவர் பெருமைத் தேடித் தந்திருக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள அவருக்கு தமிழக அரசின் சார்பிலும், மக்களின் சார்பிலும் பாராட்டுவிழா நடத்த முன்வருமாறு தமிழக முதல்வர் விஜய் அவர்களை வேண்டிக்கொள்கிறேன். இவ்விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்களும் மற்றும் சமுதாய தொண்டு நிறுவனங்களின் தலைவர்களும் பங்கேற்று இவ்விழாவினை அனைத்துத் தமிழர்களும் கொண்டாடும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்யப்படவேண்டும்.

அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழ்நாட்டுத் தமிழர்களும் தமிழக அரசும் பெருமித உணர்வுடன் ஒன்றுபட்டு, அவருக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் இவ்விழாவை விரைவில் நடத்த முன்வருமாறு முதலமைச்சர் அவர்களை மீண்டும் வேண்டிக்கொள்கிறேன்.

அன்புள்ள,

(பழ. நெடுமாறன்)
தலைவர்.