தென் ஆப்பிரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்
Share
தென் ஆப்பிரிக்காவில் அரசியல் பிரமுகர் ஒருவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர். ஜோகன்னஸ்பர்க் நகரின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கேட்லெஹாங் நகர்ப்புற குடியிருப்புப் பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.. அங்குள்ள உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு மர்ம நபர் தப்பிச் சென்றார். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது என்று காவல்துறை தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும். துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் காவல்துறையில் சரணடைந்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களில் சிலர், தென் ஆப்பிரிக்காவின் முக்கிய அரசியல் கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் (ஏ.என்.சி.) இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் குறித்து அரசியல் கொலைகளை விசாரிக்கும் சிறப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது.















