LOADING

Type to search

கதிரோட்டடம்

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையை பீடித்த கொடிய நோய்க்கு காரணமான சூழ்ச்சி

Share

02-04-2021  கதிரோட்டம்

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயரின் இறுதி நல்லடக்கம் திங்கட்கிழமை நடைபெறுகின்றது.

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அவர்களின் மறைவு தமிழினத்திற்கு பேரிழப்பாகும். மறைந்த ஆயர் அவர்கள் தமிழ் மக்களின் அனைத்த தளங்களிலும் நின்று உரத்த குரலாக எழுப்பிய நியாயங்களை அப்போது செவிமடுக்க அரசு தரப்பு முன்வரவில்லை. அவர் வெளியிட்ட கருத்துக்களை அரசாங்கம் ஒரு நீதியான குரல் என்று கணிக்கத் தவறிவிட்டது.
தமிழர்களின் நலனுக்காக அவர்கள் குரல் கொடுக்கின்றார் என்பதை மறந்து தனது போக்கில் அரசாங்கம் சென்று கொண்டிருந்தது.

யுத்த காலத்தில் இன, மத , மொழி பேதம் பாராமல் மனிதம் மட்டுமே மேன்மை என கருதி அனைத்து மக்களுக்குமான சேவைகளை வழங்கியவர் மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை.

ஆண்டகை அவர்கள் நீண்ட கால சுகயீனம் காரணமாக நேற்று அதிகாலையில் இயற்கை எய்தினார். அவரது இழப்பானது தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.

ஆயர் அவர்கள் அனைத்து மதங்களையும் ஒரே மாதிரியாகவே பார்த்து வந்துள்ளார். இதனால் மதத்தலைவர்கள் பிற மதத்தவர்களின் அன்பை அதிகமாக பெற்றவர் இராயப்பு ஜோசப் ஆண்டகை என்றால் அது மிகையாகாது.

யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்காக அயராது பாடுபட்டவர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும் அரசியல் கைதிகளுக்கும் ஓடி ஓடி உழைத்தவர்.

மறைந்த ஆயர் அவர்கள் பல வழிகளில் ஒரு ஆளுமையாகவே விளங்கினார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்டத்தை நியாயமானது என்று வெளிப்படையாகவே தெரிவித்தார். வன்னி மண்ணுக்குச் சென்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களைச் சந்தித்தார். அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் கேட்டு வந்த கருத்துக்களை அரசுக்கும் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பகிரங்கமாகவே அவர்கள் காதுகளில் கேட்கும் படியாகவே வெளிப்படுத்தினார்.

இவ்வாறான நாட்களில் எமது ஆண்டகையை திடீரெனப் பீடித்த நோயானது, பல கேள்விகளை அப்போது எழுப்பி நின்றது. ஆனால் அந்த கேள்விகளுக்கு பதில்கள் கிட்டாமலே கிடப்பில் போடப்பட்டது. திடகாத்திரமாக இருந்த ஒரு புனிதருக்கு திடீரென எழுந்து நடமாட முடியாமல் சக்கரங்கள் பூட்டப்பட்ட நாற்காலியில் அமர்ந்து நடமாட வேண்டிய அவலம் ஏற்பட்டதை பலர் சந்தேகத்தோடு பார்த்தார்கள். தங்களுக்குள் உரையாடினார்கள். ஆனால் அவை தொடர்பான தொடர்ச்சியான விடயங்கள் கலந்துரையாடப்பட வில்லை. அது ஒரு அரசாங்கம் சார்ந்த விடயமாக இருந்த படியால் அவருக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர்கள் கூட மௌனமாக இருந்து விட்டார்கள்.

நாம் இந்த விடயத்தை ஆயரின் மறைவு நிகழ்ந்த நாளிலாவது குறிப்பிட வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டதற்கு காரணம் இதற்கு முன்னர் எமது தமிழ்ச் சமூகத்தில் அறிவு சார்ந்தவர்களாக விளங்கிய சிலரைப் பீடித்த இவ்வாறான நோய்களே ஆகும்.

எமது தமிழர் சமூகத்தில் கல்வியாளர் மத்தியில் இடது சாரிக் கொள்கைகளோடு தெளிவாக விவாதிக்கும் ஆற்றல் கொண்டவராக விளங்கியவர் பேராசிரியர் கைலாசபதியாவார். அவர் அமெரிக்காவில் கலாநிதிப் பட்டம் பெறுவதற்காக கற்றுவருகையில் அவரது சமூகவியல் கருத்துக்களை அமெரிக்காவில் உள்ள பேராசிரியர்கள் கூட ஏற்றுக் கொள்ளவில்லையாம். அமெரிக்காவின் கொள்கைகளைக் கூட பகிரங்கமாகவே விமர்சனம் செய்து வந்த கைலாசபதி அவர்கள்,

பறறி, அமெரிக்காவில் பல்கலைக்கழக வட்டாரத்தில் மட்டுமல்ல வெளியிடங்களிலும் அவர் பற்றிய பேச்சு இருந்ததாம். ஆனால் அவர் இலங்கை திரும்பி சில வருடங்களில் திடீரென பீடித்த நோய் காரணமாக மரணத்தை தழுவினார். அவர் மறைந்த வேளையில் அவருக்கு அமெரிக்காவில் ‘ஏதோ’ ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் பேராசிரியர் அவர்களின் ஈழத்து சகாக்களினால் அவர்களின் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

இதைப்போன்றே, மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் திடீர் நோயினால் பீடிக்கப்பட்ட போது கூட, அவ்வாறான சந்தேகங்கள் தோன்றின. ஆனால் அவை மறைக்கப்பட்டுவிட்டன. இதில் அரசாங்கத்தின் சில சக்திகள் சம்பந்தப்பட்டிருந்தன என்பதே அன்றைய உரையாடல்களில் கலந்திருந்த விடயங்கள். ஆனால் அனைத்தும் மௌனமாகவே நகர்த்தப்பட்டு, சில வருடங்களின் பின்னர் ஆண்டகையின் அரிய ஒரு உயிரைப் பறித்துள்ளது. இது அதிர்ச்சி அல்ல. கொடுமையான ஒரு இழப்பு. நியாயத்தின் குரல் ஒன்று அறுக்கப்பட்ட பயங்கரம் இங்கு நிகழ்ந்துள்ளது என்பதே உ ண்மை. இது ஒரு இனப்படுகொலையே.

எனினும், தமிழ் மக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சுய கௌரவத்துடனும் வாழ வேண்டுமென்பதில் உறுதியான பற்றோடு இருந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையை இந்த உலகம் உள்ளவரை எமது தமிழ் மக்கள் மறந்து விடமாட்டார்கள் என்றே நாம் நம்புகின்றோம்.