LOADING

Type to search

இலங்கை அரசியல்

முல்லைத்தீவு நீதிபதிக்கான அச்சுறுத்தல் குறித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனம்

Share

நடராசா லோகதயாளன்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகும் நிலைக்கு தள்ளப்பட்டது குறித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் சிவஞானம் சிறீதரன் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடன் நாடு திரும்பி இந்த விடயம் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். அவர் மட்டுமல்ல சட்ட மாஅதிபர் சஞ்சய் ராஜரட்ணமும் நீதிபதிக்கான அச்சுறுத்தல் குறித்து பதிலளிக்க கடமைபட்டுள்ளார் என்று தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் மனோ கணேசன்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா அவர்கள், தன்மீது தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டுவந்த அழுத்தங்கள் மற்றும் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக, தனது பதவியையும், பொறுப்புகளையும் துறந்துள்ளமை, இந்த நாட்டின் நீதித்துறையினது சுயாதீன இயங்குநிலையை அடியோடு ஆட்டம் காணச் செய்துள்ளது என தமிழ்த் தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

நீதிபதி சரவணராஜா அவர்கள் கடந்த 2023.07.04 ஆம் திகதி தனது கடமை நிமித்தம் குருந்தூர்மலைக்கு விஜயம் செய்திருந்தபோது தெரிவித்த கருத்துகளை மேற்கோள்காட்டி 2023.07.07 ஆம் திகதிய நாடாளுமன்ற உரையிலும், அதன்பின்னர் பொதுவெளியிலும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை, நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அவதூறுக்கு உள்ளாக்கியிருந்தார் என்கிறார் சிறீதரன்.

அதன்பின்னர் ”குருந்தூர்மலையில் தமிழர்கள் வழிபாடு செய்வதற்கு, சட்டவரன்முறைகளுக்கு உட்பட்டு நியாயபூர்வமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை மாற்றம் செய்யுமாறு சட்ட மாஅதிபர் மட்டத்தில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகியுள்ளமை இந்த நாட்டின் நீதித்துறைக்கும், ஜனநாயகத்துக்கும் விழுந்திருக்கிற சாட்டையடி மட்டுமல்ல, இதை மிகமோசமான இனவாதச் செயலாகவே கருதவேண்டியுள்ளது. இதற்கு, எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவிக்கிறேன்”.

2000 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக இருந்த திருமதி.சிறீநிதி நந்தசேகரன் அவர்கள் மீது, இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சியை அடியொற்றி, மீளவும் வடக்கின் தமிழ் நீதிபதி ஒருவர்மீது பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகையதொரு உயிர் அச்சுறுத்தல், இலங்கையின் நீதித்துறையின் இயங்குநிலையும் மெல்லமெல்ல இராணுவமயப்படுத்தப்படுவதற்கான எத்தனமாகவே தென்படுகிறது என்றும் கூறினார் சிவஞானம் சிறீதரன்.

நீதித்துறையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் இந்த நாட்டில், இன, மத ஆக்கிரமிப்புகளும், அடக்குமுறைகளும் எத்தனை வீரியமாய் இருக்கும் என்பதுபற்றி, சர்வதேச சமூகம் இனியேனும் கூருணர்வோடு செயலாற்ற வேண்டும் என்றும், இத்தகையதொரு நிலை, இன்னுமோர் தமிழ் நீதிபதிக்கு ஏற்படாதிருக்க வழிவகை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்றார் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்.