LOADING

Type to search

இலங்கை அரசியல்

கடும் பாதுகாப்பின் மத்தியில் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகைக்கு எதிராகப் போராட்டம்- மூவர் கைது

Share

நடராசா லோகதயாளன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராக வியாழக்கிழமை (4) பிற்பகல் தொடக்கம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பஸ்ஸில் ஏற்றப்பட்டு யாழ். பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஜனாதிபதி நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள நிலையில், யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வளாகத்துக்கு வெளியே நீர்த்தாரைப் பிரயோகிக்கும் வாகனங்கள், கலகமடக்கும் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்துக்கு உலங்கு வானூர்தியில் வருகை தரும் ஜனாதிபதி மாலை 3 மணியிலிருந்து 5.30 மணி வரை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், எதிர்ப்புப் போராட்டத்தையடுத்து ஜனாதிபதி மாலை 4.10 மணிக்குத்தான் அதிவிசேட பாதுகாப்புடன் யாழ். மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் பழைய பூங்காவுக்கு அருகிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இதையடுத்து அங்கு பொலிஸார் வீதித் தடைகளை அமைத்துப் போராட்டக்காரர்களைத் தடுத்து வைத்து நிறுத்தினர்.

இவ்வாறு ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியை ஜனாதிபதியின் வாகன அணி தாண்டிச் செல்லும்போது அதி வேகமாக பயணித்தது. இதேநேரம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படாது ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களின் ஊடகவியலாளர்களே அனுமதிக்கப்பட்டனர்.

இதேநேரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் மட்டுமே யாழ்ப்பாணம் சார்பில் கூட்டத்தில் பங்குகொண்டிருந்தனர்.