LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஜோர்டானில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் ‘வல்லமை’ இலங்கைக்கு இல்லை

Share

ஜோர்டான் நாட்டில் தொழிற்சாலை ஒன்று மூடப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் அங்கு பணியாற்றிய நூற்றுக்கணக்கான இலங்கைப் பெண்கள் அங்குள்ள இலங்கைத் தூதரகம் அவர்கள் தங்குவதற்கு மாற்று ஏற்பாடுகளோ அல்லது நாடு திரும்பவோ உதவும் வல்லமை இல்லாததாதால் அங்கு சிக்கி தவிக்கின்றனர்.

இந்திய மற்றும் வங்கதேசத்தின் தொழிலாளர்களுடன் இணைந்து இந்த இலங்கைத் தொழிலாளர்கள் ஜோர்டானின் தொழிற்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர். அதேவேளை இலங்கையர்களைத் தவிர இதர நாட்டவர் தமது தூதரகங்கள் மூலம் தங்குமிட ஏற்பாடுகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

’’அனைத்து தொழிலாளர்களும் அவதிப்படுகின்றனர், எனினும் தமது நாட்டைச் சேர்ந்த பணியாளர்களை மீட்டு அவர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் வல்லமை ஜோர்டானிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்” என ஜோர்டானின் முன்னணி மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கூறுகிறது.

”ஜோர்டானில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களிடமிருந்து எமக்கு முறைப்பாடுகள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது” என்று தலைநகர் அம்மானிலுள்ள தம்கீன் எனும் அமைப்பின் சட்டத்தரணி ஒருவர் கூறுகிறார். அந்த அமைப்பு ஜோர்டானில் பணியாற்றும் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளின் உரிமைகள் மற்றும் தொழிற்சங்கங்களை ஆதரிக்கிறது.

அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் நாட்டைவிட்டு ஓடியதால் ஊழியர்கள் ஊதியம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இதே நெருக்கடியை இந்திய மற்றும் வங்கதேச ஊழியர்கள் எதிர்கொண்டாலும், அவர்கள் தமது பிரச்சனைகளை வெளிப்படுத்தும் நம்பிக்கையுடன் அந்த தன்னார்வ அமைப்பை தொடர்புகொள்ள முடிவெடுத்தனர்.

ஜோர்டனின் ஷபாபி பகுதியில் செயற்பட்ட மூன்று ஆடைத் தொழிற்சாலைகளில் பணியற்றிய குறைந்தபட்சம் 350 இலங்கைத் தொழிலாளர்கள் அவை மூடப்பட்ட நிலையில் அங்கு சிக்கியுள்ளனர். அவர்கள் பணியாற்றிய அசீல் யுனிவர்செல் கார்மெண்ட்ஸ் நிறுவனம் வங்குரோத்து அறிவித்துவிட்டது, மேலும் தம்து உரிமையாளர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறுகிறது. இதன் காரணமாக ஊதியம் கிட்டாத தொழிலாளர்கள் நாடு திரும்ப முடியாமல் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

அங்கு வேலையிழந்த பெண்கள் விடுதிகள் மற்றும் அந்த நிறுவனத்தின் தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அங்கு சமூக ஊடகத் தகவல்களின் அடிப்படையில் அங்கு எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லை.

’வெளிநாடு வாழ் கதாநாயகர்கள்’கைவிடப்பட்டனர்

”இலங்கைக்கு எமது டொலர்கள் மட்டுமே வேண்டுமா?” என்று இலங்கைத் தூதரகத்திற்கு வெளியே கோபமாக கேட்கிறார் ஒரு பெண்.

“எனக்கு போதுமான உணவில்லை, எனக்கு குடிநீர் இல்லை, கடந்த மாதம் நான் நோய்வாய்ப்பட்டேன். எனது வேதனைகளை எடுத்துக்கூற யார் இருக்கிறார்கள்?” என்று அவர் மேலும் கேள்வி எழுப்புகிறார். ”அனைத்து வேலைகளும் செய்த பிறகு எம்மை இங்கிருந்து வெளியேற்றினால், எங்களை யார் கவனித்துக்கொள்வார்கள்? இந்த நாட்டில் நாங்கள் நிராதரவாக விடப்பட்டுள்ளோம். இங்கிருக்கும் தூதரம் என்ன செய்கிறது? தூதரகத்தில் இருப்பவர்கள் சும்மா வந்து சென்று போகிறார்கள். எவ்வித உதவியும் இல்லை.”

கண்ணீருடன் உருக்கமான ஒரு வேண்டுகோள் ஒன்றையும் அவர் விடுத்துள்ளார். ”நான்கு மாதங்களாக ஊதியம் நிலுவையில் உள்ளது, ஏழு மாதங்கள் சமூகப் பாதுகாப்பு கிடைக்கவில்லை. நாங்கள் எமது உரிமைகளை மட்டுமே கேட்கிறோம். எங்களைப் பெயரள்விற்கு மட்டுமே ‘வெளிநாடு வாழ் கதாநாயகர்கள்’ என்று கூறுகிறார்களா? அந்த தொழிற்சாலை ஒரு மாதமாக மூடியுள்ளது”.

அங்கு சிக்கியுள்ள பிரஜைகளை நாட்டிற்கு கொண்டுவரும் திட்டங்கள் எதையும் இலங்கை அரசு இறுதி செய்யவில்லை.

”இலங்கையர்களைப் பொறுத்தவரை, அவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் போன்ற உள்ளூர் முகவர்களிடம் பதிவு செய்த பிறகே ஜோர்டான் சென்றனர். சில அங்கு சுற்றுலா விசாவில் சென்று வேலை பார்க்கின்றனர். முதலாவது பிரிவினர் தொடர்பில் எம்மால் பொதுவான வழிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும், ஆனால் இரண்டாவது பிரிவினரைப் பொறுத்தவரையில் சிறப்பு முடிவு ஒன்று எடுக்கப்பட வேண்டும்” என்று கொழும்பில் செய்தியாளர்களிடன் பேசும்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பிற்கு பொறுப்பான ராஜாங்க அமைச்சர் ஜெகத் புஷ்பகுமார தெரித்தார்.

தாங்கள் ஏற்கெனவே ஜோர்டானிய தொழிற்துறை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறுகிறார்.

“ ஒரு தொழிற்சாலை மூடப்படும் போது, தொழிலாளர்களுக்கு இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். அங்கிருக்கும் உரிய அதிகாரி இது தொடர்பில் தொழிற்சாலையிடம் முறைப்பாடு செய்துள்ளார் எனவே, உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்ட பிறகு உரிய வழிமுறைகளை கடைபிடித்து சில இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளனர்.”

ஆனால் அங்கு சிக்கியுள்ள 350 பணியாளர்களின் நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்னதாக, இந்த ‘உரிய வழிமுறைகளை’வகுத்து, காத்திரமான நடவடிக்கை திட்டம் ஒன்றை எடுக்க அரசுக்கு எவ்வளவு காலமாகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.