LOADING

Type to search

இலங்கை அரசியல்

சாந்தனும் தமிழ் அரசியலும் | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

Share

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள், முப்பது ஆண்டுகளின் பின் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும் தொடர்ந்தும் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். தண்டிக்கப்பட்டவர்களில் இந்தியப் பிரஜைகளாக இருப்பவர்கள் முழுமையாக விடுதலை செய்யப்பட்டு விடார்கள்

அவர்கள் ஒருவராகிய பேரறிவாளனை விடுவிக்கக் கோரி அவருடைய தாயார் அற்புதம்அம்மாள் தொடர்ச்சியாகப் போராடினார்ஒரு முதிய தாயின் மகத்தான போராட்டம் அது. ஒரு தாய் அதுவும் முதிய தாய் தனது மகனுக்காக எப்படித் தொடர்ச்சியாகத், தளராது, விட்டுக் கொடுப்பின்றிப் போராடலாம் என்பதற்கு பேரறிவாளனின் தாய் ஒரு முன்னுதாரணம்.

ஈழப் போராட்ட பரப்பில் அன்னை பூபதி அவ்வாறு மகத்தான தியாகத்தைச் செய்தார். அவர் தன்னுடைய மகனுக்காகப் போராடவில்லை. போரில் தியாகி ஆகிய தன் மகனைப் போன்ற பல மகன்களுக்கும் மகள்களுக்குமாக, மக்களுக்குமாக அவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். பூபதிக்கு அடுத்தபடியாக அற்புதம்அம்மாள் ஒரு முன்னுதாரணமாகக் காணப்படுகிறார்.

முடிவில் பேரறிவாளனும் உட்பட இந்திய பிரஜைகள் தமிழக அரசால் விடுவிக்கப்பட்டார்கள். ஆனால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஈழத் தமிழர்கள் சிறப்பு முகாம்களில் தொடர்ந்தும் வைக்கப்பட்டார்கள். அதற்குக் கூறப்பட்ட காரணம் என்னவென்றால் அதுபோன்ற பாரதூரமான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு விடுதலை அல்லது மன்னிப்பு வழங்கப்பட்ட பின் அவர்கள் இந்திய மண்ணில் தொடர்ந்தும் தரித்திருப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதாகும். சட்டச் சிக்கல் காரணமாக சம்பந்தப்பட்ட நான்கு ஈழத் தமிழர்களும் நாடு கடத்தப்பட வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது.எனினும் அவர்கள் நாடு கடத்தப்படவில்லை. அவர்கள் மீண்டும் திருச்சி சிறப்பு முகாமில் கடந்த 15 மாதங்களாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்புதிய சிறப்பு முகாமானது இதற்கு முன்பு அவர்கள் வைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமுடன் ஒப்பிடுகையில் வசதிகள் குறைவானது. அங்கே ஒரு சிறிய அறைக்குள் இருவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். 15-க்கும் குறையாத காவலர்கள் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். அந்த அறையோடு கழிப்பறையும் குளியலறையும் இணைக்கப்பட்டுள்ளன. எனவே அவர்கள் அறையை விட்டு வெளியே வருவதற்கான தேவைகள் குறைவு. அதற்கு முன் இருந்த சிறப்பு முகாமில் அவர்கள் காலை 6 மணிக்கு வெளியே வந்தால் மாலை 6:00 மணி வரையிலும் நடந்து திரியலாம்; உடற்பயிற்சி செய்யலாம்; நூலகத்திற்கு செல்லலாம்;பிரார்த்தனைகளில் ஈடுபடலாம். ஆனால் புதிய முகாமில் அந்தளவு வசதிகள் இருக்கவில்லை அது ஒரு புதிய வகைத் தண்டனையாக அவர்களுக்கு அமைந்தது. ஏற்கனவே நோயாளியாகிய சாந்தன் இப்பொழுது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் அளவுக்கு நோயாளி ஆகிவிட்டார். சிறைவைக்கப்பட்டதிலிருந்து இன்றுவரையிலும் அவருடைய தாயார் அவரைப் பார்க்கவில்லை. முதிய தாயார் விமான பயணங்களை செய்ய முடியாத அளவுக்கு ஆஸ்துமா நோயாளியாக இருக்கிறார்.

விடுவிக்கப்படாத நான்கு ஈழத் தமிழர்களும் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டும்.ஆனால் அதில் மூவர் இலங்கைக்கு வர விரும்பவில்லை. அவர்களுடைய உறவினர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கிறார்கள். அதனால் அவர்கள் அந்தந்த நாடுகளுக்குப் போக விண்ணப்பித்திருந்தார்கள். ஆனால் இந்திய சட்டங்களின்படி அவ்வாறு தமிழகத்தில் இருந்து ஏனைய நாடுகளுக்கு செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டு, அவர்கள் தொடர்ந்தும் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவராகிய சாந்தன் நாட்டுக்குத் திரும்ப விரும்புகிறார்.தனது தாய்,சகோதரர்களோடு தனது காலத்தைக் கழிப்பதற்கு விரும்புகிறார். அவர் ஒர் ஆன்மீகவாதி போலாகிவிட்டார் என்று அவருடைய வழக்கறிஞர்களும் உறவினர்களும் கூறுகிறார்கள்.ஆனால் அவர் சன்னியாசியாக இருந்தாலும் அவரை நாட்டுக்குள் வர விடுவதற்கு இலங்கை அரசாங்கம் தயாரா என்பதுதான் இங்குள்ள முக்கிய கேள்வி ஆகும்.

பேரறிவாளனைத் தொடர்ந்து, சாந்தனம் உட்பட ஏனையவர்கள் விடுவிக்கப்பட்ட பொழுது,அவர்கள் தொடர்பாக,அப்பொழுது இலங்கை அமைச்சராக இருந்த ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். அவர்கள் நாட்டுக்குத் திரும்பி வந்தால் இங்குள்ள சட்டங்களின்படி விசாரிக்கப்படுவார்கள் என்று அந்த அமைச்சர் உரையாற்றியிருந்தார். அதாவது அவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்படும் நிலைமைகள் உண்டு என்று பொருள். இதனை சாந்தனின் வழக்கறிஞர்களும் அந்த வழக்கில் ஈடுபாடு கொண்ட தமிழக சட்டச் செயற்பாட்டாளர்களும் அப்பொழுது சுட்டிக் காட்டியிருந்தார்கள்.

எனவே இது விடயத்தில் முடிவெடுக்க வேண்டியது இலங்கைதான்.இலங்கைத் தீவின் விலை விவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சுந்தான். எனவே,அது தொடர்பாக முடிவுகளை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தின் மீது நிர்பந்தங்களை பிரயோகிக்க வேண்டியது நாட்டில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான். இந்த அடிப்படையில் சாந்தனின் குடும்பத்தவர்கள் நாட்டில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் உரையாடியிருக்கிறார்கள். சில அரசியல் செயற்பாட்டாளர்கள் விக்னேஸ்வரனும் உட்பட தமிழ் மக்கள் பிரதிநிதிகளோடு இதுதொடர்பாக உரையாடியிருக்கிறார்கள். பல மாதங்களுக்கு முன்பு ஒரு நீண்ட மின்னஞ்சல் விக்னேஸ்வரனுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதற்கு அவர் இன்றுவரை பதில் கூறவில்லை என்றும் ஒரு தகவல் உண்டு.யாருமே அது தொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை. நாடாளுமன்றத்தில் உரையாற்றியது; அறிக்கை விட்டது; சாந்தனின் வீட்டுக்குச் சென்று அவருடைய தாயாரைச் சந்தித்து ஆறுதல் கூறியது, என்பவற்றிற்கும் அப்பால் எந்த ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரிடம் அது தொடர்பாக நடைமுறைச் சாத்தியமான செயற்பாடுகள் இருக்கவில்லை.

சாந்தனின் வீட்டுக்குச் சென்று அவருடைய தாயாரோடு உரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமந்திரன் ஒருவர். அதன்பின் அவர் அது தொடர்பாக ஜனாதிபதியோடு பேசியதாகவும், ஆனால் ஜனாதிபதி தென்னிலங்கையில் ஏற்படக்கூடிய விளைவுகளையிட்டுப் பயப்பட்டதாகவும் மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் அவருடைய பத்திரிகையில் எழுதியுள்ளார்.

இப்பொழுது சாந்தன் நோயாளியாகி விட்டார்.ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய குடும்பத்தவர்கள் விவகாரத்தை மீண்டும் -15 மாதங்களின் பின்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். பெரும்பாலான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்திருக்கிறார்கள்.

தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் சிறீதரன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியதாகத் தகவல். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ் இந்திய துணை தூதரகத்திற்கு ஒரு கடிதம் எழுதியதாகத் தகவல்.கடிதத்துக்கு இந்திய துணைத் தூதரகம் பதிலளித்திருப்பதாகவும் ஒரு தகவல். சாந்தனைத் திருப்பி அனுப்புவதற்கான பேப்பர் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகத் துணைத் தூதரகம் பதில் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சாந்தனைத் திருப்பி அனுப்புவதற்கு தடையாக இருப்பது எதுஇலங்கைத் தீவின் வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் தான் அது தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும். சாந்தனை நாட்டுக்குள் வர விடுவது என்ற முடிவை வெளிவிவகார அமைச்சு எடுக்குமாக இருந்தால் அதற்கு வேண்டிய தற்காலிக பயண ஆவணங்களைக் கொடுக்குமாறு சென்னையில் உள்ள இலங்கை உப தூதரகத்திற்கு உத்தரவுகளை வழங்கலாம்.

சாந்தன் அல்லாத ஏனைய மூவரின் விடயத்தில் இந்திய மத்திய அரசு முடிவெடுக்க வேண்டியுள்ளது. அவர்களை புலம்பெயர்ந்த நாடுகளுக்கு செல்ல அனுமதிப்பதா இல்லையா என்று. ஆனால் சாந்தனின் விடயத்தில் முடிவு இலங்கை அரசாங்கத்தின் கையில்தான் உண்டு. எனவே அதற்கு வேண்டிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியது நாட்டில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனித உரிமை அமைப்புகளும் குடிமக்கள் சமூகங்களும்தான். யாருக்கு கடிதம் எழுத வேண்டுமோ, யாருடன் நேரடியாகப் பேச வேண்டுமோ அவர்களோடு உரையாடியிருந்திருக்க வேண்டும்.

முடிவில், சலித்துப் போன சாந்தனின் தாயார், கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அணுகியதாகத் தெரிகிறது. தேவானந்தா நீதி அமைச்சரோடு அதுபற்றி உரையாடியதாகக் கூறப்படுகிறது. மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினராகிய அங்கஜன் ராமநாதனும் இந்த விடயத்தில் அக்கறை காட்டியிருக்கிறார். சிறீதரன் வெளிவிவகார அமைச்சரோடு தொலை பேசியில் உரையாடியதாக ஒரு தகவல்.

அதாவது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் மட்டுமன்றி அதற்கு வெளியே நிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விடயத்தில் அக்கறை காட்டியிருப்பதாகத் தெரிகிறது. சிலசமயம் அது பயன்தரக்கூடும். ஆனால் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்திருக்க வேண்டிய ஒரு செயற்பாடு அது.கடந்த 15 மாதங்களாக அவர்கள் பொருத்தமான விதத்தில் பொருத்தமான தரப்புகளை அணுகியிருக்கவில்லை என்று தெரிகிறது. அதாவது அது தமிழ்த் தேசிய அரசியலின் செயலின்மையைக் காட்டுகிறது