“Small and medium-sized businesses are the backbone of Markham – Thornhill”
Share
– Logan Kanapathi-MPP for Markham Thornhill
“மார்க்கம்-தோர்ன்ஹில் மாகாண அரசின் தொகுதியின் முதுகெலும்பாக விளங்குபவை சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களே ஆகும்!-
மாகாண அரசின் உறுப்பினர் லோகன் கணபதி

“நான் பிரதிநிதித்துவம் செய்யும் மார்க்கம்-தோர்ன்ஹில் மாகாண அரசின் தொகுதியின் முதுகெலும்பாக விளங்குவன சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களே ஆகும். எனது பல வருட அரசியல் மற்றும் மக்கள் தொடர்பு சார்ந்த அனுபவத்தில் இந்த தொகுதிக்குள் அடங்கும் தொழில் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் தொழில் அனுபவம் மற்றும் தொழிற்கல்வி ஆகியன உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களாக விளங்குகின்றன. இதன் மூலம் பல குடும்பங்கள் சிறப்பாக இந்த மாகாணத்தில் வாழ்வதற்கு வழி தொடர்ந்த வண்ணம் இருக்கும். எனவே இவ்வாறான சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஆதரிக்கும் பொறுப்பும் கடமையும் எமது மாகாண அரசாங்கத்திறகு உண்டு என்பதை எமது முதல்வர் டக் போர்ட் அவர்களும் அமைச்சர் அவர்களும் நானும் உணர்கின்றோம்”
இவ்வாறு 20-05-2026 அன்று புதன்கிழமை பிற்பகல் மார்க்கம் நகரில், 430 Steelcase Rd E, Markham, ON L3R 1G2. என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Sable Metal Fabrication என்னும் கட்டட நிர்மானம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான உலோகப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் தொழில்நிறுவனத்தில் நடைபெற்ற ஒன்றாரியோ அரசு சார்ந்த வைபவத்தில் உரையாற்றுகையில் எமது மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சு ஒன்றின் பாராளுமனறச் செயலாளருமான லோகன் கணபதி அவர்கள் தெரிவித்தார்
மேற்படி நிகழ்வு ஒன்றாரியோ மாகாணத்தின் Ministry of Economic Development, Job Creation, and Trade அமைச்சின், (Associate Minister of Small Business) இணை அமைச்சர் கௌரவ Nina Tangri அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பல ஒன்றாரியோ மாகாண அரசின் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அரசாங்கத்தின் உதவிகள் வழங்கும் திட்டம் தொடர்பாக அமைச்சரும் இன்னும் பலரும் உரையாற்றினார்கள்.
அங்கு உரையாற்றிய இணை அமைச்சர் நினா டாங்ரி அவர்கள் தனது உரையில் “டிஜிட்டல் தொழில் நுட்ப உத்திகளும் அவற்றின் பயன்பாடுகளும் வளர்ச்சியடைந்து வரும் அவற்றின் மூலம் இவ்வாறான தொழில் வழங்கும் நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க வேண்டிய பொறுப்பு எம்மிடம் உண்டு
ஒன்ராறியோவின் பொருளாதாரம் சிறு வணிகங்களை அடிப்படையாகக் கொண்டது. எனவே, தொழில் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ள தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பது மிகவும் அவசியமாகும். டிஜிட்டல் திறன் மையத்தில் செய்யப்படும் இந்த புதுப்பிக்கப்பட்ட முதலீடு, மேலும் பல உள்ளூர் நிறுவனங்கள் அதிநவீன டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி செயல்பாட்டுத் திறனையும் உற்பத்தியையும் அதிகரிக்கவும் மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவங்களை வழங்கவும் உதவும் என நான் நம்புகின்றேன்” என்று தெரிவித்தார்


















