அநுரவின் அரசாங்கமும் வெளியிடாத, 7 ஆண்டுகள் தாமதமான அறிக்கை குறித்து ஐ.நா.வின் வெளிப்படுத்தியது!
Share
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜைகள் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்குள்ளாகும் அபாயம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக, ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்பட்ட இரகசிய அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கு இலங்கையின் அநுரவின் அரசாங்கம் தவறியுள்ளமை தெரியவந்துள்ளது.
சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுக்குழு, இலங்கைக்கான தமது பத்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பின்னரே, இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளிப்படுத்தியுள்ளது. விசாரணைக்கு முன்னர் நீண்ட காலம் தடுப்புக்காவலில் வைப்பது, சிறைச்சாலைகள் நெரிசலாகக் காணப்படுவது மற்றும் தடுப்பு மையங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து கவலை தெரிவித்துள்ள உபகுழு, சித்திரவதைகளை தடுப்பதற்கான தேசிய பொறிமுறையை (NPM) வலுப்படுத்துமாறு ஜெனிவாவிலிருந்து வெளியிட்ட அறிக்கையின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவே, சித்திரவதைகளைத் தடுப்பதற்காக இலங்கையில் நிறுவப்பட்டுள்ள தேசிய பொறிமுறையாகும்.
“எங்களது முதலாவது விஜயம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், நாம் முன்னர் வழங்கிய பல பரிந்துரைகள் இதுவரை முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. எனவே, சுதந்திரத்தை இழந்த மக்கள், தாங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையில் எந்தவொரு முன்னேற்றத்தையும் இதுவரை காணவில்லை” என சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உபகுழுவின் தலைவர் அயிஷா ஷுஜுனே மொஹம்மட் தெரிவித்துள்ளார்.
ஜூன் 14 முதல் 25 வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் தங்கியிருந்த ஐ.நா தூதுக்குழுவானது, அந்த காலப்பகுதியில் சிறைச்சாலைகள், பொலிஸ் நிலையங்கள், விளக்கமறியல், புனர்வாழ்வு முகாம்கள் மற்றும் ஏனைய தடுப்பு மையங்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்காமல் விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், அரசாங்க அதிகாரிகள், NPM உறுப்பினர்கள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்புகளையும் சந்தித்துள்ளது.
உப குழுவின் வருகையின் ஆரம்பக்கட்டத்திலேயே நாட்டின் முன்னணி மனித உரிமை அமைப்புகளின் ஆர்வலர்கள் மற்றும் சட்டத்தரணிகள், அவர்களை கொழும்பில் வைத்து சந்தித்தனர். இதன்போது சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்களின் நிலைமை, பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கைதுகளின் போது நிகழும் மரணங்கள் உள்ளிட்ட சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் மற்றும் அரச மனித உரிமை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் உபகுழுவிற்கு தகவல்களை வழங்கியிருந்தனர்.
இருப்பினும், கைதுகளின் போது நிகழும் மரணங்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் குறித்து கவனம் செலுத்தாத உபகுழுவின் அறிக்கையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயல்பாடு குறித்து திருப்திகரமான முறையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
“சித்திரவதை மற்றும் கொடுமைப்படுத்தல்களை தடுப்பதற்கு, சுதந்திரமான, போதுமான வளங்களைக் கொண்ட மற்றும் திறம்பட செயல்படும் ஒரு தேசிய பொறிமுறையானது இன்றியமையாத காரணியாகும். பதவிகளுக்கு அப்பால் சென்று, சுயாதீனம், வினைத்திறன் மற்றும் செயற்பாட்டுத் திறனை, தொடர்ந்து உறுதிப்படுத்துவது என்பது, சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற, இழிவான நடத்தைகள் அல்லது தண்டனைகளுக்கு எதிரான ஒப்பந்தத்தின் விருப்ப நெறிமுறையின் (OPCAT) கீழ் உள்ள கடமையாகும்” என உபகுழுவின் தலைவர் மொஹம்மட் நினைவுபடுத்தியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதியன்று, சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தத்தின் விருப்ப நெறிமுறைக்கு, இலங்கை இணங்கியது.
தமது பரிந்துரைகளுடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ள இரகசிய அறிக்கையையும், அதேபோன்று நல்லாட்சி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கையையும் பகிரங்கப்படுத்துமாறு இலங்கைக்கான வருகையின் பின்னர், சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உபகுழு கோரிக்கை விடுத்துள்ளது. இது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலையும், அத்துடன் சித்திரவதைகளை ஒழிப்பதற்கான பொது உரையாடலை மேம்படுத்தவும் ஊக்குவிக்கும் என உபகுழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.















