LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்காவில் மர்ம நபர்களால் இந்தியர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது

Share

 அமெரிக்காவில் வசித்து வந்த தெலுங்கானாவைச் சேர்ந்த 28 வயதான இந்தியர் அன்ஷுல் குன்சா. ஐதராபாத்தில் பி.டெக் படிப்பை முடித்த அன்ஷுல், தனது குடும்பத்தினரின் ஆதரவுடன் முதுகலைப் படிப்பைத் தொடர அமெரிக்கா சென்றார். உயர்கல்வியை நிறைவு செய்த பின்னர் அங்குள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அதேசமயம், கூடுதல் வருமானம் பெறும் நோக்கில் வார இறுதி நாட்களில் பீட்சா விநியோகப் பணியையும் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு பீட்சா டெலிவரி செய்ய செல்லும் போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஆளில்லாத ஒரு இடத்திற்கு பீட்சா டெலிவரி செய்யும்படி வந்த போலி ஆர்டரை அன்ஷுல் பெற்றுள்ளார். அந்த முகவரிக்கு சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். அன்ஷுலின் குடும்பத்தினர் தெரிவித்ததன்படி, அவரிடமிருந்து எந்த பொருளும் கொள்ளையடிக்கப்படவில்லை. இதனால், இந்தக் கொலைக்கான உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. தனது சகோதரரின் உடலை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் அன்ஷுலின் சகோதரி தன்வி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “பென்சில்வேனியாவில் வசித்து வந்த இந்தியரான அன்ஷுல் குன்சாவின் மறைவு எங்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்ஷுலின் குடும்பத்தினருடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.