ஆந்திராவில் ரூ.18,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்
Share
ஆந்திர மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்த மாநிலத்தில் சுமார் ரூ.18,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அதன்படி விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள போகபுரத்தில், ரூ.5,700 கோடி மதிப்பிலான அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில், விசாகப்பட்டினத்தில் அமையவுள்ள ரூ.460 கோடி மதிப்பிலான செமிகண்டக்டர் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இது இந்திய செமிகண்டக்டர் இயக்கத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஆந்திர பிரதேசத்தின் முதல் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை ஆகும். ஆண்டுக்குச் சுமார் 9.6 கோடி செமிகண்டக்டர் சிப்களை உற்பத்தி செய்வதுடன், செமிகண்டக்டர் உற்பத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒரு வலுவான துணை சூழலமைப்பையும் இந்த ஆலை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சுமார் ரூ.5,550 கோடி முதலீட்டில் ‘ஸ்பெஷல் பர்பஸ் வெஹிக்கிள்’ மூலம் ‘பவர்கிரிட்’ நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் கர்னூல்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலம் – முதல் கட்ட திட்டத்திற்கான மின்கடத்தி அமைப்பிற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். மேலும், சுமார் ரூ.3,550 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட கர்னூல் காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல் மண்டலங்களுக்கான மின் கடத்தி அமைப்பு திட்டங்களையும், பவர்கிரிட் நிறுவனத்தால் ரூ.820 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட அனந்தபுரம்(2,500 மெகாவாட்) மற்றும் கர்னூல் (1,000 மெகாவாட்) சூரிய ஆற்றல் மண்டலங்களுக்கான மின் கடத்தி அமைப்பு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, ரூ.1,880 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அவற்றை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். அதோடு, தேசிய நெடுஞ்சாலை-565 பெஞ்சலகோனா–ஏர்பேடு பிரிவில் உள்ள லிங்கசமுத்திரத்தில், உயர்மட்டப் பாலத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.















