ஆப்பிரிக்க நாடுகளுக்கு இனி வரி இல்லை – சீனா அறிவிப்பு
Share
சீனாவுடன் தூதரக உறவுகளை கொண்டுள்ள, வளர்ச்சியடைந்த நாடுகளாக வகைப்படுத்தப்படாத ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா பூஜ்ஜிய வரிச்சலுகையை அறிவித்து உள்ளது. அதன்படி சுங்க வரி சலுகையின் கீழ் வரும் குறிப்பிட்ட பொருட்களுக்கு மே 1-ந் தேதி முதல் இனி சுங்கவரி இல்லை. அதாவது சுங்கவரி பூஜ்ஜியமாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகை வரும் 2026 மே 1 முதல் 2028 ஏப்ரல் 30-ந் தேதி வரை அனுமதிக்கப்படும் என்று சீனாவின் சுங்கவரி ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 2 ஆண்டு அமலாக்கக் காலத்தில், தொடர்புடைய ஆப்பிரிக்க நாடுகளுடன் பகிரப்பட்ட வளர்ச்சிக்கான சீனா – ஆப்பிரிக்க பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை மற்றும் கையொப்பமிடுதலை சீனா தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று அது கூறி உள்ளது. “சீனாவின் பூஜ்ஜிய-சுங்கவரி கொள்கை 53 ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பொருந்தும்” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறினார். அதே நேரத்தில், “ஆப்பிரிக்காவிலிருந்து சீனாவுக்கு விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான பசுமை வழித்தடத்தை மேம்படுத்தி, சீனாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகத்தை சீராக அதிகரிக்கும்” என்றும் அவர் கூறினார்.















