LOADING

Type to search

உலக அரசியல்

டிரம்ப் – புதின் தொலைபேசியில் உரையாடல்: போர் முடிவுக்கு வருமா?

Share

ஈரான்-அமெரிக்கா இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. கடந்த 26-ந் தேதி நடைபெற இருந்த 2-வதுகட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தானுக்கு சென்றிருந்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ரஷியாவுக்கு சென்றார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது, ஈரான் மக்களுக்கு புதின் புகழாரம் சூட்டினார். தங்கள் இறையாண்மையை பாதுகாக்க ஈரான் மக்கள் துணிச்சலுடனும், வீரத்துடனும் போரிடுவதாக அவர் பாராட்டு தெரிவித்தார். மேற்கு ஆசியாவில் கூடிய விரைவில் அமைதியை கொண்டுவர தன்னால் இயன்றதை செய்ய ரஷியா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில், ஈரான் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோர் தொலைபேசியில் பேசியுள்ளனர். இந்த உரையாடல் சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் கூறுகையில், மத்திய கிழக்கு போர் மற்றும் உக்ரைன் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். ஈரான் மற்றும் வளைகுடா தொடர்பான சூழ்நிலைக்கு இருநாட்டு அதிபர்கள் சிறப்பு கவனம் செலுத்தினர். ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் டொனால்டு டிரம்பின் முடிவை விளாடிமிர் புதின் சரியானதாக கருதுகிறார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் ராணுவ நடவடிக்கையில் இறங்கினால், ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் தவிர்க்க முடியாத மற்றும் மிகவும் சேதப்படுத்தும் விளைவுகள் ஏற்படும் என்பதையும் புதின் சுட்டிக்காட்டினார். மீண்டும் போர் தொடங்கினால் சர்வதேச சமூகம் பெரிய அளவில் பாதிக்கும் என்றும், ராஜதந்திர முயற்சிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்றும் டிரம்பிடம் புதின் கூறியதாக யூரி உஷாகோவ் கூறினார். இருநாட்டு அதிபர்களில் பேச்சுவார்த்தையால் ஈரான் மீதான போர் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.