இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு வீர வணக்கத்துடன் ஆழ்ந்த இரங்கல்
Share
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அழியாத தடம் பதித்த மகத்தான படைப்பாளி, இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் அன்று 10.06.2026 ன்றுகாலமானார் என்ற செய்தி பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாரதிராஜா அவர்கள் ஒரு திரைப்பட இயக்குநர் மட்டுமல்லர். அவர் தமிழர் பண்பாடு, தமிழ் மண், தமிழ் கிராமிய வாழ்வியல் மற்றும் தமிழின உணர்வுகளைத் திரையுலகின் மையத்திற்கு கொண்டு வந்த உன்னதமான கலைஞர். தமிழ்த் திரைத்துறை பிறமொழி ஆதிக்கத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ் மண்ணின் மண்வாசனையையும், கிராமிய மக்களின் வாழ்க்கை முறையையும், தமிழர் உணர்வுகளையும் திரைப்படங்களில் பிரதிபலித்து புதிய பாதையை உருவாக்கிய புரட்சியாளர்.
“என் இனிய தமிழ் மக்களே” என்று அன்போடும் உரிமையோடும் அவர் மக்களை அழைத்த விதம், அவரது தமிழ்ப்பற்றையும் மக்கள்மீதான பாசத்தையும் வெளிப்படுத்தியது. தமிழர் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கிய அவரது திரைப்படங்கள் வெறும் கலைப் படைப்புகள் அல்ல; அவை தமிழர் சமூகத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் அடையாளத்தைப் பதிவு செய்த ஆவணங்களாகவும் விளங்குகின்றன.
திரையுலகில் அவர் செய்த பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகள் உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்றிருந்தாலும், அவர் தனது வாழ்க்கையை வெறும் கலை உலகிற்குள் மட்டுமே வரையறுத்துக் கொள்ளவில்லை. தமிழர் உரிமைகள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தருணத்திலும் தனது குரலை உயர்த்திய சமூகப் போராளியாகவும் திகழ்ந்தார்.
தமிழீழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைகளை எதிர்த்து அவர் வெளிப்படையாகக் குரல் கொடுத்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், ஈழத் தமிழர்களின் மனித உரிமை பாதுகாப்பிற்கும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்தார். தமிழீழ இனப்படுகொலையைக் கண்டித்து இராமேசுவரத்தில் அவர் தலைமையில் நடைபெற்ற திரைப்படத் துறையினரின் போராட்டம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வாகும்.
அதேபோல் காவிரி நீர் உரிமை, ஏழு தமிழர் விடுதலை, மொழி உரிமை, மாநில உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு தமிழர் நலப் போராட்டங்களிலும் அவர் பங்கேற்று தனது பங்களிப்பை வழங்கினார். திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழர் அரசியல், சமூக மற்றும் தேசிய உரிமைப் போராட்ட வரலாற்றிலும் அவர் ஒரு முன்னோடி ஆளுமையாக நினைவுகூரப்படுவார்.
ஈழத் தமிழர்களை நேசித்தார். அவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார். துன்பத்தில் இருந்த தமிழர் இனத்திற்காக தனது புகழையும் செல்வாக்கையும் பயன்படுத்திய நேர்மையான தமிழ் உணர்வாளராக வாழ்ந்தார்.
இன்று அவர் உடலால் எம்மிடையே இல்லாவிட்டாலும், அவரது படைப்புகள், அவரது குரல், அவரது தமிழ்ப்பற்று மற்றும் தமிழர் மீதான அன்பு என்றும் நிலைத்திருக்கும்.
தமிழ்த் திரையுலகம் ஒரு மகத்தான கலைஞரை இழந்துள்ளது. தமிழினம் ஒரு உறுதியான குரலை இழந்துள்ளது. உலகத் தமிழர்கள் தங்களின் உண்மையான நண்பரையும் ஆதரவாளரையும் இழந்துள்ளனர்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
சென்று வாருங்கள் இயக்குநர் இமயமே!
உங்களை வழியனுப்பி வைக்கிறோம்; ஆனால் உங்கள் நினைவுகளையும், உங்கள் கலைச் சாதனைகளையும், தமிழர் உரிமைக்காக நீங்கள் எழுப்பிய குரலையும் என்றும் மறக்கமாட்டோம்.
வீர வணக்கம்! ஆழ்ந்த இரங்கல்கள்!
ஜாம்பவான்கள் ஒருபோதும் முழுமையாக இறப்பதில்லை; அவர்கள் தங்களால் ஊக்கமளிக்கப்பட்ட மக்கள் மூலமாகவும், தாங்கள் முன்னெடுத்த கொள்கைகள் மூலமாகவும் என்றென்றும் வாழ்கிறார்கள்.
எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன்
தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர்
10/06/2026
















