LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கை நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது நீடிப்பைத் தீர்மானிக்க சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் இல்லை என்கிறார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

Share

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானத்துக்காகச் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“ஒரு சட்டத்தரணி என்ற ரீதியில் இந்த அரசமைப்புத் திருத்தத்துக்காகச் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை.

அரசமைப்பின் 83ஆவது சரத்தில் எவற்றுக்கு மக்கள் தீர்ப்பு அவசியம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அரசு மேற்கொள்ளும் இந்த ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு மற்றும் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திருத்தங்கள் அந்த எந்தவொரு சரத்திலும் உள்ளடங்கவில்லை. கடந்த காலத்தில் 20ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட போதும் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவில்லை.

இந்தத் திருத்தத்தை எவரேனும் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தி, அதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால் மட்டுமே அரசு அத்தகைய நடைமுறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். எனினும், தற்போதைய சட்டச் சூழலின்படி அவ்வாறு தீர்ப்பு வரும் என்று நான் நினைக்கவில்லை.

நீதிமன்றங்களில் வழக்குகள் மாதக்கணக்கில், வருடக் கணக்கில் தாமதமாவதால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். நீதித்துறை அமைப்பும் ஏனைய துறைகளைப் போலவே திறமையாகச் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

கடந்த 10-15 வருடங்களாக எதிர்காலத் தேவைகளைக் கணித்து நீதியரசர்களின் எண்ணிக்கையை உயர்த்தாததாலேயே இன்று வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.

இந்த ஓய்வுபெறும் வயது நீடிப்பானது மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்துக்கு மட்டும் அல்லாமல், நீதித்துறை அமைப்புச் சட்டத்தைத் திருத்தி மாவட்ட நீதிபதிகள், நீதிவான் நீதிபதிகள் உள்ளிட்ட அனைவருக்குமே ஓய்வுபெறும் வயதை 2 ஆண்டுகள் நீடிக்கின்றோம். 1978ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஓய்வுபெறும் வயது திருத்தப்படவில்லை. பெரும்பான்மையான சர்வதேச நாடுகளில் ஓய்வுபெறும் வயது 70 ஆக உள்ளதால், அனுபவம் வாய்ந்த நீதிபதிகளின் சேவையை மேலும் சில ஆண்டுகள் பயன்படுத்திக்கொள்வதே இதன் நோக்கமாகும்.

நீதித்துறைச் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதுடன், இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் வழக்குகள் தாமதமாகும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.” – என்றார்.