ஈரான் உச்ச தலைவர் காமேனி இறுதிச்சடங்கில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்
Share
ஈரான் உச்ச தலைவர் காமேனி இறுதிச்சடங்கில் இந்தியாவின் சார்பில் பீகார் மாநில ஆளுனர் சையத் அதா ஹஸ்னைன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா ஆகியோர் பங்கேற்கின்றனர். ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில், மினாப் நகரில் உள்ள பள்ளியை சேர்ந்த குழந்தைகள் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர். காமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலம் ஜூலை 4-ம் தேதி தொடங்கி, ஜூலை 9-ம் தேதி உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இறுதிச்சடங்கு சடங்குகளுக்கு பிறகு ஜூலை 9-ஆம் தேதி அவரது உடல் மஷ்ஹாத் நகரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான் விடுத்த அழைப்பை ஏற்று, இந்திய அரசு சார்பில் இந்த இரு உயர்மட்ட பிரதிநிதிகளும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணங்கள் உள்ளதால் அவர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. இதனால் இந்த இறுதி சடங்கில் இந்தியாவின் சார்பில் பீகார் மாநில ஆளுனர் சையத் அதா ஹஸ்னைன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் தங்களது அதிகாரப்பூர்வ அஞ்சலியை செலுத்தி இரங்கல் தெரிவிக்கவுள்ளனர்.















