LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா கந்தசாமி ஆலய கந்தவேளின் பேரருளால் இனிதே நிறைவுற்ற மகோற்சவமும், நன்றியுரையும் ஆடிவேல் மற்றும் கார்த்திகேயன் விழா அழைப்பும்!

Share

கனடா கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவப் பெருவிழா, நேற்று பூங்காவனம் மற்றும் பக்தர்களால் பக்திப்பரவசத்துடன் போற்றப்படும் திருக்கல்யாண வைபவங்களுடன் மிகச் சிறப்பாகவும் நிறைவாகவும் நிறைவுற்ற வேளையில், இந்த தெய்வீகத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். முதலாம் நாள் கொடியேற்றத் திருவிழா முதல் இறுதி நாள் திருக்கல்யாணம் வரை அனைத்து மங்களகரமான ஆன்மீகக் கிரியைகளையும், இந்து சமய ஆகம விதிகளின்படி மிகத் துல்லியமாகவும், அளப்பரிய பக்தியோடும், அர்ப்பணிப்புணர்வோடும் தலைமை தாங்கி நடத்திய மகோற்சவப் பிரதம குருக்கள் சிவபங்குசம் குருக்கள் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும் புண்ணியக் கோடிகளையும் சமர்ப்பிக்கின்றோம்.

அதேபோல், கடந்த இருபத்தாறு நாட்களாக இந்த மாபெரும் பெருவிழாவை எவ்வித குறைபாடுகளுமின்றி, மிகச் சிறந்த நிர்வாகத் திறமையோடும், வியக்கத்தக்க வழிகாட்டுதலோடும், அர்ப்பணிப்போடும் முன்னின்று வழிநடத்திய ஆலயத் தலைவர் முத்துராஜலிங்கம் சுப்பிரமணியம் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்திருவிழா இத்தனை பிரம்மாண்டமாக வெற்றிபெற தங்களின் மேலான பங்களிப்பை வழங்கிய அனைத்து இந்து குருமார்கள், அர்ச்சகர்கள் மற்றும் இரவு பகல் பாராது, அடியார் கூட்டத்தை முறைப்படுத்தி, ஆலயப் பணிகளை இன்முகத்தோடு கவனித்த எண்ணற்ற தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள் உரியதாகுக.

ஆலயப் பெருவெளியை கைலாயமாக மாற்றிய நாதஸ்வர, தவில் வித்துவான்கள் மற்றும் தங்களின் கலைத்திறமையால் பக்தர்களைக் கட்டிப்போட்ட பல்வேறு கலைக் கலைஞர்களின் தெய்வீகப் பங்களிப்பிற்கும் எங்களது பாராட்டுகளும் நன்றிகளும். இறுதியாக, திருவிழா காலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு பசியார அன்னதானம் வழங்கி, உணவை மிகத் தூய்மையாகவும் சுவையாகவும் தயாரித்துப் பரிமாறிய சமையல் கலைக் குழுவினருக்கும் மற்றும் அன்னதானப் பணித் தொண்டர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அனைவரினதும் இந்த உன்னதமான சிவத்தொண்டு என்றும் போற்றத்தக்கது.

இந்த ஆன்மீகப் பெருவிழாவின் தொடர்ச்சியாக, வருகின்ற வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் ஆலய வளாகத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள “பெருமகிழ்ச்சி ஊட்டும் ஆடிவேல் மற்றும் கார்த்திகேயன் கலைக் கொண்டாட்டங்களுக்கு” உங்களை அன்போடு அழைக்கின்றோம். பக்திப் பாடல்கள், நடனங்கள் மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் அரங்கேறவிருக்கும் இந்த எழுச்சிமிகு கொண்டாட்டத்தில் அடியார் பெருமக்கள் அனைவரும் தங்களின் குடும்பத்தினருடன் பெருந்திரளாகக் கலந்து சிறப்பித்து, எம்பெருமானின் திருவருளையும் மகிழ்வையும் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இக்கலைக் கொண்டாட்டங்களுக்கான அனுமதி முற்றிலும் இலவசம் என்பதுடன், வருகை தரும் பக்தர்களுக்கான வாகன நிறுத்த வசதிகளும் ஆலய வளாகத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

செய்தியும் புகைப்படங்களும் :Langes FCPA
Tamil Bc Media