“ஊழல் வழக்குகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவே, ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றார்கள்.”
Share
– எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்கள் விரைவில் சிறை செல்வார்கள் என்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அதிரடி
“எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்கள் தற்போது பிணையில் வெளியே இருக்கின்றார்கள். அவர்கள் வெகுவிரைவில் சிறைக்குச் செல்வார்கள். இவ்வாறான நிலையில், இன்னும் எத்தனை பேர் தற்கொலை செய்துகொள்ளப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை.”
– இவ்வாறு விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய சாட்சிகள் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றமை கவலைக்குரியது. ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கபில சந்திரசேன, எயார் பஸ் கொள்வனவு மோசடி தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் சத்தியக்கடதாசி ஒன்றின் ஊடாகப் பல தகவல்களை வெளியிட்டிருந்தார். அவர், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை கால்டன் இல்லத்தில் வைத்து இலஞ்சம் வழங்கியதாகத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். தற்போது முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலப் படுகொலைகள் மற்றும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுவதால், அதனுடன் தொடர்புடைய பலர் பெரும் அச்சமடைந்துள்ளனர். ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான அனைத்து வழக்குகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான வழக்குகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவே, ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றார்கள்.” – என்றார்.















