LOADING

Type to search

இலங்கை அரசியல் கனடா அரசியல்

எங்கே செல்கிறது எமது தாய் (யாழ்) மண்?

Share

இம்மாதத்தின் எமது தேசக்குரல் எங்கு எம்மை அழைத்துச் செல்லப்போகின்றது என்பதை அதன் தலைப்பை வாசித்த போதே உங்களில் பலர் புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆமாம் இந்த கேள்வியை எம் மண்ணில் தொடர்ச்சியாக வாழும் மக்கள் தொடர்பாக ஒரு ‘அபாய அறிவிப்பாக’ வும் நாம் எடுத்துக் கொள்ளலாம், இடவாகு பெயர் என்று இலக்கணக்குறிப்பின் அடிப்படையில் அந்த மண்ணில் தொடர்ச்சியாக துயரங்களுக்கும் கொடுமைகளுக்கும் மத்தியில் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் எமது உறவுகளின் துர்ப்பாக்கிய நிலையை எண்ணியபடியே இம்மாதத்தின் எமது குரலை நாம் வடிக்க வேண்டியிருக்கின்றது.

அந்த தாய் மண்ணில் நான்கு பக்கமும் ‘வழமைக்கு மாறான’ செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதுவரையிலும் எமது மக்கள் கண்டறியாத பொருட்கள் -கஞ்சாவும் போதையும்- எங்கிருந்தோ வந்து அங்கு குவிகின்றன. சமூக விரோத செயற்பாடுகள் தாராளமாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

போதையில் வாகனங்களை செலுத்தும் பொறுப்பற்ற சாரதிகளினால் பிஞ்சுக்குழந்தைகளும் மாணவச் செல்வங்களும். குடும்பத் தலைவர்களும் வீதிகளில் இரத்த வெள்ளத்தில் தங்கள் ஒப்பற்ற் உ யிர்களை இழக்கின்றார்கள்.

தற்போதை அரசாங்கத்தின் தலைவர்களும் அமைச்சர்களும் ஊழரை ஒழிப்போம். லஞ்சத்தை அனுமதிக்கமாட்டோம் என்று உரத்துச் சத்தமிட்டாலும் சமூக விரோதிகளும் அவர்களுக்கு துணை போகும் காவல்துறை மற்றும் இராணுவம் போன்றவற்றின் சிப்பாய்களும் அதிகாரிகளும் இவ்வாறான ‘மாசு’ களை தூசு தட்டிவிட முடியாத அளவிற்கு தடையாக இருக்கின்றார்கள்.

இவற்றையெல்லாம் உண்மையென எப்படிச் சொல்வீர்கள் என்று உங்களில் யாராவது எம்மிடத்தில் வினாவினால் அதற்குரிய விடையாக நாம் இனிச் சொல்லப்போகும் விடயங்களை தயவு செய்து கவனியுங்கள்.

தற்போது வட மாகாணத்தின் ஆளுனராக விளங்கும் நா. வேதநாயகம் அவர்கள் அங்கு நடைபெற்ற ஒரு அரச வைபவத்தில் தன் ஆதங்கத்தை உயர் அதிகாரிகள் மற்றும் பட்டம் பெற்ற இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மத்தியில் உரையாற்றியபோது பின்வருமாறு தெரிவிக்கின்றார். சர்வ அதிகாரமும் கொண்ட உயர் அரசாங்க அதிகாரியாக விளங்கும் அவரே தனது ஆதங்கத்தை பகிரங்கமாக சொல்லும் அளவிற்கு எமது தமிழ் மண்ணாம் தாய் மண்ணில்., யாழ்பாடி பரிசு பெற்ற மண்ணில் எமது தமிழர்களால் அரச நிர்வாகம் ஸ்தம்பிக்கும் ஒரு அச்சம் உள்ளதென்றால் அங்கு சாதாரண மக்களும் கல்வியில் முன்னேறத்துடிக்கும் மாணவச் செல்வங்களும் நடுத்தர வர்க்கத்தின் குடும்பத் தலைவர்களும் எவ்வாறு அங்கு வாழ முடியும் என்பதை நாம் எம்மிடத்திலேயே கேட்டு வைத்தோம்.
அதன் விளைவே இம்மாதத்தின் தேசக்குரல் இங்கே வடிக்கப்பெறுகின்றது.

வட மாகாண ஆளுனர் பின்வருமாறு தனது ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றார்

“மாபியாக்களுடன் ‘டீல்’ வைத்திருந்தால், மோசடியாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினால், செல்வாக்குள்ள சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குச் செவிசாய்த்தால் அல்லது அவர்கள் கோருபவர்களுக்கு விரும்பிய இடமாற்றங்களை வழங்கினால் என்னை ஒரு நல்ல ஆளுநர் என்று பலரும் புகழ்வார்கள்.”

“ஆனால், அதைவிடுத்து சரியானது எதுவோ அதைச் செய்தால் தூற்றுவார்கள். இப்படியானதொரு சவாலான சூழலுக்குள்தான் நீங்களும் பணியாற்றப் போகின்றீர்கள். யார் என்ன சொன்னாலும், நீங்கள் மக்கள் நலன் சார்ந்த சரியான விடயங்களையே செய்ய வேண்டும். நேர்மையாகச் செயற்படும் உங்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம்” என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண பொதுச் சேவையின் இணைந்த சேவைப் பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விசேடநிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய உத்தியோகத்தர்களுக்கு மத்தியில் உரையாற்றும்போதே கௌரவ ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்,

உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நியமனங்கள் வெறுமனே ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக வழங்கப்பட்டவை அல்ல. மாறாக, மக்களுக்குச் சேவையாற்றுவதற்காகவே வழங்கப்படுகின்றன. அரசாங்க சேவையில் இரு வகையான உத்தியோகத்தர்கள் உள்ளனர். ஒரு தரப்பினர் தங்களை நாடி வரும் பொதுமக்களை எவ்வாறு தட்டிக்கழித்து அலைக்கழிக்கலாம் என எண்ணுவார்கள். மற்றையவர்கள், பொதுமக்களுக்கு எப்படியாவது சேவையைச் செய்து கொடுக்க வேண்டும் என்று அர்ப்பணிப்புடன் நினைப்பார்கள். நீங்கள் இந்த இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் அல்லது கௌரவ பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் நினைத்திருந்தால், தங்களின் ஆதரவாளர்களின் பட்டியலை எம்மிடம் தந்து அவர்களுக்கு வேலைகளை வழங்குமாறு கோரியிருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல், இந்தப் பொறிமுறை முற்றிலும் சுயாதீனமாக இயங்கியமையால்தான் நீங்கள் அனைவரும் இன்று தகுதி அடிப்படையில் நியமனம் பெற்றுள்ளீர்கள். கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.”

அவரது மேற்படி உரையானது எமது மண்ணில் அனைத்து துறைகளிலும் மறைமுகமாக இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற விடயங்களை சுட்டிக்காட்டும் ஒன்றாக விளங்குகின்றது. விடுதலைப் புலிகள் வன்னியில் தமது சிறிய ராஜ்யத்தை நிர்வகித்த போது அங்கு ஊழலற்றதும் நியாயமானதுமான விடயங்கள் அரங்கேறின. கஞ்சாவும் போதையும் அந்த பிராந்தியத்தை எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

ஆனால் இன்று மிகவும் கவனமாகவும் அவதானமாகவும் வாழவேண்டிய பொறுப்பும் கடமையும் அங்குள்ள மக்களுக்கு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முன்னைய ஆட்சிக் காலத்தில் மகிந்த மற்றும் ரணில் போன்றோர் தங்கள் பக்கத்தில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வைத்துக் கொண்டு அவர்களுக்கும் பணம் மற்றும் மதுபான அனுமதிப்பத்திரம் போன்றவற்றை கொடுத்து அவர்களை சந்தோசப்படுத்தினார்கள். அவ்வாறான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் முன்னர் பெற்றுக்கொண்ட மதுபான அனுமதிப்பத்திரங்களை இ;னறும் வைத்துக்கொண்டு எவ்வித பதவிகளும் இல்லாமலே செல்வத்தில் மிதப்பவர்களாக காணப்படுகின்றார்கள். அத்துடன் மீண்டும் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ அன்றி மாகாண சபை உறுப்பினர்களாகவோ வந்து விட வேண்டும் என்று துடிக்கின்றார்கள்.

இவற்றைப் பார்க்கும்போது சமூக விரோதிகளான மாபியாக் கும்பல்களிலும் பார்க்க மக்களுக்கு விரோதமாக நடந்து கொள்ளும் நாட்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் எமது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் ஆவார்கள்.

இவ்வாறானவர்களையும் சமாளிக்கும் பொறுப்பு ஆளுனர் அல்லது அரசாங்க அதிபர்களுக்கு உண்டு என்பதை அங்குள்ள மக்கள் புரிந்து கொள்வார்கள்.

அத்துடன் அந்த புனிதமான தமிழ் மண்ணில் மீண்டும் வந்து அநியாயங்களை மேற்கொள்ள மகிந்தா போன்ற கொலைஞர்களின் வாரிசுகளும் முயலுகின்றார்கள் என்பது புலனாகின்றது. அவர்களது கையாட்களான சமூக விரோதிகளான சிலரும் வர்த்தகர்கள் என்ற போர்வையில் அரச நிர்வாகித்திற்கு அச்சுறுத்தல்களாக விளங்குவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது என்பதையும் அங்குள்ள சமூகச் செயற்பாட்டாளர்கள் எமது கவனத்திற்கு அறியத்தந்துள்ளார்கள். எனவே புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து நாமும் எமது மண்மீது நம் ‘கண்களை’ எப்பொழுதும் வைத்திருப்போம் என்ற வார்த்தைகளுடன் விடைபெறுகின்றோம்.!