கத்தாரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை முதல் – அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்
Share
கத்தாரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை வழங்க முதல் அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கத்தாரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது: கத்தார் நாட்டில் ராஸ் லபான் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கடந்த 21.06.2026 அன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், சிதம்பராபுரம் யாக்கோபுரத்தை சேர்ந்த தங்கராஜா மகன் பபித் (வயது 26), பணகுடி பகுதி சிவகாமிபுரத்தை சேர்ந்த முத்துராஜா மகன் சஜித்குமார் (25), மற்றும் அழகியநம்பியாபுரத்தை சேர்ந்த மைக்கேல் மகன் சுவின் (24) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்துடனும் கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் மூலமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசுவை இப்பணியில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
















