கனடா – மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கலைவிழாவில் தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த சட்டத்தரணி காண்டீபன் அவர்களும் ஆகியோர் கலந்து கொண்டார்!
Share
சுலோச்சனா அருண்
கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 37 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக நடந்த கலைவிழா நிகழ்ச்சி – 2026 சென்ற சனிக்கிழமை 1355 ஹார்வுட் அவென்யூ வடக்கு, ஏஜாக்ஸ், ஜே. கிளார்க் ரிச்சர்ட்சன் கல்லூரி கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் காப்பாளர்களில் ஒருவரான திரு. சிவதாசன், திருமதி சிவதாசன் ஆகியோர் பிரதம அதிதியாகக் கலந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
இம்முறை இந்த நிகழ்ச்சியின் போது 1:30 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை வர்த்தகக் கண்காட்சியும், போட்டிகளில் பங்கு பற்றிய மாணவர்களின் பரிசளிப்பு நிகழ்ச்சியும் இந்த மண்டபத்தில் இடம் பெற்றது குறிப்பிடத் தக்கது. சரியாக மாலை 5 மணிக்கு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியில் மன்னறத் தலைவர் ந. பிரதீபன் திருமதி பிரதீபன், சிறப்பு விருந்தினர் திரு. திருமதி சிவதாசன், செயலாளர் ரவி சுப்ரமணியம், எழுத்தாளர் காப்பாளர் குரு அரவிந்தன், காப்பாளர் வி. ரி. மகாலிங்கம், தாயகத்தில் இருந்து வருகை தந்திருந்த சட்டத்தரணி திரு. காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். இதைத் தொடர்ந்து தமிழத்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண், கல்லூரிக்கீதம், அகவணக்கம் ஆகிய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வரவேற்புரையும், தலைவர் ந. பிரதீபனின் உரையும் இடம் பெற்றன.
மகாஜனாவின் கலைவிழா என்றால் அது முத்தமிழ் விழாவாக, நாடகம் முக்கியமாக இடம் பெறுவதுண்டு. இம்முறை செயற்குழவினர் வித்தியாசமான முறையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்ததால், நாடகம் இடம்பெறவில்லை. பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நாடகக் கலைஞரும் காப்பாளருமான திரு. சிவதாசன் அவர்கள் தனது உரையில் விழா ஏற்பாட்டாளர்களைப் பாராட்டி, நாடகம் இடம் பெறாதது ஒரு குறையாக இருப்பதாகவும் எடுத்துக் காட்டினார். போட்டிகளில் பாராட்டுப் பரிசு பெற்றவர்களுக்கு காலை நிகழ்வின் போது பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை நிகழ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கர்நாடக இசை, மெல்லிசைப் பாடல்கள், பரதநாட்டியம், நாட்டிய நாடகம் போன்ற இசை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இளைய தலைமுறையினர் பலர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இவற்றைத் தொடர்ந்து கல்லூரிப் பழைய மாணவர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் இடம் பெற்றது. இறுதியாக நன்றிறியுரையுடன் நிகழ்ச்சி சிறப்பாக முடிவடைந்தது. புலம்பெயர்ந்த மண்ணில், நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்த மகாஜனா பழைய மாணவர் சங்கச் செயற்குழுவினருக்கு எமது பாராட்டுகள்!



















