கொல்கத்தாவில் உணவகத்தில் தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்
Share
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 5 மாடி உணவகத்தில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வயது குழந்தை உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கதாவில் உள்ள உணவகத்தில் அதிகாலை 1:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, காவல்துறையினரும் பேரிடர் மேலாண்மை துறையினரும் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்து குறித்து பேசிய அமைச்சர் கெளஷிக் செளத்ரி, “நாங்கள் இறந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த முயற்சித்து வருகிறோம். விபத்து ஏற்பட்ட இந்த கட்டிடத்தின் நிலை மிக மோசமாக உள்ளது. தீ விபத்தில் நமது நாட்டை சேர்ந்தவர்களும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த கட்டிடத்திற்குள் பல உணவகங்கள் உள்ளன. இங்கு என்ன நடக்கிறது என்பதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். தீ விபத்திற்கான காரணம் மின்கசிவாக இருக்கலாம். ஆனால் தடயவியல் பரிசோதனை மூலம்தான் தீ விபத்துக்கான தெளிவான காரணம் தெரியவரும். கட்டிட நிர்வாகம் அடிப்படை பாதுகாப்பு மற்றும் கட்டுமான விதிமுறைகளை பின்பற்றவில்லை. உணவகத்தின் செயல்பாட்டில் பல முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். கொல்கத்தாவில் நடந்த தீ விபத்து குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து 80 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அடர்த்தியான புகை காரணமாக தீயணைப்பு வீரர்கள் படிக்கட்டுகளில் ஏறி மேல் தளங்களை அடைவது கடினமாக உள்ளது. விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.















