சம்பந்தனின் நிராகரிப்பும் சுமந்திரனின் அழைப்பும்…
Share
2015 ஆம் ஆண்டில் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் இணைந்து அரசியலில் ஈடுபட விரும்பிய விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை தமிழ்தேசியக்கூட்டமைப்பு-தமிழரசுக்கட்சியின் அப்போதைய தலைவர் இரா.சம்பந்தன் ”இராணுவ புலனாய்வாளர்களின் கையாட்கள் ”எனக்கூறி நிராகரித்த நிலையில் தமிழரசின் தற்போதைய பதில் செயலாளர் சுமந்திரன் தமிழரசில் இணையுமாறு முன்னாள் போராளிகளுக்கு விடுத்துள்ள அழைப்பை முன்னாள் போராளிகள் ஏற்க வேண்டுமா… நிராகரிக்க வேண்டுமா?
—-கே.பாலா

“எங்களுடைய இலங்கைத் தமிழரசுக் கட்சியில் வந்து சேர எவருக்கு அதிகூடிய தகுதி இருக்கின்றது என்று கேட்டால் அது தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து, தங்கள் அவயவங்களையும் இழந்து, தங்களது குடும்பங்கள், உறவுகள்,கல்வியைத் தள்ளிவைத்துவிட்டு ஓர் இலக்குக்காகத் தங்கள் உயிர்,உடல்,ஆவி அனைத்தையும் கொடுக்க முன்வந்தவர்களை விட வேறு எவருக்கும் அதைவிடக் கூடிய தகுதி இருக்க முடியாது.போராட்ட வடிவங்கள் மாறலாம்,ஆனால் இலக்கு ஒன்றுதான். அந்தப் போராட்டத்தின் இலக்கை அடைய இந்தக் கட்சியில் இணைய உங்களுக்கு முழு உரிமை உண்டு. எமது கட்சியில் வந்து சேர எவருக்கு அதிகூடிய தகுதி இருக்கின்றது என்று கேட்டால் அது தங்களை முழுமையாகத் தியாகம் செய்த முன்னாள் போராளிகளான உங்களுக்குத்தான் உள்ளது”
இவ்வாறு கூறியவர் வேறுயாருமல்ல விடுதலைப்புலிகளையும் அவர்களின் போராட்டத்தையும் கடுமையாக எதிர்ப்பவரும் விடுதலைப்புலிகளை நான் ஒரு போதுமே ஏற்றுக் கொண்டதுமில்லை ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை என்று பகிரங்கமாக பொது வெளிகளில் கூறியவரும் கூறிவருபவருமான இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொது செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்தான். கிளிநொச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் போராளிகளுடன் நடத்திய சந்திப்பின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். முன்னாள் போராளிகளை தமிழரசுக்கட்சியில் இணையுமாறு அழைப்பும் விடுத்துள்ளார்.இது ஆச்சரியம் ஆனால் உண்மைதான்.
இந்த சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரான சி.வி.கே. சிவஞானமும் பங்கேற்றிருந்தார். சுமந்திரனின் இந்த உரை, அழைப்பு தொடர்பில் அந்த சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் போராளிகள் சிலர் சுமந்திரனுடன் தர்க்கப்பட்டதுடன் விடுதலைப்புலிகள், முன்னாள் போராளிகள் தொடர்பில் சுமந்திரன் பொது வெளியில் முன்வைத்த பல கருத்துக்கள், குற்றச்சாட்டுக்கள் ,அவரது நிலைப்பாடுகள் தொடர்பில் கேள்விகளையும் எழுப்பியிருந்தனர். அதனால் முன்னாள் போராளிகளுடனான அந்தக் கலந்துரையாடலில் தமிழரசுத் தலைமை எதிர்பார்த்த இலக்கை முடியவில்லை.
முன்னாள் போராளிகளுக்கு சுமந்திரன் விடுத்த அழைப்பு தொடர்பில் ஆராய்வதற்கு முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த முன்னாள் போராளிகள், அரசியல் அமைப்பு ஒன்றை ஆரம்பித்து அப்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டு இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் மக்களின் தேசியக்கட்சியாக செயற்பட்டுவந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இணைய முயன்று அந்த முயற்சி வெற்றியளிக்காத நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சையா போட்டியிட்ட சூழல் தொடர்பிலும் ஒருதடவை திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது.
முன்னாள் போராளிகளாக ஏனைய தமிழ் இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஏற்கனவே அரசியலில் ஈடுபட்டு அமைச்சர்களாக,எதிர்க்கட்சி எம்.பி.க்களாக ,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிகளாக இருந்த போதும் விடுதலைப்புலிகளை சேர்ந்த இனத்துரோகிகளான கருணா ,பிள்ளையானைத் தவிர வேறுயாரும் அரசியலில் ஈடுபட்டிருக்கவில்லை. இந்நிலையில்தான் விடுதலைப் புலிகளையும் தமிழ் தேசிய அரசியலில் ஈடுபடவைக்க அதன் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் மற்றும் நலன்விரும்பிகளை ஒன்றிணைத்து ஜனநாயக போராளிகள் கட்சி என்ற அமைப்பு 03-07-2015 இல் யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள அந்த அமைப்பின் அலுவலகத்தில் நடை பெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் போராளிகள், அவர்களின் ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரை ஒன்றிணைத்து ஜனநாயக போராளிகள் கட்சி என்ற அமைப்பில் அரசியல் செயற்பாடுகளில் முழு மூச்சாக ஈடுபடுவது,ஈடுபாடுடைய போராளிகளையும் ஆதரவாளர்களையும் ஐக்கியப்படுத்தி ஒரு புதிய கட்டுறுதியான அமைப்பை ஏற்படுத்துவது,தமிழ் பேசும் மக்களி ன் ஒட்டுமொத்த நலன்களை வென்றெடுப்பதற்காக அதிர்வுள்ள வகையி ல் செயற்படும் ஒரு புதிய ஜனநாயக அரசியல் கலாசாரத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.இதனை நோக்காகக் கொண்டு முன்னாள் போராளிகளும் அவர்களுக்கு உரித்தான பங்களிப்பை இவ்விடயத்தில் வழங்குவதற்கு வகை செய்யும் விதத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு தேர்தல் மாவட்டங்கள் தோறும் தமது வேட்பாளர் பட்டியல்களில் விடுதலைப் புலிகளில் இயங்கிய தலா இரு முன்னாள் போராளிகளையாவது இணைத்துக் கொள்ளும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைக் கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இதற்கமைய முன்னாள் போராளிகள் தமிழ்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து தமிழ் தேசிய அரசியலில் ஈடுபட விரும்பி ஜனநாயகப் போராளிகள் கட்சியாக இலங்கைத் தமிழரசுக்கட்சி,தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் அப்போதைய தலைவரான இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியபோது அவர்களின் வடக்கு, கிழக்கு தேர்தல் மாவட்டங்கள் தோறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல்களில் விடுதலைப் புலிகளில் இயங்கிய தலா இரு முன்னாள் போராளிகளையாவது இணைத்துக் கொள்ளும்படி விடுத்த கோரிக்கையை இரா.சம்பந்தன் உடனடியாகவே நிராகரித்து விட்டார்.
இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் ஜனாயகப்போராளிகள் கட்சி சுயேட்சையாக போட்டியிட்ட போதிலும் தோல்வியடைந்தது. ஒரு முன்னாள் போராளி கூட ஒரு சில ஆயிரம் வாக்குகளைக்கூடபெறமுடியாது போனது. இத் தோல்வி குறித்து கருத்து வெளியிட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியின் இணைப்பாளராக அப்போது செயற்பட்ட மூத்த ஊடகவியலாளரான நடேசபிள்ளை வித்தியாதரன், ”இந்தத் தேர்தலில் எங்களுக்கு தோல்வி ஏற்பட்டிருந்த போதிலும், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களும் அச்சமின்றி அரசியலில் ஈடுபட முடியும் என்பதை நிலைநாட்டியிருக்கின்றோம். இதை ஒரு சாதனையாக நாங்கள் கருதுகின்றோம்.எவ்வித பின்புலமுமின்றி அரசியலுக்குள் பிரவேசித்துள்ள எங்களை இராணுவ புலனாய்வாளர்களே ஏவிவிட்டிருந்ததாகக் கூறி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு புறந்தள்ளியதன் காரணமாகவே நாங்கள் தனித்து தேர்தலில் போட்டியிட்டோம். எங்களை இராணுவப் புலனாய்வாளர்களே ஏவிவிட்டிருப்பதாக மிதவாத அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பலமான பிரசாரத்தை மேற்கொண்டிருந்ததால் அதனை முறியடிக்கும் வகையில் எங்களால் பிரசாரத்தை முன்னெடுக்க முடியாத காரணத்தினாலேயே நாங்கள் தோல்வியடைந்தோம்.எனினும் தமிழ் மக்களின் கோரிக்கைகள், பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காகக் காத்திரமான முறையில் அரசியல் செயற்பாடுகளை எதிர்காலத்தில் நாங்கள் முன்னெடுப்போம்” என்று கூறியிருந்தார்.
இவ்வாறான நிலையில் தான் 11 வருடங்கள் கடந்த நிலையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் தலைவரான சி.வி.கே. சிவஞானம் ,பதில் பொது செயலாளரான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் முன்னாள் தலைவரான இரா. சம்பந்தனின் முன்னாள் போராளிகளை தமது கட்சிக்குள் இணைப்பதற்கு எதிரான நிலைப்பாட்டுக்கு மாறாக விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை தமிழரசுக்கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்பு முன்னாள் போராளிகளின் மேல் உள்ள அக்கறை, அவர்களையும் அரசியல் நீரோட்டத்தில் இணைக்க வேண்டுமென்ற நல்நோக்கத்தின் அடிப்படையில் விடுக்கப்பட்டதல்ல. தமது கட்சிக்குள் உள்ள தமது அரசியல் எதிரியான சிவஞானம் சிறீதரனை இலக்கு வைத்து அவரை பலவீனப்படுத்த அவரின் பலமான கிளிநொச்சி கோட்டைக்குள் வைத்தே அவரின் முதுகெலும்பான முன்னாள் போராளிகளுக்கு அரசியல் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
”போராட்ட வடிவங்கள் மாறலாம்,ஆனால் இலக்கு ஒன்றுதான். அந்தப் போராட்டத்தின் இலக்கை அடைய இந்தக் கட்சியில் இணைய உங்களுக்கு முழு உரிமை உண்டு”என்று சுமந்திரன் பகிரங்க அழைப்பு விடுக்க ”சிறீதரன்” என்ற காரணி பின்னணியில் இருந்தாலும் தமிழரசுக்கட்சியின் பதில் பொது செயலாளரான சுமந்திரனின் முன்னாள் போராளிகளுக்கான இந்த அழைப்பு வரவேற்கப்பட வேண்டியது.விமர்சிக்கப்படக்கூடாதது.சிதைவடைந்து செல்லும் தமிழ் தேசிய அரசியலுக்கு புத்துயிர்ப்பளிக்க அவசியம் தேவைப்படும் ஒரு அழைப்பு.
முன்னாள் போராளிகள் அரசியலில் ஈடுபடுவது , அதன் பின்னணி, அதனால் ஏற்படப் போகும் விளைவுகள், பாதிக்கப்படப்போகும் அல்லது ஆபத்துக்களை சந்திக்கப் போகும் போராளிகள் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும் கவலைகளும் உள்ளன .
யுத்தம் முடிவடைந்த பின்னர் ஒரு தடவையேனும் முன்னாள் போராளிகள் தொடர்பில் கவனமோ, கருணையோ காட்டாதவர்கள், அவர்கள் நலன் தொடர்பில் அக்கறைப்படாதவர்கள் திடீரென முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் என்ன?முன்னாள் போராளிகளும் அவர்களின் குடும்பங்களும் வாழ வழியின்றி, வாழ்வாதாரமின்றி அவலப்படும் எத்தனையோ ஆயிரம் செய்திகள் ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்தபோதுகூட அவர்களுக்கான வாழ்வுக்கோ, வாழ்வாதார உதவிகளுக்கோ எந்தவித பங்களிப்புகளையும் செய்யாதவர்கள், அவர்களை அரசியலுக்குள் இழுத்து வருவதன் நோக்கம் நிச்சயமாக முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்ததாக இருக்கப் போவதில்லை என்றவாறாக மக்களின் கருத்துக்கள் வெளிப்படுகின்றன.
அதேவேளை இம்முன்னாள் போராளிகள் அரசியலில் ஈடுபட்டு தேர்தல்களை போட்டியிடும்போது தமிழ் மக்களால் நிராகரிக்கப்படுமிடத்து அது தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தமிழ் மக்களுக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கும் ஏற்படும் அவமானம் .தோல்வி, புறக்கணிப்பாகவே கருதப்படும். அத்துடன் விடுதலைப் புலிகளை தமிழ் மக்கள் நிராகரித்து விட்டனர் என்ற பிரசாரமும் எதிர்த்தரப்பினரால் முன்னெடுக்கப்படும் என்ற கவலைகளும் இல்லாமலில்லை. ஏனெனில் 2015 தேர்தலில் ஜனநாயகப் போராளிகள் கட்சி சுயேச்சையாக போட்டியிட்ட நிலையில் ஒருவர்கூட வெற்றிபெறாது படுதோல்வியடைந்தது. அதன்பின்னரான அண்மைய தேர்தல்களிலும் சில தமிழ் தேசியக்கட்சிகள் வேட்பாளர்களாக ஆண்,பெண் முன்னாள் போராளிகளை களமிறங்கிய போதும் ஒருவர் கூட வெற்றி பெறாதமை போன்ற காரணங்கள் உள்ளன.
2015 தேர்தல்.அதன்பின்னரான அண்மைய தேர்தல்களிலும் ஆண்,பெண் முன்னாள் போராளிகளை களமிறங்கிய போதும் அவர்கள் வெற்றி பெற முடியாமைக்கு அவர்களுக்கான பலமான அரசியல் பின்புலம் இருக்கவில்லை என்பதே பிரதான காரணமாக இருந்தது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் தாய்க் கட்சி எனக் கூறப்படும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் போராளிகளுக்கான இந்த பகிரங்க அழைப்பு வரவேற்கப்படவேண்டும். ஒரு பலமான அரசியல் கட்சியில் இணைந்து முன்னாள் போராளிகள் அரசியலில் ஈடுபடும்போது அது அவர்களுக்கும் கட்சிக்கும் மிகப்பெரும் பலமாவே அமையும்.
2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனித்த பின்னர் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் தொடர் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக முன்னாள் போராளிகள் இன்னும் முழுமையாக அரசியல் மயப்படாமையே காரணமாகவுள்ளது.எனவே முன்னாள் போராளிகள் அரசியல் மயப்பட வேண்டும்.12000க்கும் மேற்பட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள் வடக்கு, கிழக்கு முழுவதும் உள்ளனர் ஆனாலும் அவர்கள் இன்னும் பல அரசியல் அடக்கு முறைகள் மற்றும் புலனாய்வு துறையினரின் பின் தொடரும் நிலைமைகளினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.இதனை நிறைவுக்கு கொண்டு வர முன்னாள் போராளிகள் அனைவரும் ஒன்றிணைந்து தமக்கான ஒரு அரசியல் பிரதிநிதித்துவத்தை உருவாக்க வேண்டும் அதற்கான சந்தர்ப்பத்தை தற்போது தமிழரசுக்கட்சி வழங்கியுள்ளது.
தமது ”உள்வீட்டு” அரசியல் வியூகங்களுக்கு முன்னாள் போராளிகளை பயன்படுத்த தமிழரசின் பதில் தலைமைகளினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் இவ்வாறான எத்தனையோ எதிரிகளின் சதிகள், வியூகங்களுக்குள் நின்று சமராடி சரித்திரம் படைத்தவர்கள்.தமக்கு எதிரான போர் வியூகங்களைக்கூட தமக்கு சாதகமாக மாற்றி சாதனை படைத்தவர்கள்.எனவே அவர்களுக்கு இந்த அரசியல்வாதிகளின்,திட்டங்கள்,வியூகங்கள், என்றும் பெரிய விடயமல்ல. எனவே தமிழரசின் இந்த அழைப்பு தொடர்பில் முன்னாள் போராளிகள் ஆக்கபூர்வமாக சிந்தித்தால் தமிழ் மக்களின் தாய்க்கட்சியான தமிழரசையும் அதிலிருந்து அகற்றப்பட்டு வரும் தமிழ் தேசியத்தையும் தமிழ் தேசிய உணர்வாளர்களையும் பாதுகாக்க முடியும்.















