LOADING

Type to search

இந்திய அரசியல்

சவுகார் ஜானகி மறைவுக்கு முதல் – அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்தார்

Share

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்-அமைச்சர் விஜய் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 94. இந்த நிலையில் சவுகார் ஜானகியின் மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான சவுகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள சவுகார் ஜானகியின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும். சவுகார் ஜானகியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.