LOADING

Type to search

இந்திய அரசியல்

ஜிஎஸ்டி நடைமுறையில் ‘சீர்மிகு’ சீர்திருத்தங்கள்; கைது அதிகாரம் ரத்து

Share

இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பரிந்துரைத்துள்ளது, ஜிஎஸ்டி கவுன்சில்.

2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி முறையில், வரி ஏய்ப்பு உள்ளிட்ட சில குற்றங்களுக்காகக் கைது செய்யும் அதிகாரம் வரித்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட கடுமையான குற்றங்களில் இந்த அதிகாரம் பயன்படுத்தப்படலாம் என்றாலும், அதன் நடைமுறை குறித்து வணிகர்கள் மத்தியில் கவலைகள் எழுந்தன.

வரி கணக்கீட்டில் ஏற்படும் தவறு, உள்ளீட்டு வரிப் பயன்பாட்டில் ஏற்படும் முரண்பாடு, ஆவணங்களில் காணப்படும் வேறுபாடு போன்றவை அனைத்தும் திட்டமிட்ட வரி ஏய்ப்புக்கு இணையானவை அல்ல. சில நேரங்களில் சட்டத்தின் விளக்கத்தில் உள்ள வேறுபாடுகள்கூட வரித்துறைக்கும் வணிகர்களுக்கும் இடையே மோதல்களை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய சூழலில், வரி தொடர்பான விசாரணைகள் முறையாக நடைபெறுவதையும், குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே வணிகர்கள் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ளாமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவது அவசியம்.

கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெற்ற 57-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வணிகர்களை கைது செய்வதற்கான அதிகாரிகளின் அதிகாரத்தை நீக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது வெறும் நடைமுறை மாற்றம் மட்டுமல்ல; வரி நிர்வாகத்தில் அதிகாரத்துக்கும் பொறுப்புக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் முயற்சியாகும்.

ஜிஎஸ்டி தொடர்பான குற்றங்களுக்கு வழக்குத் தொடர்வதற்கான வரி ஏய்ப்பு வரம்பை ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தவும் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

இதனால், குறைந்த மதிப்பிலான வரி முரண்பாடுகளுக்காகக் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் சூழல் குறைய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணைகள், வரி வசூல் நடவடிக்கைகள், சட்டப்படி விதிக்கப்படும் அபராதங்கள் அனைத்தும் தாமாகவே ரத்தாகிவிடாது.

திட்டமிட்டு வரி ஏய்ப்பில் ஈடுபடுவோருக்கும், கணக்குப் பிழை அல்லது நடைமுறைத் தவறுகளால் பாதிக்கப்படுவோருக்கும் இடையே தெளிவான வேறுபாடு காட்டப்பட வேண்டும்.

மேலும், ஜிஎஸ்டி குற்றங்களுக்கான தண்டனையில் கட்டாயக் குறைந்தபட்ச தண்டனை விதிப்பை நீக்கி, ஒவ்வொரு வழக்கின் தன்மைக்கு ஏற்ப நீதிமன்றம் முடிவெடுக்கும் வகையிலும் மாற்றம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொதுவான ஜிஎஸ்டி அபராதத்தைக் குறைந்தபட்சம் ரூ.25,000 என்ற நிலையிலிருந்து ரூ.10,000 ஆகக் குறைக்கவும் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

குறிப்பாக, சிறு மற்றும் குறு வணிகர்கள் பல்வேறு கணக்குப் பதிவுகள், காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கைகள், மின்னணு நடைமுறைகள் ஆகியவற்றைக் கையாளுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தொழில்நுட்ப அறிவு குறைவாக இருப்பவர்கள் அல்லது கணக்காளர்களை நியமிக்க முடியாதவர்கள் சிறிய தவறுகளுக்காகவும் அபராதங்களைச் சந்திக்க நேரிடுகிறது.

இத்தகைய சூழலில், தவறுகளின் தன்மைக்கு ஏற்ற அபராதம் விதிப்பதும், திருத்திக்கொள்ள வாய்ப்பளிப்பதும் முக்கியம்.

வரி தொடர்பான சிறிய தொகை முரண்பாடுகளுக்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் நடைமுறையிலும் மாற்றம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 அல்லது அதற்குக் குறைவான தொகை தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என்றும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள இத்தகைய நோட்டீஸ்களைத் திரும்பப் பெறவும் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

சிறிய தொகைகளுக்கான நடவடிக்கைகளில் அதிகாரிகளின் நேரமும், வணிகர்களின் நேரமும் வீணாவதைத் தவிர்க்க இது உதவும்.

சரக்குகளை எடுத்துச் செல்லும் வாகனங்களைச் சோதனையிடுவதிலும் புதிய கட்டுப்பாடுகளைப் பரிந்துரைத்துள்ளது, கவுன்சில்.

குறிப்பிட்ட உளவுத் தகவல்கள் மற்றும் உரிய அனுமதியின் அடிப்படையிலேயே சரக்குகளை இடைமறித்துச் சோதனையிட வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அதிகாரிகளுக்கே இத்தகைய நடவடிக்கைகளில் முக்கியப் பொறுப்பு வழங்கும் வகையில் நடைமுறைகளைச் சீரமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தேவையற்ற வாகனச் சோதனைகள், சரக்குப் போக்குவரத்தில் ஏற்படும் தாமதங்கள், வணிகர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் ஆகியவற்றைக் குறைக்க முடியும்.

ஜிஎஸ்டி பதிவு செய்வதில் உள்ள நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், வரித் தொகையைத் திரும்பப் பெறும் செயல்முறைகளை விரைவுபடுத்துதல், உள்ளீட்டு வரிப் பயன்பாடு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல் ஆகியவற்றுக்கும் கவுன்சில் முக்கியத்துவம் அளித்துள்ளது.

இத்தகைய மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்போது, சிறு வணிகர்கள் தங்களுடைய தொழிலில் அதிக கவனம் செலுத்துவதற்கும், கணக்கியல் நடைமுறைகளில் செலவிடும் நேரத்தைக் குறைப்பதற்கும் உதவக்கூடும்.

இந்தக் கூட்டத்தில் புதிய ஜிஎஸ்டி விகித மாற்றங்கள் அறிவிக்கப்படவில்லை. முந்தைய கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரி விகிதச் சீரமைப்புகளுக்குப் பிறகு, இக்கூட்டத்தின் முக்கியக் கவனம் வரி நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்துவதில் இருந்தது.

வரி விகிதங்களை அடிக்கடி மாற்றுவது வணிகர்களுக்கும் நுகர்வோருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, வரி விகிதங்களில் நிலைத்தன்மையைப் பேணுவதுடன், வரி செலுத்துவதற்கான நடைமுறைகளையும் எளிமைப்படுத்துவது முக்கியம்.
அதோடு, ஜிஎஸ்டிக்கு உட்பட்ட சில வணிகங்களில் பில்லுக்குரிய தொகை உடனடியாக கிடைத்து விடுவதில்லை. இன்று ஒரு பில் போட்டு வணிகம் செய்தால் அதற்குரிய தொகை வணிகர் கைக்கு வந்து சேர 2 அல்லது 3 மாதம் ஆகலாம். ஏன் 6 மாதம் கூட ஆகலாம். பில் தொகை வராமலே போகவும் வாய்ப்பு உண்டு.

ஆனால் பில் தேதியிட்ட அடுத்த மாதமே ஜிஎஸ்டி செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே பில் தொகை வணிகர் கைக்கு வந்த பிறகே அதற்குரிய ஜிஎஸ்டி வசூலிக்கப்படவேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில் இந்த கோரிக்கையையும் பரிசீலித்து ஒரு நல்ல முடிவு அறிவிக்கவேண்டும்.

வரி செலுத்துவோரைச் சந்தேகத்துக்கு உரியவர்களாக மட்டுமே அணுகாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்பவர்களாகக் கருத வேண்டும்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் தற்போதைய பரிந்துரைகள், சட்டத் திருத்தங்களாக உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் ஒரே சீரான நிர்வாகத்தை உருவாக்கினால், வணிகர்களின் நம்பிக்கையை மேம்படுத்த முடியும்.

அச்சத்தின் அடிப்படையிலான வரி நிர்வாகத்துக்குப் பதிலாக, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலான வரி நிர்வாகமே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.