LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஞானசார பிக்கு சிறைக்கு அனுப்பப்பட்டதால் கோட்டாபாய கொலை செய்த ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியாவுக்கு எதிராக தீவிர வெறுப்புப் பிரச்சாரம்

Share

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நீதிமன்றத்தால் மீண்டும் ஒருமுறை சிறைத் தண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியும் இலங்கையின் முன்னணி மனித உரிமைச் செயற்பாட்டாளருமான சந்தியா அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.இவர் இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் அதற்கு முன்னர் இடம்பெற்ற கிளர்ச்சிகளின் போது காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் குடும்பங்களின் பிரதிநிதித்துவ அடையாளமாக மாறிய பெண்ணான சந்தியா எக்னெலிகொடவிற்கு 2017ஆம் ஆண்டு அமெரிக்காவின் சர்வதேச துணிச்சல்மிக்க பெண் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளைப் பதிவிட்டவர்களில், ஜனாதிபதி விருது பெற்ற ஊடகவியலாளர் ஒருவரும், சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களும் அடங்குகின்றனர்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு, 2016 ஜனவரி மாதம் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போது, ஞானசார தேரர் நீதிமன்றத்திற்குள் நுழைந்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, 2018ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கலகொடஅத்தே ஞானசார தேரர் சுமார் 9 மாதங்கள் அந்தச் சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினார். இதனை சவாலுக்கு உட்படுத்தி, சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்தனர்.

2026 செப்டம்பர் 10ஆம் திகதி, குறித்த ஜனாதிபதி மன்னிப்பு சட்டபூர்வமானதல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததனைத் தொடர்ந்து, 2026 ஒக்டோபர் 5ஆம் திகதி, ஞானசார தேரருக்கு நீதிமன்றத்தால் முன்னதாக விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

“சந்தியா தனது இறுதி மூச்சை விடும் விதம் இலங்கைக்கே கண்களைத் திறக்கச் செய்யும்… இன்றைக்கு இவ்வளவுதான்…” என இலங்கையைச் சேர்ந்த சமூக ஊடகச் செயற்பாட்டாளர் சாமர விஜேசூரிய தனது பேஜ்புக்கில் பதிவிட்டிருந்த பதிவுக்கு, இலங்கையின் அரச விருது பெற்ற ஊடகவியலாளர் ராகுல் சமந்த ஹெட்டிஆரச்சி, “நாட்டுக்கு ஒரு சாபமாக இருந்தவள்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணியாற்றி வரும் ராகுல் சமந்த ஹெட்டிஆரச்சி, புலனாய்வு ஊடகவியலாளராகப் பிரபலமானவர். அவர் BBC-இன் முன்னாள் சுயாதீன ஊடகவியலாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், இலங்கையில் ஊடகப் பயிற்றுநராகவும் செயல்பட்டு வருகிறார். அத்துடன், சர்வதேச அளவிலும் அவர் ஊடகவியலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

“பிரகீத் எக்னெலிகொடவுக்காக குரல் கொடுப்பவர்கள், அவர் எமது இராணுவத்திற்கு எதிராக கூறிய பொய்களைப் பார்க்காமல் இருந்தால், இதோ பாருங்கள்” எனக் குறிப்பிட்டு, Sri AV TV Network தனது X கணக்கில் காணொளியொன்றைப் பகிர்ந்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் அதற்கு முன்னர் இடம்பெற்ற கிளர்ச்சிகளின் போது காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் குடும்பங்களின் பிரதிநிதித்துவ அடையாளமாக மாறிய பெண்ணான சந்தியா எக்னெலிகொடவிற்கு 2017ஆம் ஆண்டு அமெரிக்காவின் சர்வதேச துணிச்சல்மிக்க பெண் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு அதிகாரிகள் ஏற்படுத்திய தடைகளைப் பொருட்படுத்தாமல், 80 தடவைகளுக்கும் மேலாக நீதிமன்றத்துக்குச் சென்று சந்தியா வெளிப்படுத்திய துணிச்சல், அவரை அந்த விருதிற்கு தேர்ந்தெடுப்பதற்கான காரணமாக அமைந்ததாக அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் தோமஸ் ஏ. ஷெனன் தெரிவித்திருந்தார்.