தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தினார்
Share
தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவரும் தகவல்கள் பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. “மின்கட்டண உயர்வு பொதுமக்களை பாதிக்காத வகையில் இருக்கும்” என்று எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அது வெறும் பெயரளவிலான உறுதிமொழியாக இல்லாமல் செயல்முறையிலும் உறுதி செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படாது என்று தொடர்ந்து கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது குடியிருப்புகளுக்கான கட்டண உயர்வை அரசே ஏற்றுக்கொண்டு, வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான கட்டணத்தை மட்டும் உயர்த்தும் அணுகுமுறை பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இது நேரடியாகவும் மறைமுகமாகவும் பொதுமக்களை பாதிக்கும் அபாயத்தை உருவாக்குகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. பல தொழில்துறைகளில் மின்சாரச் செலவு மொத்த உற்பத்திச் செலவில் 15% முதல் 35% வரை பங்காற்றுகிறது. கடந்த சில ஆண்டுகளில் பலமுறை உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தால் ஆயிரக்கணக்கான சிறு மற்றும் குறு தொழில்கள் உற்பத்திச் செலவு அதிகரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்களின் செலவு உயர்ந்தால் அதன் தாக்கம் நேரடியாக உணவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஜவுளி பொருட்கள், அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் விலை உயர்வாக வெளிப்படும். வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு இறுதியில் பொதுமக்கள் வாங்கும் பொருட்களின் விலையை உயர்த்தும் மறைமுக வரியாகவே அமையும். தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், தொழில்துறைக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் எந்தவொரு மின்கட்டண உயர்வும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியையே பாதிக்கும். மின்சார வாரியத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காக பொதுமக்கள் மற்றும் தொழில்துறையின் மீது சுமையை ஏற்றுவதற்குப் பதிலாக, மின்விநியோக இழப்புகளை குறைத்தல், வசூல் திறனை மேம்படுத்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரித்தல் மற்றும் நிர்வாகச் செலவுகளை கட்டுப்படுத்துதல் போன்ற மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும். எனவே, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை காரணம் காட்டி மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை முழுமையாக கைவிட்டு, பொதுமக்கள், சிறு வணிகர்கள், குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நலனை கருத்தில் கொண்டு மின்கட்டண உயர்வு இல்லாத கொள்கையை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மின்கட்டண உயர்வைத் தவிர்ப்பதே பொதுமக்களை விலைவாசி உயர்விலிருந்தும், தொழிலாளர்களை வேலை இழப்பிலிருந்தும், தொழில் துறையை நெருக்கடியிலிருந்தும் காப்பதற்கான சிறந்த வழியாகும் என்பதை தமிழக அரசு உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
















