தமிழர்களும் விலங்குகளும்! | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!
Share
ஒருபுறம் செம்மணியில் மனித குல நாகரீகத்திற்கு முரணாக, இன அழிப்பு என்றும் குற்றம் சாட்டத்தக்க விதத்தில் புதைக்கப்பட்ட மனிதர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படும் ஒரு நாட்டில், இன்னொரு புறம், விலங்குகளை பாதுகாப்பதற்கு மிக விரிவான நுட்பமான ஏற்பாடுகளைக் கொண்ட ஒரு சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.இது புதுவை இரத்தினதுரை பல ஆண்டுகளுக்கு நுண் எழுதிய பின்வரும் கவிதை வரிகளை ஞாபகப்படுத்தவில்லையா ?

” மான் சுட்டால் அன்றி
மரை சுட்டால், மயில் சுட்டால்
ஏன் என்று கேட்க இந்நாட்டில் சட்டமுண்டு
மாடடித்தல் கூட,மறைவான ஓரிடத்தில்
சாகடிக்க வேண்டுமெனச்
சட்டத்தில் இடமுண்டு.
கொக்குச் சுடுதல் குற்றம்
பயிரழித்து
திக்கெட்டும் நடந்து திரிகின்ற ஆனையினைச்
சுட்டால்,அது குற்றம்
‘சுதந்திர பூமியிலே’
சட்டம் இதற்கெல்லாம் தண்டிக்கும்;
தண்டிக்க வேண்டியதே.
நாய்பிடிக்கக்கூட நகரசபைக்காரர்கள்
நீ பிடிக்கலாமென்று நியமனங்கள் செய்துள்ளார்
மானுக்கு,மாட்டுக்கு
மரையோடு,மயிலுக்கு
ஆனைக்குக்கூட அனுதாபப்படும் நாட்டில்
மனித உயிர் மட்டும் மலிவு
மிக மலிவு.”
46ஆவது ஜூலை இன அழிப்பு நினைவுகளை தமிழ் மக்கள் கடந்துபோகும் ஒரு காலப் பின்னணியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேஷ தூதுக்குழு செம்மணிக்கு வருகை தந்த ஓர் அரசியல் சூழலில், செம்மணியில் அந்தத் தூதுக்குழு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு அறிந்திருக்கும் ஒரு பின்னணியில், செம்மணியில் மேலும் மேலும் கூடுகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்த எலும்புக்கூடுகளில் ஒன்று இருந்த நிலையில் காணப்பட்டது. இன்னொன்று மழைக்கு அணியும் ஜாக்கெட்டுடன் காணப்பட்டது. இவை எவற்றைக் காட்டுகின்றன என்றால், அங்கே மனிதர்களின் உடல்கள் உரிய மரியாதைகளோடு புதைக்கப்படவில்லை என்பதைத்தான்.
தமிழ் மக்களோ, சிங்கள மக்களோ, முஸ்லிம் மக்களோ, உடல்களைப் புதைக்கும் பொழுது இருந்த நிலையில் புதைப்பதில்லை. சமாதி அடைந்த சன்னியாசிகளைத்தான் இருந்த நிலையில் புதைப்பதுண்டு. மேலும் மழைக்கு அணியும் ஜாக்கெட்டுடன் பூத உடல்களை புதைப்பதில்லை. எந்த ஒரு மத நம்பிக்கையாக இருந்தாலும் அல்லது மத நம்பிக்கைகள் இல்லாத இறுதிச் சடங்குகளின் போதும் உடல்களுக்கு அவற்றுக்குரிய மரியாதை கொடுக்கப்படுவதே வழமை. உடல்களை அவற்றுக்குரிய மரியாதையான நிலையில் கிடத்தி,உறுப்புகளை நீட்டி நிமிர்த்தி ஒன்றில் எரிப்பார்கள் அல்லது புதைப்பார்கள்.
ஆனால் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் பெரும்பாலானவை அவ்வாறான மரியாதைகள் இன்றி புதைக்கப்பட்டிருக்கின்றன. அதுவே ஓர் இன அழிப்புதான். அதுவே ஒரு பண்பாட்டுப் போர்தான். அதைப் புதைத்தவர்களின் பண்பாட்டு வீழ்ச்சிதான்.
அதுமட்டுமல்ல,அது மனித குல நாகரிகத்தை அவமதிக்கும் ஒரு செயல். தமது சக மனிதரின் இறந்த உடலுக்கு அதாவது பூத உடலுக்கு மரியாதை கொடுப்பது,வணக்கம் செலுத்துவது என்பது மனிதர்களை ஏனைய விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுத்தும் விடையங்களில் ஒன்று. விலங்குகள் ஒரு சகவிலங்கு இறந்தால் ஒன்றில் அவற்றை உணவாக்கிக் கொள்ளும். அல்லது அவற்றை அப்படியே கைவிட்டுச் செல்லும்.இறந்த விலங்கின் உடல் புழுக்களுக்கும் பறவைகளுக்கும் இரையாகும்.
இறந்துபோன குட்டியின் உடலை தாய் விலங்கு சுற்றிசுற்றி வரக்கூடும். ஆனாலும் ஒரு கட்டத்தில் அது அதனை இயற்கையிடம் ஒப்படைத்துவிட்டு விலங்கு நகர்ந்து விடும். ஆனால் மனிதர்கள் இறந்த சக மனிதர்களை உரிய மரியாதை கொடுத்து புதைப்பார்கள். அல்லது தகனம் செய்வார்கள். சக மனிதரின் உடலுக்கு மரியாதை செய்வது என்பது மனித நாகரீகத்தின் தொடக்கப் புள்ளிகளில் ஒன்று.
ஆனால் செம்மணியில் பெரும்பாலான எலும்புக்கூடுகளை பொறுத்தவரை, அந்த நாகரீகம் பின்பற்றப்படவில்லை. மனிதர்கள் நாகரீகமாகப் புதைக்கப்படவில்லை. எந்த ஒரு மத நம்பிக்கையின் அடிப்படையிலும் அங்கே உடல் அடக்கம் செய்யப்படவில்லை என்பதைத்தான் அங்கு கிடைக்கும் எலும்புக்கூடுகள் நமக்கு உணர்த்துகின்றன.
இறந்த அல்லது கொல்லப்பட்டவர்களின் உடல்களை அவற்றுக்குரிய மரியாதையைக் கொடுக்காமல் புதைப்பது அல்லது எரிப்பது என்பது இன அழிப்பின் ஒரு பகுதிதான்.செம்மணியில் எடுக்கப்படும் எலும்புக்கூடுகள் இன அழிப்பின் ஆகப்பிந்திய சாட்சியங்களா?
இவ்வாறு செம்மணியில் உடல்கள் தாறுமாறாக எந்த மரியாதையுமின்றி மனித குல நாகரீக வளர்ச்சிகளுக்கு முரணாக,கண்டபடி புதைக்கப்பட்டிருப்பது வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், இலங்கை அரசாங்கம் விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய விலங்கு நலச் சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளது.
2026 ஜூலை 17ஆம் திகதியிட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தின் மூலம், விலங்குகள் மீது கருணை, தயவு மற்றும் சரியான கவனத்தைச் செலுத்துதல், அத்துடன் அவற்றின் பாதுகாப்பு, நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான புதிய சட்ட விதிகளை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. இச்சட்டமூலத்தின்படி விலங்குகளைப் பாதுகாப்பதற்கு பின்வரும் விடயப் பரப்புகளில் கவனம் செலுத்தப்படும்.
முதலாவதாக,விலங்கு நலன் என்பது விலங்குகளைத் தாக்காமல் இருப்பதுடன் மட்டுமல்ல. அவற்றுக்குத் தேவையான உணவு,சுத்தமான நீர் மற்றும் பொருத்தமான இருப்பிடத்தை வழங்குவதும் விலங்கு நலனின் அடிப்படை அம்சங்களாகக் கருதப்படுகின்றன. அதற்கமைய,விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல், அவற்றுக்குரிய இருப்பிடத்தை வழங்காதிருத்தல், அளவுக்கு அதிகமாக வேலை வாங்குதல், தகுதியற்ற விலங்குகளை வேலைக்கு ஈடுபடுத்துதல் அல்லது ஏனைய செயற்பாடுகள் அல்லது செய்யத் தவறுதல்கள் மூலம் தேவையற்ற வலி அல்லது துன்பத்தை ஏற்படுத்துவதைத் தடை செய்ய இச்சட்டமூலம் முன்மொழிகிறது.
இரண்டாவதாக,விலங்குகளுக்கு வேண்டுமென்றே செய்யப்படும் கொடூரச் செயல்கள் மட்டுமன்றி, அவற்றை உரிய விதத்தில் பராமரிக்காமல் விடுவதையும் சட்டப்படி குற்றமாக்கும் விதத்தில் இந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, விலங்குகளைக் கொடுமைப்படுத்துவது தொடர்பாகக் குற்றவாளியாகக் காணப்படும் ஒருவருக்கு ரூபா 250,000 இற்கு மிகையாத அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது இவ்விரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
மூன்றாவதாக,விலங்கொன்றைக் கொடூரமான முறையில் கொல்வது தொடர்பாகக் குற்றவாளியாகும் ஒருவருக்கு ரூபா 500,000இற்கு குறையாத அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இவ்விரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம் என்றும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாலாவதாக, செல்லப்பிராணிகளை வளர்த்துவிட்டுப் பின்னர் அவற்றைக் கைவிடுவது தொடர்பிலும் புதிய சட்டமூலம் கவனம் செலுத்தியுள்ளது.நோயுற்ற அல்லது ஊனமுற்ற விலங்குகளைப் பொது இடங்களில் இறக்க விடுவது, விலங்குகளைக் கைவிடுவது மற்றும் அவற்றுக்குத் தேவையான சிகிச்சைகள் கிடைக்காமல் விடுவது போன்ற செயல்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஐந்தாவதாக, சட்டவிரோதமான முறையில் விலங்குகளைக் கருத்தடை செய்தல் மற்றும் தகுதியற்ற நபர்களால் விலங்குகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தல் தொடர்பிலும் புதிய சட்டமூலம் கவனம் செலுத்தியுள்ளது
ஆறாவதாக,விலங்குகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் சண்டைகள், விலங்குகளுக்குக் காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் வேட்டை விளையாட்டுகள் மற்றும் விலங்குகளுக்கு இடையேயான சண்டைகளை நடத்துதல் போன்ற செயற்பாடுகளும் புதிய சட்டங்களின் கீழ் தடை செய்ய முன்மொழியப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல், நிர்வகித்தல், அதற்காக வசதிகளைச் செய்து கொடுத்தல் அல்லது விளம்பரம் செய்தல் என்பனவும் குற்றமாகக் கருதப்படவுள்ளது.
ஏழாவதாக,விலங்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லும்போது அவற்றுக்குத் தேவையற்ற வலி, துன்பம், காயம் அல்லது விபத்து ஏற்படாதவாறு செயற்பட வேண்டும் என்ற புதிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது. அவ்விதிகளை மீறும் நபர்களுக்கு ரூபா 300,000 இற்கு குறையாத அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மிகையாத சிறைத்தண்டனை அல்லது இவ்விரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
எட்டாவதாக, செல்லப்பிராணி விற்பனை நிலையங்களுக்கு மற்றும் செல்லப்பிராணிகளைப் பெருகச் செய்யும் (இனப்பெருக்க) நிலையங்களுக்கு அனுமதிப் பத்திர முறைமையை அறிமுகப்படுத்தவும் புதிய சட்டமூலம் முன்மொழிகிறது. இதன் மூலம் விலங்கு வர்த்தகம் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான செயற்பாடுகளை முறைப்படுத்தும் வாய்ப்புப் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட அம்சங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டிருக்கும் சட்டமூலத்தின் விதிகளைப் பரிசீலித்து பொருத்தமான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக, 2025 டிசம்பர் 29 ஆம் திகதியிட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில் விலங்கு நலன் தொடர்பான இறுதிச் சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு 2026 மே18ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சட்ட வரைஞருக்கு அறிவுறுத்தப்பட்டது.அதற்கமைய, சட்ட வரைஞரால் விலங்கு நலச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்குச் சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து,குறித்த சட்ட மூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்ட பின்னர் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பெட்டிக்குள் காணப்பெறும் புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிதையை மீண்டும் ஒரு தடவை படித்துப் பாருங்கள்! அப்போது இந்த கட்டுரையின் உட்பொருள் விளங்கும்















