தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி சென்றனர்
Share
தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி சென்றனர். தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மீது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. மேலும் சக தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி தன்னிச்சையாக முடிவுகள் எடுத்ததாக வெளியான குற்றச்சாட்டில், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி), கம்யூனிஸ்ட் கட்சிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் பல்வேறு மாணவர், இளைஞர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி சென்றனர். இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பேரணியானது தேர்தல் ஆணையம் செல்லும் வழியில் நாடாளுமன்ற சாலையில் நிதி ஆயோக் அருகே தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் மீது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பலரும் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் காவல்துறையின் தடையை மீறி, ஆகாஷ்வாணி பவனுக்குள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நுழைந்து வானொலி அலுவலகத்துக்குள் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தைத் நடத்தி வருகின்றனர். இங்கிருந்து தேர்தல் ஆணையத்திற்குச் செல்ல ராகுல் காந்தி, பிரியங்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான இந்த போராட்டத்தால் டில்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.















