திமுக தயவில் தமிழக வெற்றி கழக ஆட்சியென மு.க. ஸ்டாலின் பேசினார்
Share
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கஜா (எ) கஜேந்திரன் தலைமையில் மாற்றுக்கட்சியினர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர். பின்னர் உரையாற்றிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது,
75 ஆண்டு காலம் தன்னுடைய லட்சியப் பயணத்தைத் தொடர்ந்து நடத்தி, பவள விழா கொண்டாடி இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். எப்போதுமே ஒரு இயக்கத்தில் இருந்து இன்னொரு இயக்கத்திற்குப் பிரிந்து போகிறார்கள் என்று சொன்னால், ஏதோ ஒரு லாபத்தை அடிப்படையாக வைத்து, ஏதோ வசதியை மனதில் கொண்டு, ஆளுங்கட்சியை நோக்கித்தான் அதிகமாகப் போவது உண்டு. அதைத்தான் நாமும் பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு தி.மு.க. ஆளுங்கட்சி அல்ல ஆளுங்கட்சியாக இருந்து, இப்போது எதிர்க்கட்சியாக மாறி இருக்கிறது. அதனால் எதிர்க்கட்சியை நோக்கி நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால், பதவிக்காக நீங்கள் வரவில்லை, சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காக நீங்கள் எல்லாம் வரவில்லை. பணியாற்ற வேண்டும், இந்த இயக்கத்திற்குத் துணை நிற்க வேண்டும், தமிழ் சமுதாயத்திற்கு நாம் பாடுபட வேண்டும், இழந்திருக்கும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு வந்திருக்கிறீர்கள். தி.மு.க.வினுடைய வரலாறு என்பது, 1949-இல் தொடங்கி, அதற்குப் பிறகு நடைபெற்ற 1952-இல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சொன்னாலும், 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றோம். அதற்குப் பிறகு, 1962-இல் தேர்தல் களத்தில் ஈடுபட்டு, நாம் எதிர்க்கட்சி வரிசையில் இடம்பெறும் அளவிற்கு 50 இடங்களில் அன்றைக்கு வெற்றி பெற்றோம். அதற்குப் பின்னால் 1967-இல் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றோம். அண்ணா மறைவிற்குப் பிறகு, கலைஞர் அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணியாற்றினார். அதற்குப் பிறகு 1971-இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றோம். 1971-இல் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில்தான், 1975-இல் இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அந்த நெருக்கடி நிலையை நாம் எதிர்த்தோம். அந்த நெருக்கடி நிலையை எதிர்த்தால் ஆட்சி பறிபோகும் என்பதைத் தெரிந்தே எதிர்த்தோம். நாம் கவலைப்படவில்லை. கலைஞர் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், “ஆட்சி நமக்கு முக்கியமல்ல, ஜனநாயகம் தான் நமக்கு முக்கியம்” என்று கருதி, அந்த நெருக்கடி நிலையை எதிர்த்து, சென்னை கடற்கரையில் லட்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி, தீர்மானம் போட்டு அன்றைக்கு நிறைவேற்றினார்கள். “நெருக்கடி நிலையை ரத்து செய்யுங்கள்; கைது செய்து சிறையில் வைத்திருக்கும் தலைவர்களை எல்லாம் உடனடியாக விடுதலை செய்யுங்கள்” என்று தீர்மானம் போட்டார்கள். அந்தத் தீர்மானம் போட்ட காரணத்தால், 1976-ஆம் ஆண்டு நம்முடைய ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்குப் பிறகு 13 ஆண்டு காலம் நாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வர முடியவில்லை. மீண்டும் 1989-இல் ஆட்சிக்கு வந்தோம். 1991-இல், இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு தி.மு.க. துணை நிற்கிறது என்ற ஒரு பிரச்சாரத்தை நடத்தி, அதற்காக நம்முடைய ஆட்சியைப் கலைத்தார்கள். அதற்குப் பிறகு 1996-இல் நாம் ஆட்சிக்கு வந்தோம். அதற்குப் பிறகு 2001-இல் நடைபெற்ற தேர்தலில் தோற்றோம். 2006-இல் ஆட்சிக்கு வந்தோம். 2011-இல் தோற்றோம். அதற்குப் பிறகு 2021-இல் ஆட்சிக்கு வந்தோம். இதை எதற்காக நான் சொல்கிறேன் என்று சொன்னால், வெற்றி தோல்வி என்பது நம்மைப் பொறுத்தவரையில் மாறி மாறி வரும். அதற்காக வெற்றியைக் கண்டு வெறி கொண்டு அலைந்து கொண்டிருப்பதும் இல்லை; தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் என்றைக்கும் பணியாற்றக் கூடியவன்தான் தி.மு.க.காரன் என்பதை இன்றைக்கு நாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில் தான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. ஏனென்றால், நாம் வெற்றி பெற வேண்டும்; தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்; எதிர்க்கட்சிகள் எல்லாம் தோற்க வேண்டும் என்ற நிலையில் தான் நாம் தேர்தல் களத்தைச் சந்தித்தோம். நம்முடைய கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று கருதி நம்மோடு கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களே பல இடங்களில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் சொல்லிவிட்டுச் செல்லுகிற நேரத்தில் நான் சொன்னேன், “நீங்கள் செல்லுங்கள்; உங்களுடைய விருப்பம்; உங்களுக்கு இருக்கும் ஜனநாயகம்; நான் தடுக்க மாட்டேன். நாட்டிலே ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது; அதன் மூலமாக பி.ஜே.பி. ஆட்சி தமிழ்நாட்டில் வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் தான் அவர்களை நான் வழியனுப்பி வைத்தேன்.” எனவே, நம்முடைய தயவோடு நடைபெறும் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த நிகழ்ச்சியில் உறுதி எடுப்போம். என தெரிவித்தார்.
















