தென் கொரியாவில் நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்தார்
Share
தென் கொரியாவின் கியோஜே நகரில் பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக நிலச்சரிவில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தென் கொரியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கியோஜே பகுதியில் சில மணி நேரங்களிலேயே 500 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவானது. இந்த அதீத மழையினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, மலைப்பகுதி பலவீனமடைந்தது. இதையடுத்து ஒக்போ-டோங் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியில் இருந்து சரிந்து விழுந்த டன் கணக்கிலான மண் மற்றும் பெரும் பாறைகள், மலையடிவாரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது விழுந்து, அந்த கட்டிடத்தின் முதல் தளம் வரை முழுமையாக மூழ்கடித்தன. இந்த அதிர்ச்சி தரும் விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசர மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதிநவீன கருவிகள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாலும், அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.















