LOADING

Type to search

இந்திய அரசியல்

தொகுதி மறுசீரமைப்பு: கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்! – திருமாவளவன்

Share

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; ‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுகிறோம்’ என்ற பெயரில் தொகுதி மறு சீரமைப்பு சட்ட மசோதாவைத் தந்திரமாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துகிறது. மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதில் எவருக்கும் மறுப்பில்லை. 33 சதவீதத்துக்குப் பதிலாக 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு 2023 ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றிவிட்டது. அதன்படி 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலேயே மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், “அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பைச் செய்து, தொகுதி மறு சீரமைப்பை முடித்த பின்பு தான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நடைமுறைக்கு வரும்” என மத்திய பாஜக அரசு தீர்மானித்தது. இப்போது திடுமென ‘மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கப் போகிறோம்’ என அறிவித்து, அதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உண்மையிலேயே பாஜகவுக்கு அக்கறை இருந்தால் தற்போது உள்ள நாடாளுமன்ற எண்ணிக்கைக்குள்ளேயும், சட்டமன்றங்களின் எண்ணிக்கைக்குள்ளேயும் அதை வழங்கலாம். ஆனால், அதற்காக சட்டத்திருத்த மசோதா கொண்டு வருகிறோம் என்று கூறிக்கொண்டு, இந்தியா முழுவதும் தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கும்; நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கும்; இதற்கென தொகுதி மறு சீரமைப்பு ஆணையம் ஒன்றை அமைப்பதற்கும் சட்ட மசோதாக்களை பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின் போது அடுத்ததாக 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் எனக் கூறப்பட்டது. 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தால் 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2031 ஆம் ஆண்டில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் பிறகு தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த சட்டத்துக்கு மாறாக இப்போதே தொகுதி மறுசீரமைப்புச் செய்வதற்கு பாஜக அரசு முயற்சிக்கிறது. அதற்கு அடிப்படையாக 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வைத்துக் கொள்ளலாம் என அது முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. நாடாளுமன்றத் தொகுதிகளை 850 ஆக உயர்த்தும்போது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை உயரும். அது எதன் அடிப்படையில் உயர்த்தப்படும் என்பதை இதுவரை மத்திய அரசு தெளிவாகக் கூறவில்லை. பாஜக அமைச்சர்கள் சொல்வதையும், தற்போது வெளியாகியுள்ள சட்ட மசோதாக்களையும் பார்க்கும்போது 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் எனத் தெரிகிறது. அவ்வாறு செய்தால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களும்; ஒடிசா, மேற்குவங்கம் முதலான மாநிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்படும். இப்போது தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்து போனால் அதன் பின்னர் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு மதிப்பும் இல்லாமல் போய்விடும். எனவே இந்த கொடிய முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை தமிழ்நாட்டில் உள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து நாடு முழுவதும் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதை விடுதலைச் சிறுத்தைகள் வழிமொழிகிறது. தொகுதி மறு சீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 16.4.2026 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் தமிழ்நாடு முழுவதும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும். கட்சி அலுவலகத்திலும், தமது வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.